உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

உணவுப் பதப்படுத்துதலுக்கான டிஜிட்டல் இந்தியா - இத்தாலி வர்த்தகக் கூட்டத்தில் பேசிய திருமதி. ஹர்சிம்ரத் கவுர், உணவுப் பதப்படுத்துதல் துறையில் உருவாகி வரும் போக்குகள் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார்

Posted On: 15 JUL 2020 6:01PM by PIB Chennai

மெய்நிகர் முறையில் நடைபெற்ற உணவுப்பதப்படுத்துதலுக்கான டிஜிட்டல் இந்தியா - இத்தாலி வர்த்தகக் கூட்டத்தின் தொடக்க அமர்வில் மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திருமதி. ஹர்சிம்ரத் கவுர் இன்று பேசினார். இணைய மாநாடுகள், தொழில் கண்காட்சி மற்றும் வர்த்தகக் கூட்டங்கள் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் நடைபெறுகின்றன.

 

தற்போதைய சூழலில் உணவுப் பதப்படுத்துதல் துறையின் பங்களிப்பைக் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர், தொழில் சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் பல உணவுப்பதப்படுத்துதல் நிறுவனங்கள் பல்வகைப்படுத்தலையும், தங்களது பொருள் வரிசையை விரிவுப்படுத்தவும் முயற்சிப்பதாக தெரிவித்தார். பல்வேறு பொருள் வகைகளைத் தயாரிக்கக்கூடிய, தங்களது தொழிற்சாலைகளில் பெரிய மாற்றங்கள் செய்யத் தேவையில்லாத பன்முகத்தன்மைக் கொண்ட கருவிகள் விரும்பத்தக்கதாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். எனவே, தங்களது உலகாளவிய வீச்சை விரிவுபடுத்திக் கொள்ள இத்தாலிய உணவு மற்றும் கருவிகள் சார்ந்த தொழில் நிறுவனங்கள் இந்தியச் சந்தைகளில் நிறைய எதிர்பார்க்கலாம் என்று அவர் தெரிவித்தார். உணவுப் பதப்படுத்துதல் துறையைப் பொருத்தமட்டில் இந்தியாவும், இத்தாலியும் இயற்கையான பங்குதாரர்கள் என்று மேலும் கூறிய அவர், ஐரோப்பிய யூனியனில் இந்திய மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் இத்தாலியும் ஒன்று என்று குறிப்பிட்டார்.

 

துறை ரீதியான டிஜிட்டல் வர்த்தகக் கூட்டங்களைப் பற்றி பேசிய அமைச்சர், இந்த டிஜிட்டல் கூட்டத்தில் பங்குபெற்றுள்ள 23 இத்தாலி நிறுவனங்கள் தங்களது பொருள்கள் மற்றும் சேவைகளின் மெய்நிகர் கண்காட்சியை வைத்துள்ளதாகவும், இறுதிப் பயனர்களிடமும், இந்தியாவில் உள்ள இதர தொழில் சார்ந்தவர்களுடனும் தொழில்முறை சந்திப்புகளை நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பால், பால் பதப்படுத்துதல், கட்டுதல், குப்பிக்குள் அடைத்தல் ஆகிய முக்கிய தலைப்புகளில் கூட்டங்கள் மற்றும் இணையக் கருத்தரங்குகள் விரிந்திருக்கும் என்றும் ,மிகப்பெரிய உணவுப் பூங்காக்களில் உள்ள நிறுவனங்களுடன் தொழில் கூட்டணிகளை உருவாக்கிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளிலும் உள்ள சங்கங்கள் இணைந்து செயல்படுவதால் நிறுவனங்கள் ரீதியான இணைப்பும் உறுதி செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

***


(Release ID: 1638981) Visitor Counter : 184