குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பசுமை மற்றும் நிலையான கட்டடக்கலையைப் பின்பற்றுமாறு குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தல்
Posted On:
11 JUL 2020 12:19PM by PIB Chennai
நாட்டிலுள்ள கட்டடக்கலை நிபுணர்கள் பசுமைக் கட்டடக்கலையை மேம்படுத்தி, அதைப் பின்பற்ற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையாநாயுடு வலியுறுத்தியுள்ளார். இனி மேற்கொள்ளக்கூடிய கட்டுமானத் திட்டங்களில் சூரிய மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஐஐஏ நாட்கான் 2020 – மேம்பாடு என்னும் இந்தியக் கட்டடக்கலைஞர்கள் நிறுவனத்தின் தேசிய மாநாட்டின் தொடக்க நிகழ்வில், காணொளிக்காட்சி மூலம் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், எந்தக் கட்டுமானத்திலும் அழகியலுக்கும், நிலைத்தன்மைக்கும் இடையே சரியான சமன்பாட்டை உருவாக்குவது அவசியம் என்று வலியுறுத்தினார்.
சிந்துசமவெளி நாகரிகம் முதல் நவீனகால கோனார்க் சூரியக்கோவில் வரை இந்தியக் கட்டடக்கலையின் பரிணாமத்தை சுட்டிக்காட்டிய திரு. நாயுடு, உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருள்கள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட பல நினைவுச் சின்னங்களின் பிறப்பிடமாக நமது நாடு திகழ்கிறது என்றார்.
தன்னிறைவு, நெகிழ்வுத்தன்மை, உள்ளார்ந்த கட்டடக்கலையை உருவாக்குவது பற்றிக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், இந்தியாவின் பலதரப்பட்ட கட்டடக்கலைகளின் வடிவமைப்பு, அம்சங்களை முன்மாதிரியாகக் கொண்டு, அந்தப் பாரம்பரிய மரபை, சுற்றுச்சூழலுக்கு உகந்த, மக்களுக்கு அவசியமான, பொருத்தமான சிறந்தவற்றை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பொலிவுறு நகரங்கள், அனைவருக்கும் வீட்டுவசதி போன்ற அரசின் முக்கியமான திட்டங்கள் குறித்துப் பாராட்டிய திரு. நாயுடு, இந்தத் திட்டங்களில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நவீன நடைமுறையுடன் வசதிகளை அளிப்பதற்குக் கட்டடக்கலை நிபுணர்கள் முன்னுரிமை அளிக்குமாறு அவர் வலியுறுத்தினார். “இருப்பிடத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதுடன், வசதியையும், பாதுகாப்பையும் அளிக்கும் வகையில், கட்டட அமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்’’ என அவர் வலியுறுத்தினார்.
“தொற்றைச் சமாளிப்பதுடன் அதன் பின்னர் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் வகையில், கட்டடக்கலை வல்லுநர்கள் புதிய சிந்தனைகளுக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, வடிவமைப்பு எல்லை குறித்த உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டார்.
****
(Release ID: 1637965)
Visitor Counter : 238