மத்திய அமைச்சரவை

உஜ்வாலா திட்டப்பயனாளிகள் 01.07.2020 முதல் மூன்று மாதங்களுக்கு ‘’பிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டப்’’ பயன்களை பெறுவதற்கான காலத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 08 JUL 2020 4:27PM by PIB Chennai

“பிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டத்தின் பயன்களை உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு  01.07.2020 முதல் மேலும் மூன்று மாதங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், காலநீட்டிப்பு செய்யும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் உத்தேச முடிவுக்கு புதுதில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஏழைகள் மற்றும் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சிரமத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரிவினருக்கு உணவுப் பாதுகாப்பு வழங்கும் வகையில், “பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்னத் திட்டம்’’ மத்திய அரசால் நிவாரணத் தொகுப்பாக அறிவிக்கப்பட்டது. பிரதமர் உஜ்வாலா திட்டதின் கீழ், சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள ஏழைக் குடும்பங்களுக்கும் இந்தத் தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டதின் கீழ், பயனாளிகளுக்கு 01.04.2020 முதல் மூன்று மாதங்களுக்கு இலவச எரிவாயு உருளைகள் வழங்கத் திட்டமிடப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், ஏப்ரல் முதல் ஜூன் வரை ரூ.9709.86 கோடி பயனாளிகளின்   வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளன. 11.97 கோடி எரிவாயு உருளைகள் இத்திட்டப் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மேலும் நீண்ட காலத்துக்கு இது தேவைப்படுகிறது.

இத்திட்டத்தை ஆய்வு செய்த போது,  உஜ்வாலா திட்டப் பயனாளிகளில் ஒரு பிரிவினர், இத்திட்டக் காலத்திற்குள் வங்கியில் செலுத்தப்பட்ட அட்வான்ஸ் தொகையை எரிவாயு உருளை வாங்குவதற்கு  பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது. எனவே, இத்திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது, இன்னும் எரிவாயு உருளை வாங்காதவர்களுக்குப் பயனளிக்கும். எனவே, வங்கிக் கணக்குகளுக்கு ஏற்கனவே மாற்றப்பட்ட முன்பணத் தொகையை இலவச எரிவாயு உருளை பெறுவதற்கு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை  பயன்படுத்திக் கொள்ளலாம்.

*******


(Release ID: 1637483) Visitor Counter : 202