மத்திய அமைச்சரவை

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - 2020 ஜூலையில் இருந்து நவம்பர் வரையிலான மேலும் ஐந்து மாதங்களுக்கு கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்கீடு

Posted On: 08 JUL 2020 4:21PM by PIB Chennai

கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து பொருளாதார மீட்சி நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக அறிவிக்கப்பட்ட பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தை மேலும் நீட்டிப்பு செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்தியத் தொகுப்பில் இருந்து மேலும் ஐந்து மாதங்களுக்கு, அதாவது ஜூலையில் இருந்து நவம்பர் மாதம் வரையில் கூடுதல் உணவு தானியங்கள் வழங்க ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

     நாட்டில் கோவிட்-19 நோய்த் தாக்குதலைத் தொடர்ந்து பொருளாதார தடங்கல்கள் ஏற்பட்டு ஏழைகள் சிரமங்களை சந்தித்த நிலையில், அவர்களுக்கு உதவி செய்வதற்காக `பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தை' மத்திய அரசு 2020 மார்ச் மாதம் அறிவித்தது. `பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம்' மூலம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-இன் (National Food Security Act, 2013 - NFSA) கீழ் பயன்பெறும் 81 கோடி பேருக்கு ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு தலா 5 கிலோ என்ற அளவில் உணவு தானியம் (அரிசி அல்லது கோதுமை) இலவசமாக கூடுதலாக வழங்கப்படுகிறது. எனவே பாதிப்புக்கு ஆளாகும் நிலையில் உள்ள குடும்பங்கள் / பயனாளிகள் மற்றும் ஏழைகளுக்கு எந்த நிதி சிரமமும் இல்லாமல் உணவு தானியங்கள் கிடைக்க வகை செய்யப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் முதலில் ஏப்ரல், மே, ஜூன் என மூன்று மாதங்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக அளிக்கப்பட்டன.

     இருந்தபோதிலும், ஏழைகளுக்கும், உதவி தேவைப்படும் நிலையில் உள்ளவர்களுக்கும் தொடர்ந்து உதவிட வேண்டிய அவசியம் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த 5 மாதங்களுக்கு, அதாவது 2020 ஜூலை முதல் நவம்பர் மாதம் வரையில் இத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னர் இத் திட்டத்தின் கீழ் 30/03/2020 தேதியிட்ட உத்தரவின்படி உணவு வழங்கல் மற்றும் பொது விநியோகத் துறை, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு விநியோகம் செய்ய, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 120 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்தது.  அதன்படி, இத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்ய, இந்திய உணவுக் கழகம் மற்றும் இதர மாநில முகமைகள் 116.5 லட்சம் மெட்ரிக் டன் (97%) அளவுக்கு உணவு தானியங்களை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது. இதுவரையில் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில், ஒட்டுமொத்தமாக 108 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு (ஒதுக்கீட்டில் 89%) விநியோகம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளன.  இதுவரையில் ஏப்ரல் மாதத்தில் 74.3 கோடி பயனாளிகளுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன.  மே மாதத்தில் 74.75 கோடி பயனாளிகளுக்கும், ஜூன் மாதத்தில் 64.72 கோடி பயனாளிகளுக்கும் இந்த கூடுதல் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது வழக்கமான உணவுப்பாதுகாப்பு சட்ட ஒதுக்கீட்டு உணவு தானியங்களைவிட கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விநியோகம் பூர்த்தியானதும், விநியோகம் குறித்த தகவல்கள் சேர்க்கப்படும். சில கிராமங்களில், சேமிப்புக் கிடங்கு வசதி இல்லாத காரணத்தால் இத் திட்டத்தின் கீழான உணவு தானியங்களை இரண்டு அல்லது மூன்று மாத ஒதுக்கீடுகளை ஒரே தவணையில் விநியோகம் செய்துள்ளன.

உணவுப்பாதுகாப்பு சட்ட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் வழக்கமான விநியோகம் மற்றும் பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 252 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் தன்னுடைய செயலூக்கம் கொண்ட கட்டமைப்பின் மூலம் நாடு முழுக்க அனுப்பி வைத்தது. தொலைவில் உள்ள, எளிதில் அணுக முடியாத பகுதிகளுக்கு விமானம் மற்றும் நீர்வழிப் பாதைகள் மூலமாக தொடர்ந்து உணவு தானியங்களை அனுப்பி வைத்து, பயனாளிகளுக்கு உரிய காலத்தில் அவை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முழு முடக்கநிலை அமலில் இருந்த காலத்திலும் உணவு தானியங்கள் வழங்கல் சங்கிலித் தொடர்கள் வெகு சிறப்பாக செயல்பாட்டில் இருக்கும்படி பார்த்துக் கொண்டதுடன், உணவுப்பாதுகாப்பு சட்டம் மற்றும் கரீப் கல்யாண் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு உணவு தானியங்கள் தடையின்றி கிடைப்பதை இந்திய உணவுக் கழகமும், உணவுப் பொருள் விநியோகத் துறையும் உறுதி செய்தன. மேலும், தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்த பொது விநியோகத் துறை சீர்திருத்தங்களாக, டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மொத்தம் உள்ள 5.4 லட்சம் நியாயவிலைக் கடைகளில் 4.88 லட்சம் கடைகள் (90.3%) இதில் சேர்க்கப்பட்டன. குறித்த இலக்கில் கவனம் செலுத்தும் பொது விநியோக நடைமுறை மற்றும் வழங்கல் சங்கிலித் தொடர் மேலாண்மையில் இறுதி நிலை வரை கணினிமயமாக்கல் உறுதி செய்யப்பட்டது. சோதனையான காலகட்டங்களில் பயோமெட்ரிக் அத்தாட்சி முறையில் பல மாநிலங்களில் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்ட போதிலும், இந்தத் தொழில்நுட்ப வசதி சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

 கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே-ஜூன் மாதங்களில் இந்தத் துறை உணவுப்பாதுகாப்பு சட்ட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 130.2 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்தது. அதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் சுமார் 123 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு (95%) உணவு தானியங்களைப் பெற்றுக் கொண்டன.  2020 ஏப்ரல்-மே-ஜூன் என அதே காலக்கட்டத்தில், அதே எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு 252 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை (உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 132 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 120 லட்சம் மெட்ரிக் டன்) ஒதுக்கீடு செய்தது. அதில் 247 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கும் அதிகமான அளவு உணவு தானியங்கள் பெறப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் உணவுப்பாதுகாப்பு சட்டப் பயனாளிகளுக்கு 226 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கான உணவு தானியங்கள் கடந்த மூன்று மாதங்களில் விநியோகிக்கப் பட்டுள்ளன. உதவி தேவைப்படும் நிலையில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக, இயல்பைவிட ஏறத்தாழ இரு மடங்கு அளவுக்கு உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டதை இது காட்டுகிறது.

இப்போது 2020 நவம்பர் வரையில் மேலும் 5 மாதங்களுக்கு பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதால், அதே செயல் ஊக்கம் மிக்க உணவு தானியங்கள் வழங்கல் மற்றும் விநியோக நடைமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும். இதனால் விலை மற்றும் விநியோக வகையில் கூடுதலாக ரூ.76062 கோடி அளவுக்கு செலவு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

                                                       --------



(Release ID: 1637477) Visitor Counter : 230