உள்துறை அமைச்சகம்

இரண்டாவது முடக்கநிலையை முடிவுக்குக் கொண்டுவர மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகள் வெளியீடு

Posted On: 29 JUN 2020 9:28PM by PIB Chennai

கொவிட்-19 பரவல் மண்டலங்களுக்கு வெளியேயுள்ள பகுதிகளில் இரண்டாவது முடக்கநிலைக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அதை பொது பயன்பாட்டிற்கு திறப்பதற்கான புதிய நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து பெற்ற கருத்துக்கள் தொடர்புடைய மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புதிய நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

     பரவல் மண்டலங்களுக்கு புறத்தே உள்ள வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஷாப்பிங் மால்கள்,  ஆகியவற்றை ஜூன் 8-ம் தேதி முதல் அனுமதிப்பதற்கான நெறிமுறைகள் மே 30-ம் தேதி வெளியிடப்பட்டன.

     2-வது முடக்க நிலைக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய நெறிமுறைகளின் முக்கிய அம்சங்களாவன :

  • வரையறைக்குட்பட்ட முறையில் உள்நாட்டு விமானங்கள் மற்றும் பயணியர் ரயில்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த செயல்பாடுகள் சீராக விரிவுபடுத்தப்படும்.
  • இரவு நேர ஊரடங்கும் மேலும் தளர்த்தப்பட்டுள்ளது, இது இரவு பத்து மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரை அமலில் இருக்கும். தொழிற்கூடங்களில் பல்முறை ஷிப்டுகள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சரக்கு மற்றும் ஆட்கள் போக்குவரத்து, சரக்கு ஏற்றி இறக்கும் பணிகள், பேருந்துகள். ரயில்கள் மற்றும் விமானங்களிலிருந்து இறங்கும் பயணிகள் தமது இடங்களை சென்றடைவதற்கான வசதி ஆகிய பல்வேறு செயல்பாடுகளுக்கு இது வழிவகுக்கும்.
  • கடைகளின் பரப்பளவைப் பொறுத்து, ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கும் அதிகமாக இருக்கலாம். அதே சமயத்தில் போதுமான சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • மத்திய மற்றும் மாநில அரசுகளின் பயிற்சி நிறுவனங்கள் ஜூலை 15-ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை ஜூலை 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
  • வந்தே பாரத் இயக்கத்தின் கீழ், சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து, வரையறைக்குட்பட்ட முறையில் அனுமதிக்கப்படும். இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
  • மெட்ரோ ரயிலுக்கும், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், கலையரங்கள், கூட்ட அரங்குகள், ஆகிய இடங்களுக்கும் சமூக / அரசியல் / விளையாட்டுகள் / பொழுதுபோக்கு / கல்வி / கலாச்சாரம் / சமய நிகழ்ச்சிகள் மற்றும் பிற பெரிய அளவிலான கூடுகைகள் – இவை அனைத்தையும் தவிர பிற அனைத்து செயல்பாடுகளுக்கும் பரவல் மண்டலங்களுக்கு வெளியே அனுமதி அளிக்கப்படும்.
  • ஜூலை 31-ம் தேதி வரை பரவல் மண்டலங்களில், முடக்கநிலை தொடர்ந்து அமலில் இருக்கும்.
  • பரவல் மண்டலங்களில் நடைபெறும் செயல்பாடுகளை, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கடுமையாகக் கண்காணித்து, இந்த மண்டலங்களுக்கான நெறிமுறைகளைத் தீவிரமாக செயல்படுத்தும்.
  • பரவல் மண்டலங்களுக்கு வெளியே, சில செயல்பாடுகளை அனுமதிப்பது மற்றும் தடுப்பது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பான விஷயங்களில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், நிலைமையை மதிப்பீடு செய்து முடிவெடுக்கலாம்.
  • மாநிலங்களுக்குள்ளேயும், மாநிலங்களுக்கு வெளியேயும், மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்கு போக்குவரத்துக்கும், எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இதற்கென, தனியாக அனுமதியோ, ஒப்புதலோ வாங்க வேண்டியது அவசியமில்லை.
  • இரவு பத்து மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.
  • கொவிட் -19 நிர்வாகம் தொடர்பான தேசிய நெறிமுறைகள் நாடு முழுக்க தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.
  • 65 வயதைக் கடந்தவர்கள், உடல்நலக் கோளாறுகள் இருப்பவர்கள், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர்கள் வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • ஆரோக்கிய சேது செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நெறிமுறைகளைக் காண : https://static.pib.gov.in/WriteReadData/userfiles/guideline_mha.pdf

-----



(Release ID: 1635292) Visitor Counter : 289