குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பாதிப்புக்குள்ளாகியுள்ள குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு உதவ மற்றொரு நிதியுதவித் திட்டம் தொடக்கம்.
Posted On:
24 JUN 2020 4:32PM by PIB Chennai
குறு, சிறு, நடுந்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இன்று அத்துறை சார்ந்த குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ‘’குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான துன்புறும் சொத்துக்கள் நிதி - துணைக்கடன்’’ என்றும் இது வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ்,ரூ.20,000 கோடி மதிப்பிலான உத்தரவாதம் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும். தங்கள் தொழிலுக்குத் தேவையான மறுமூலதனத்துக்கு இதைப் பயன்படுத்தி இந்தத் தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெறலாம்.
பாதிப்புக்குள்ளாகி இருக்கும் குறு,சிறு,நடுத்தரத் தொழில்கள் கடனாகவோ, பங்குகளாகவோ மூலதனம் திரட்டுவது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது உணரப்பட்டது. ஆகவே, சுயசார்பு இந்தியா சலுகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சர் மே மாதம் 13-ஆம் தேதி இத்தொழில் நிறுவனங்கள் துணைக் கடன் பெறும் இத்திட்டத்தை அறிவித்தார். பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல், நிதியமைச்சகம், இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பிற அமைப்புகளுடனான ஆலோசனை போன்ற சம்பிரதாய நடைமுறைகள் முடிவடைந்த பின்னர், அமைச்சர் திரு. நிதின் கட்கரி நாக்பூரிலிருந்து இந்தத் திட்டத்தை இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு;
- 2020 ஏப்ரல் 30-ஆம்தேதி நிலவரப்படி, பாதிப்புக்குள்ளாகி, வாராக்கடன் நிலைமைக்கு தள்ளப்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை இயக்க அதன் உரிமையாளர்களுக்கு ஆதரவுக்கரம் வழங்க இத்திட்டம் கோருகிறது;
- குற், சிறு, நடுத்தரத் தொழில் முனைவோருக்கு அவர்களது பங்குகளில் (பங்கு மற்றும் கடன்) 15 சதவீத அளவுக்கு இணையாகவோ அல்லது ரூ.75 லட்சமோ இதில் எது குறைவோ அது கடனாக வழங்கப்படும்;
- உரிமையாளர்கள் இதனைத் தங்கள் தொழிலகத்தின் பங்குத் தொகையாக அளித்து, தொழில் நடத்துவதற்கான தொகையை அதிகரித்து கடன்-பங்கு விகிதத்தைப் பராமரிக்க வேண்டும்;
- இத்திட்டத்தின் கீழ் 90 சதவீதம் உத்தரவாதம் இந்தத் துணைக் கடனுக்கு வழங்கப்படும். எஞ்சிய 10 சதவீத உத்தரவாதத்தை உரிமையாளர்கள் அளிக்க வேண்டும்;
- 7 ஆண்டுகள் வரை அசலைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. அதே சமயம், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்சக் கால அவகாசம் 10 ஆண்டுகளாகும்.
இத்திட்டம் சுமார் 2 லட்சம் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் தேவையான ஆதரவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இத்துறையின் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் புத்துயிர் ஊட்ட இது உதவும். இத்தொழில்களை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இது உதவும். இத்திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த இத்துறை தொழில்முனைவோர் எந்த வணிக வங்கிகளையும் அணுகி, பயன் பெறலாம். குறு, சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான விதிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இது மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்படும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக திரு. நிதின் கட்கரி, பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் இந்த நிகழ்ச்சியின் போது நன்றி தெரிவித்தார்.
--------
(Release ID: 1633954)
Visitor Counter : 327