ஆயுஷ்
ஆறாவது சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் டிஜிட்டல் தளங்கள் வழியாகக் கொண்டாடப்பட்டது.
Posted On:
21 JUN 2020 11:31AM by PIB Chennai
ஆறாவது சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் டிஜிட்டல் தளங்கள், மின் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் மூலமாக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. யோகா தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி குடும்ப இணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு யோகா ஆற்றும் பங்கு குறித்து அடிக்கோடிட்டுக் காட்டினார். குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவரையும் மேலும் நெருக்கமாகி, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் யோகா இணைக்கும் என்று அவர் கூறினார். இதனால்தான் இந்த ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்தில் “குடும்பத்துடன் யோகா” என்பது கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
கோவிட்-19 நோய் மனித உடலின் நுரையீரல் தொடர்பான உறுப்புகளை குறிப்பாக பாதிக்கிறது என்றும், சுவாச அமைப்பை வலுப்படுத்த பிராணாயாமம் உதவும் என்றும் பிரதமர் கூறினார். “நம்முடைய உடல் நலம், நம்பிக்கை ஆகியவற்றை சீர் செய்து கொண்டால், மனிதகுலம் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் வாழும் நாளை உலகம் காண்பது வெகு தொலைவில் இல்லை. இதை உருவாக்குவதற்கு யோகா நமக்கு உதவும்”.
தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, சர்வதேச யோகா தினத்தில் பலர் கூடுவது உகந்ததல்ல இதை மனதில் கொண்டு, மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து தங்கள் இல்லங்களிலேயே யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று அரசு ஊக்குவித்தது. இது தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் சமூக டிஜிட்டல் ஊடகத் தளங்களை, மக்கள் ஆன்லைனில் பங்கேற்க வசதியாக அதிகபட்சமாகப் பயன்படுத்த வகை செய்தது.
சர்வதேச யோகா தினம் மிகப் பெரிய மக்கள் உடல்நல இயக்கமாக உருவெடுத்துள்ளதாக ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியுள்ளா.ர் இப்போது உலகில் ஒவ்வொரு நாடும், சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுகிறது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பின்பற்றும் வகையில் மக்கள் இந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர். சுகாதார நெருக்கடி நிலை நிலவும் இந்த சமயத்தில், இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஆயுஷ் அமைச்சகம் கடந்த மூன்று மாதங்களாகவே யோகா பயிற்சியை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், ஹைபிரிட் ஆன்லைன் முயற்சிகள் மூலமாகவும் மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்து யோகா பயில வசதி செய்து கொடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார். யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரதமர் திரு.நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட “என் வாழ்க்கை என் யோகா” என்ற வீடியோ பிளாகிங் போட்டிக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
மொரார்ஜி தேசாய் தேசிய யோகா அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள், யோகா விதிமுறைகள் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை அளித்தனர். யோகா நிபுணர்கள், யோகா தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதித்தனர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அனைத்து அலைவரிசைகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது
***
(Release ID: 1633119)
Visitor Counter : 279