பிரதமர் அலுவலகம்
வர்த்தக ரீதியாக தோண்டப்படவுள்ள நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏல நடவடிக்கையை பிரதமர் தொடங்கி வைத்தார்
நிலக்கரி மற்றும் சுரங்கத்துறைகளை போட்டி, மூலதனம், பங்கேற்பு மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகள் நிறைந்தவையாக மாற்ற மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது : பிரதமர்
நிலக்கரித் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள், இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள், பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சிக்கான தூண்களாக அமையும் : பிரதமர்
சுரங்கம் மற்றும் தாதுக்கள் துறை வலுவாக இருந்தால் தான் சுயசார்பு என்பது சாத்தியமாகும் : பிரதமர்
Posted On:
18 JUN 2020 2:19PM by PIB Chennai
நாட்டில் உள்ள 41 நிலக்கரிச் சுரங்கங்களை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதற்கான ஏல நடவடிக்கைகளை, பிரதமர் திரு.நரேந்திரமோடி, புதுதில்லியிலிருந்து இன்று காணொளிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளின் ஒரு பகுதியாக இந்த ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நிலக்கரித்துறை, இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து, நிலக்கரிச் சுரங்க ஏல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இரண்டு கட்ட மின்னணு முறையிலான ஏல நடவடிக்கை மூலம், நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு.நரேந்திரமோடி, கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டுவரும் என்றும், இந்த நெருக்கடியை,நாட்டிற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளும் என்றும் தெரிவித்தார். இந்தியா, சுயசார்பு நிலையை அடைய வேண்டியதன் அவசியத்தை இந்த நெருக்கடி நமக்கு உணர்த்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சுயசார்பு இந்தியா என்பது, இறக்குமதிகளை சார்ந்திருப்பதைக் குறைப்பதுடன், இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியையும் சேமிக்கிறது எனவும் அவர் விளக்கமளித்தார். இறக்குமதிகளை நம்பியிருக்காமல், நாட்டிற்குத் தேவையான வளங்களை, உள்நாட்டிலேயே உருவாக்கிக் கொள்வதும் சுயசார்பு இந்தியா திட்டத்தின் நோக்கம் என்று அவர் கூறினார். தற்போது நாம் இறக்குமதி செய்துவரும் பொருள்களை, பெருமளவிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அர்த்தம் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இந்த லட்சியத்தை அடைய, ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு பொருள், தலா ஒரு சேவையை மனதில் கொண்டு முழுமையாக பாடுபட வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், இதன் மூலம் தான் சம்பந்தப்பட்ட துறையில், இந்தியா சுயசார்பு அடைய முடியும் என்றார். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாபெரும் நடவடிக்கை, எரிசக்தித் துறையில் இந்தியாவை தற்சார்பு அடையச் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி, நிலக்கரித்துறையில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மட்டும் அல்லாமல், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதன் தொடக்கமாக அமையும் என்றும் அவர் கூறினார். இன்றைய ஏல நடைமுறை, நிலக்கரித்துறையை வர்த்தக ரீதியான துறையாக மாற்றுவதோடு, பன்னெடுங்காலமாக நீடித்துவந்த கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகின் நான்காவது பெரிய நிலக்கரி இருப்பைக் கொண்டுள்ள இந்தியா, இரண்டாவது பெரிய நிலக்கரி உற்பத்தியாளராக உள்ள நிலையில், அதிகளவில் நிலக்கரி இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக இருப்பது தான் வேதனைக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை பன்னெடுங்காலமாக நீடித்து வந்ததை எடுத்துரைத்த அவர், கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்படாத சுரங்கங்களின் வலையில் சிக்கிக் கொண்டிருந்ததாகவும் கூறினார். போட்டி மற்றும் வெளிப்படைத்தன்மையிலிருந்து விடுபட்டிருந்ததே இத்துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக, நிலக்கரித் துறை, போதிய முதலீடுகளின்றியும், செயல்திறனை வெளிப்படுத்த முடியாமலும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நிலக்கரித் துறைக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகத்தான் 2014-இல் நிலக்கரி இணைப்புத் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டதாக, பிரதமர் குறிப்பிட்டார். நிலக்கரி மற்றும் சுரங்கத்துறைகளை அதிகப் போட்டி, கூடுதல் மூலதனம், பங்கேற்பு மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகள் மிகுந்தவையாக மாற்றுவதென்ற முக்கிய முடிவை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சுரங்கத்தொழிலில் புதிதாக ஈடுபடுவோருக்கு, நிதித் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியப் பொருளாதாரத்தின் இரண்டு முக்கியத் தூண்களாகத் திகழும் நிலக்கரி மற்றும் சுரங்கத் துறைகளை வலுவானதாக்காமல், நாடு சுயசார்பு நிலையை எட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய சீர்திருத்தங்கள் காரணமாக, நிலக்கரி உற்பத்தியும், ஒட்டுமொத்த நிலக்கரித் துறையும் தற்சார்பு நிலையை எட்டும் என்றும் பிரதமர் கூறினார். தற்போது, நிலக்கரித்துறை போட்டிக்குரியதாக மாற்றப்பட்டிருப்பதால், எந்தத் துறையும் தமது தேவைக்கேற்ப நிலக்கரியை வாங்கிக் கொள்ளலாம். இந்தச் சீர்திருத்தங்கள், நிலக்கரித்துறைக்கு மட்டுமின்றி, எஃகு, அலுமினியம், உரம் மற்றும் சிமென்ட் தொழில் துறைக்கும் பலனளிக்கும். அத்துடன், மின்சார உற்பத்தியை அதிகரிக்கவும் இது உதவும்.
இரும்பு, பாக்ஸைட், மற்றும் பிற தாதுக்கள், நிலக்கரி சுரங்கங்களுக்கு அருகிலேயே பெருமளவில் இருப்பதால், நிலக்கரித்துறை சீர்திருத்தங்கள் மற்ற தாதுத் துறைகளுக்கும் வலிமை சேர்ப்பதாக அமையும் என்று பிரதமர் குறிப்பிட்டார். நிலக்கரிச் சுரங்கங்களை வர்த்தக ரீதியாக ஏலத்தில் விடத் தொடங்கியிருப்பது, சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்துறையினருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் அவர் கூறினார். இதன் மூலம், மாநில அரசுகளுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், நாட்டிலுள்ள ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். ஒவ்வொரு துறையிலும் சாதகமான விளைவுகள் ஏற்படும்.
நிலக்கரித் துறையில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் வேளையில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதென்ற இந்தியாவின் உறுதிப்பாடு எந்தவகையிலும் குறைந்துவிடாது என்றும் பிரதமர் தெரிவித்தார். “நிலக்கரியிலிருந்து எரிவாயு தயாரிப்பதற்கான நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், நிலக்கரி வாயு உற்பத்தி செய்வதன் மூலம், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். நிலக்கரி வாயு, போக்குவரத்துக்கும், சமையலுக்கும் பயன்படுவதுடன், உரம் மற்றும் எஃகு போன்றவை உற்பத்தித் தொழில்துறைகைளையும் மேம்படுத்தும்.” 2030-ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை எரிவாயுவாக மாற்ற அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இதற்கென நான்கு திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
நிலக்கரித் துறை சீர்திருத்தங்கள், நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களிலும், பழங்குடியினர் பகுதிகளிலும், வளர்ச்சிக்கான தூணாகத் திகழும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் பகுதிகளில் தான், திட்டமிட்ட வளர்ச்சி மற்றும் வளத்தை எட்ட முடியாத, வளர்ச்சியை அடையத் துடிக்கும் விருப்பம் கொண்டுள்ள ஏராளமான மாவட்டங்கள் இருப்பதாக அவர் கூறினார். வளர்ச்சியை விரும்பும் 16 மாவட்டங்களில் மட்டுமே பெருமளவுக்கு நிலக்கரி இருப்பு உள்ள போதிலும், இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், போதிய பலனை அடைய முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு தேடி, தொலைதூரங்களுக்கு இடம்பெயரும் நிலையும் உள்ளதாகக் கூறினார்.
நிலக்கரிச் சுரங்கங்களை வணிகமயமாக்கும் நடவடிக்கைகளால், கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் உள்ள மக்களுக்கு, தங்களது வசிப்பிடத்திற்கு அருகிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க உதவிகரமாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். நிலக்கரி வெட்டியெடுத்தல் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்காக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு செலவிட அரசு முடிவு செய்திருப்பததாகவும், இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
நிலக்கரித் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களும், முதலீடுகளும், பழங்குடியினரின் வாழ்க்கையை எளிதாக்குவதில் முக்கியமான பங்கினை வகிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். நிலக்கரி உற்பத்தி மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய், அந்தப் பகுதி மக்களின் நலனுக்காக செலவிடப்படும். மாவட்ட தாது நிதியிலிருன்நது மாநிலங்களுக்குத் தொடர்ந்து உதவி கிடைக்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்த நிதியின் பெரும்பகுதி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.
பொருளாதார நடவடிக்கைகள் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த ஏலமுறை தொடங்கப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். பயன்பாடும், தேவையும் கோவிட்-19க்கு முன்பிருந்த நிலையை எட்டி வருகின்றன. மின்சார உபயோகம், பெட்ரோலியப் பொருள்களின் தேவை, இ-வே பில்கள், சுங்கக் கட்டண வசூல், ரயில்வே சரக்குப் போக்குவரத்து, டிஜிட்டல் சில்லறை விற்பனைப் பரிமாற்றம் போன்ற துறைகள், கோவிட்-19க்கு முன்பிருந்த நிலையை வேகமாக எட்டி வருவதாகவும் அவர் பட்டியலிட்டார்.
கிராமப்புறப் பொருளாதாரமும், முன்னேற்றமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். குறுவை சாகுபடிப் பரப்பு மற்றும் கோதுமை கொள்முதல் அளவும் இந்தாண்டு அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இது, விவசாயிகளிடம் பணப்புழக்கம் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. அனைத்து அறிகுறிகளும், இந்தியப் பொருளாதாரம் மீண்டெழுந்து, முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றன.
தற்போது சந்திப்பதைவிட மிகப்பெரிய நெருக்கடிகளை இதற்கு முன்பு சந்தித்துள்ள இந்தியா, தற்போதைய நெருக்கடியிலிருந்தும் விடுபடும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியா சுயசார்பு நிலையை எட்டுவதுடன், நாடு வெற்றிகளையும், வளர்ச்சியையும் அடைய இருப்பது உறுதி என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். சில வாரங்களுக்கு முன்பு வரை என்-95 முகக்கவசங்கள், கொரோனா பரிசோதனைக் கருவிகள், முழு உடல் கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்களுக்கு எவ்வளவு தேவை இருந்தது, இறக்குமதி மூலமே இந்தத் தேவைகளை பூர்த்தி செய்தோம் என்று குறிப்பிட்ட அவர், தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், இந்தப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தியா, விரைவில் மருத்துவ சாதன ஏற்றுமதியில் முக்கிய நாடாகத் திகழும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். எனவே, மக்கள் நம்பிக்கை மற்றும் மனஉறுதியுடன் இருந்தால், சுயசார்பு நிலையை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
*****
(Release ID: 1632502)
Visitor Counter : 379
Read this release in:
Bengali
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada