பிரதமர் அலுவலகம்

இந்தியா-சீனா எல்லைப்பகுதிகளின் நிலவரம் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை

Posted On: 17 JUN 2020 3:35PM by PIB Chennai

நண்பர்களே,

கல்வாண் பள்ளத்தாக்குப் பகுதியில் நமது தாய்மண்ணைப் பாதுகாக்கும் பணியின்போது, இந்திய தாயின் வீரமகன்கள், மாபெரும் தியாகம் செய்துள்ளனர்.

நாட்டுக்காக சேவையாற்றும் போது மிகப்பெரும் தியாகத்தை செய்துள்ள அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். எனது இதயங்கனிந்த மரியாதையை அவர்களுக்கு செலுத்துகிறேன்.

இந்த மிகப்பெரும் சோகத்தில், தியாகிகளின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் உள்ளது. நாட்டின் அனுதாபம் உங்களுடன் உள்ளது.

நமது தியாகிகளின் மாபெரும் தியாகம், வீணாகிவிடாது.

எந்தமாதிரியான நிலைமை மற்றும் சூழ்நிலை இருந்தாலும், நாட்டின் நிலப்பகுதியின் ஒவ்வொரு அங்குலத்தையும் இந்தியா உறுதியாக பாதுகாக்கும். அதேபோல, தனது சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்காது.

கலாச்சார ரீதியாக அமைதியை விரும்பும் நாடாக இந்தியா உள்ளது. நமது வரலாறும், அமைதி விரும்பும் நாடு என்பதையே காட்டுகிறது.

இந்தியாவின் கொள்கை மந்திரம் என்பது - लोकाः समस्ताः सुखिनों भवन्तु। எந்தவொரு காலகட்டத்திலும், ஒட்டுமொத்த உலகம் மற்றும் மனிதசமூகத்தின் அமைதி மற்றும் நலனையே விரும்பினோம்.

நமது அண்டை நாடுகளுடன் எப்போதுமே ஒருங்கிணைந்தும், நட்புரீதியாகவும் நெருங்கிப் பணியாற்றியுள்ளோம். அவர்களின் மேம்பாடு மற்றும் நலனை எப்போதுமே விரும்பியுள்ளோம்.

எப்போதெல்லாம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம், இந்த வேறுபாடுகள் பிரச்சினையாக மாறிவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

யாரையும் நாம் தூண்டிவிட்டதில்லை. எனினும், நமது நாட்டின் நல்லிணக்கம் மற்றும் இறையாண்மையில் சமரசம் செய்து கொண்டதில்லை. தேவைப்படும்போதெல்லாம், நமது பலத்தை வெளிப்படுத்தியுள்ளோம். நாட்டின் நல்லிணக்கம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பது மற்றும் உறுதிப்படுத்துவதற்கு நமது திறமையை நிரூபித்துள்ளோம்.

நமது தேசத்தின் தன்மையில் ஒரு அங்கமாக தியாகமும், சகிப்புத் தன்மையும் உள்ளது. அதேநேரத்தில், வீரமும், திறமையும் கூட அதற்கு இணையாக பங்கு வகிக்கிறது.

நமது வீரர்கள் வெளிப்படுத்திய தியாகம் வீணாகிவிடாது என்று நாட்டுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.

இந்தியாவின் நல்லிணக்கமும், இறையாண்மையுமே நமக்கு முதன்மையானது. இதனைப் பாதுகாப்பதிலிருந்து நம்மை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

இதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் தேவையில்லை. இந்தியா அமைதியை விரும்புகிறது. எனினும், அத்துமீறல்கள் ஏற்படும்போது, இந்தியா உரிய பதிலடி கொடுக்கும்.

போராடிக் கொண்டிருந்தபோது, நமது வீரர்கள் உயிர்துறந்தனர் என்பதை அறிந்து நாடு பெருமைப்படுகிறது. இரண்டு நிமிடம் மவுனத்தை கடைபிடித்து இந்த மகன்களுக்கு மரியாதை செலுத்துமாறு உங்கள் அனைவரையும் நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

******



(Release ID: 1632293) Visitor Counter : 297