இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் செயல்பாட்டை மேம்படுத்த ஏதுவாக, கேலோ இந்தியா உயர்சிறப்பு மாநில மையங்களை அமைக்க மத்திய விளையாட்டுத்துறை நடவடிக்கை: திரு.கிரண் ரிஜிஜு

Posted On: 17 JUN 2020 11:06AM by PIB Chennai

மத்திய அரசின் விளையாட்டுத்துறை, தனது முன்னோடித் திட்டமான, கேலோ இந்தியா திட்டத்தின்கீழ்,  கேலோ இந்தியா உயர்சிறப்பு மாநில மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.   நாடு முழுவதும்  வலுவான விளையாட்டுச் சூழலை உருவாக்கும் நோக்கில்,  ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும், தலா ஒரு ,  கேலோ இந்தியா உயர்சிறப்பு மாநில மையங்களை அமைக்க அடையாளம் காணப்பட்டுள்ளது.   முதற்கட்டமமாக,  கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஒடிஷா மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து உட்பட எட்டு மாநிலங்களில், அரசுக்குச் சொந்தமான விளையாட்டு அரங்கங்களை மத்திய விளையாட்டுத்துறை அடையாளம் கண்டுள்ளது.  இந்த விளையாட்டு அரங்கங்கள், கேலோ இந்திய உயர்சிறப்பு மாநில மையங்களாக மேம்படுத்தப்பட உள்ளன. 

மாநிலங்களில் விளையாட்டுக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான இந்த புதிய முன்முயற்சி பற்றிக் குறிப்பிட்ட மத்திய  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.கிரண் ரிஜிஜு,    “ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் வெற்றிவாய்ப்புகளை அதிகரிக்க ஏதுவாக,  கேலோ இந்தியா உயர்சிறப்பு மாநில மையங்கள் அமைக்கப்பட உள்ளது” என்றார்.   இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உலகத்தரம்வாய்ந்த  விளையாட்டுப் பயிற்சி மையங்களுக்கான  கட்டமைப்புகளை உருவாக்கும் விதமாகவும், நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள்  தாங்கள் சிறந்து விளங்கும் விளையாட்டுகளில் இந்த மையங்களுக்கு வந்து பயிற்சிபெறுவதை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.  அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழு, இந்த இடங்களில் உள்ள வசதிகளை விரிவாக ஆராய்ந்த பிறகே இந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீரர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, உரிய பயிற்சி அளித்து,  தலைசிறந்த தடகள வீரர்-வீராங்கனைகளாக பயிற்சி அளித்து,  ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட அனைத்து பெரிய சர்வதேச போட்டிகளிலும் நாட்டின் சார்பில் பங்கேற்று பதக்கம் பெறக்கூடிய வீரர்களை உருவாக்குவதற்கு, இது ஒரு சரியான நடவடிக்கை ”  என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.  

இந்த விளையாட்டு மையங்களை தேர்வு செய்யும் பணி, அக்டோபர், 2019-லியே தொடங்கிவிட்டது, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமும், அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைசிறந்த விளையாட்டு மையங்கள், விளையாட்டு அமைப்புகள் அல்லது தகுதிவாய்ந்த முகமைகளை அடையாளம் காண்பதுடன்,  அவற்றை உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுப் பயிற்சி மையங்களாக மேம்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.   இதுவரை வரப்பெற்ற 15 பரிந்துரைகள் ஆராயப்பட்டு, முன்னுரிமை விளையாட்டுகளுக்கான பயிற்சி வசதிகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் உருவாக்கப்பட்ட சாம்பியன்கள் போன்றவற்றின் அடிப்படையில்,  8 மையங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.     

தற்போதுள்ள விளையாட்டு மையங்களை கேலோ இந்தியா உயர்சிறப்பு மாநில மையங்களாக மேம்படுத்த ஏதுவாக, இந்த மையங்களில் பயிற்சிபெறும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பரீதியாக ஆதரவு அளிக்கும் வகையில்,  ‘இடைவெளியைப் போக்குவதற்கான நம்பகமான நிதியுதவியை’   அரசு வழங்குவதோடு,  விளையாட்டு உபகரணங்கள், நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும்  பணியில் சிறப்பு வாய்ந்த மேலாளர்கள் நியமனத்தில் உள்ள இடைவெளியும் பூர்த்தி செய்யப்படும்.   இந்த மையங்களில், மற்ற விளையாட்டுகள் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் போதிலும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காகவே, இந்த சிறப்பு மையங்களை ஏற்படுத்த, அரசு ஆதரவு அளித்து வருகிறது. 

மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகள் இந்தப் பயிற்சி மையங்களை நிர்வகிப்பதோடு, இவற்றை உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுப் பயிற்சி மைங்களாகவும் மேம்படுத்தும்.   உணவு, தங்குமிடம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து வகையான பொறுப்பும் அந்தந்த மாநில / யூனியன் பிரதேச அரசுகளையே சார்ந்தது ஆகும்.   நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்கள்,  துணைப் பணியாளர்கள், பயிற்சி சாதனங்கள், கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒத்துழைப்புக்குரிய நிதித் தேவைகள், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.  

விரிவான ஆய்வுக்குப் பிறகு, இந்த எட்டு மையங்களுக்கும் தேவையான நிதியுதவி வழங்கப்படும்.   திறமை வாய்ந்த விளையாட்டு வீரர் – வீராங்களைகளை,  அந்தந்த மாநில / யூனியன் பிரதேச அரசுகளே தேர்வுசெய்து, அந்த பயிற்சி மையத்திற்கு கிடைக்கும் நிதியுதவி மூலம், அவர்களது திறமைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.   தடகள வீரர் – வீராங்கனைகளின் செயல்பாட்டை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதை உறுதி செய்வதற்கான  நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளர்கள்,  நிதியுதவி மற்றும் கண்காணிப்பு முறைகளை இந்திய விளையாட்டு ஆணையம் வழங்கும்.   

**********


(Release ID: 1632054) Visitor Counter : 208