பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கோவிட்-19 காலத்தில் குறைகள் தீர்க்கப்பட்டது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்கான அழைப்பு மையத்தைத் தொடங்கி வைத்து குடிமக்களுடன் நேரில் கலந்துரையாடினார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங்.

Posted On: 15 JUN 2020 4:22PM by PIB Chennai

பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டது குறித்த தகவல்களைப் பெறுவதற்கான அழைப்பு மையத்தை மத்தியப் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் திரு.ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான கோவிட்-19 தேசியக் கண்காணிப்பு மூலம், குறைகள் தீர்க்கப்பட்ட குடிமக்களுடன் மத்திய அமைச்சர் நேரில் கலந்துரையாடினார். இதுவரை கோவிட்-19 தொடர்பான பொதுமக்களின் ஒரு லட்சம் குறைகளுக்கு மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தீர்வு கண்டுள்ளதற்கு டாக்டர்.ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்தார். “சாதாரண மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு அதிக அளவிலான  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு பிரதமர் மோடியின் தலைமை ஊக்குவித்து வருகிறது,” என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

கோவிட்-19 பரவல் காலத்தில் குறைகளைத் தெரிவித்த குடிமக்களுடன் மூத்த அமைச்சர் ஒருவர் உரையாடுவது இதுவே முதல் முறையாகும். இது பொது மக்களின் குறைகளை சிறப்பான முறையில் தீர்ப்பதுடன், மக்களிடம் கருத்துக்களைப் பெறும் வழிமுறையையும் செயல்படுத்த மற்ற மத்திய அமைச்சர்களுக்கு வழியை ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்காக பிஎஸ்என்எல்-லுடன் இணைந்து அழைப்பு மையங்களை புவனேஷ்வர், குவஹாத்தி, ஜாம்ஷெத்பூர், வதோதரா, அகமதாபாத், லக்னோ, அஜ்மீர், குண்டூர், கோயம்புத்தூர், குண்டாகல் ஆகிய பகுதிகளில் மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயல்படுத்துகிறது. இதில், 1,406 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த மையங்கள் மூலம், மார்ச் 30, 2020 முதல் மே 30, 2020 வரையான காலத்தில் மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பில் பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 தொடர்பான 1.28 லட்சம் பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டது குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும். இந்த மையங்களில் பணியாற்றுவோர் கேட்க வேண்டிய கேள்விகள் குறித்த தேவையான பயிற்சிகள், ஜூன் 9-10, 2020-இல் நிறைவடைந்தது. இந்த மையங்கள், இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, கன்னடம், கொங்கனி, மலையாளம், தமிழ், தெலுங்கு, ஒரியா, பெங்காளி, அசாமி மற்றும் ராஜஸ்தானி மொழிகளில் செயல்படும்.

இந்த நிகழ்ச்சியில், கோவிட்-19 தேசியக் கண்காணிப்பு மையத்தில் மூன்று நாட்களுக்குள் குறைகள் தீர்க்கப்பட்ட 4 பேருடன் டாக்டர். ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார். டாக்டர். ஜிதேந்திர சிங்குடன் கலந்துரையாடியவர்களில் முதலாவதாக, கர்நாடகாவின் பிஜாப்பூர் பகுதியைச் சேர்ந்த திருமதி.ரேணுகா வி.பரசப்பாகோல், கனரா வங்கியிலிருந்து பணம் திரும்ப வரவேண்டும் என்று கோரியிருந்தார். இந்தக் குறையை நிதிச்சேவைகள் துறை தீர்த்து வைத்தது. இரண்டாவதாக, முதிர்ச்சியடைந்த மாதாந்திர வருவாய் திட்ட முதலீட்டுத் தொகையைத் திரும்ப வழங்கவேண்டும் என்று குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதிவாசி திரு.கோர்தன்பாய் ஜெதாபாய் விடுத்த கோரிக்கையை அஞ்சல்துறை தீர்த்து வைத்தது. மூன்றாவதாக, தனது மகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மூலம் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த திரு.லட்சுமிநாராயணன் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை எய்ம்ஸ் மருத்துவமனை தீர்த்து வைத்தது. நான்காவதாக, சென்னையைச் சேர்ந்த திரு.மிரிதின் ஜெயன், சேமிப்புகளை மாதாந்திர தவணைகளாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று மனுவில் கொடுத்திருந்த கோரிக்கையை அஞ்சல்துறை ஏற்றுக் கொண்டது. பொதுமக்கள் குறைதீர்ப்புக்கான கோவிட்-19 தேசியக் கண்காணிப்பு மையம் குறித்து அமைச்சர் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகள் மற்றும் அறிக்கைகள் மூலம் அறிந்து கொண்டதாகவும், குறைகளை உரிய நேரத்தில் தீர்த்து வைத்த அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் டாக்டர்.ஜிதேந்திர சிங்கிடம் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்.ஜிதேந்திர சிங், இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, மத்திய பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பில் பெருமளவில் சீர்திருத்தங்கள் மற்றும் ஆளுமையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், இந்தியாவில் குறைகளைத் தீர்ப்பதில் விரிவான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதிக அளவில் குறை தீர் மனுக்களைப் பெறும் 20 அமைச்சகங்கள்/துறைகளில் குறைகளைத் தீர்ப்பதற்கான கடைசி கட்ட அதிகாரிகளை நியமித்தது, மத்திய பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு மையத்துடன் மாநில/யூனியன் பிரதேசங்களின் குறை தீர் வலைதளங்களை ஒருங்கிணைத்தது மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான அழைப்பு மையங்கள் அமைத்தது உள்ளிட்ட மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்திய குடிமக்களை மேம்படுத்தும் வகையில், டிஜிட்டல் உலக வாய்ப்புகளை கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். நெருக்கடி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை வரும் நாட்களிலும் மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொது மக்களின் குறைகளை வெற்றிகரமாக தீர்வு கண்டது குறித்த விவரங்களை தொகுத்து வெளியிட வேண்டும் என்று நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையை டாக்டர்.ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார். இதனை வெளியிடுவதன் மூலம், தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசு ஆர்வமுடன் உள்ளது என்ற நம்பிக்கையை குடிமக்கள் மத்தியில் நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.(Release ID: 1631740) Visitor Counter : 15