மத்திய அமைச்சரவை

இந்தியாவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமைச்சகங்கள் / துறைகளில் ``செயலாளர்களின் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு (EGoS) மற்றும் திட்ட மேம்பாட்டு செல்கள் (PDCகள்)’’ உருவாக்க அரசு ஒப்புதல்.

Posted On: 03 JUN 2020 5:08PM by PIB Chennai

இந்தியாவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகளில் ``செயலாளர்களின் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு (EGoS) மற்றும் திட்ட மேம்பாட்டு செல்கள் (PDCகள்)'' உருவாக்க, பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  2024-25ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான பொருளாதார நாடாக உருவாக்குவது என்ற லட்சிய உயர்நோக்கத்தை அடைவதற்கு உதவக் கூடியதாக புதிய நடைமுறை அமையும்.

உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு பலமான ஆதரவு அளிக்கும் வகையிலான முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி, பல மடங்கு அளவுக்குப் பொருளாதாரத்தை உயர்த்துவது என்று அரசு உறுதிபூண்டுள்ளது. அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் முதலீடு மற்றும் அதுதொடர்பான ஊக்கமளிப்புக் கொள்கைகள் குறித்த விஷயங்களில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான, ஒருங்கிணைந்த அணுகுமுறையை அமல் செய்வதற்கு  தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை (Department for Promotion of Industry and Internal Trade - DPIIT) உத்தேசித்துள்ளது.

இப்போதைய கோவிட்-19 நோய்த் தொற்றுச் சூழ்நிலையில், புதிய நாடுகளில் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து, ஆபத்து வாய்ப்புகளைக் குறைத்துக் கொள்ள விரும்பும் பெரிய நிறுவனங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. மேலும், பல வகையான பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பது, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா மற்றும் பிற நாடுகளில் பெரிய சந்தைகளில் வரவேற்பைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும். உலக மதிப்புச் சங்கிலியில் பெரிய பங்கு வகிப்பவர்களுடன் சேருவதற்கான வாய்ப்பை இந்தியாவுக்கு உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வசதிகள் செய்து தருவதற்கும், பொருளாதாரத்தில் முக்கிய துறைகளில் வளர்ச்சிக்கு உத்வேகம் தருவதற்கும், பின்வரும் அமைப்பு முறை மற்றும் நோக்கங்களுடன் செயலாளர்களின் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு (EGoS) உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது:

 

 • அமைச்சரவைச் செயலாளர் (தலைவர்)
 • தலைமைச் செயல் அதிகாரி, நிதி ஆயோக் (உறுப்பினர்)
 • செயலாளர், தொழில்  மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை (உறுப்பினர் குழுத் தலைவர்)
 • செயலர், வணிகத் துறை (உறுப்பினர்)
 • செயலர், வருவாய்த் துறை (உறுப்பினர்)
 • செயலர், பொருளாதார விவகாரங்கள் (உறுப்பினர்)
 • தொடர்புடைய துறையின் செயலர் (குழுவால் சேர்க்கப்பட வேண்டும்)

 

EGoS நோக்கங்கள்:

 • பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்கள் இடையே ஒருங்கிணைப்பை உருவாக்கி, உரிய காலத்தில் அனுமதிகள் கிடைப்பதை உறுதி செய்தல்.
 • இந்தியாவுக்கு அதிக முதலீடுகளை ஈர்த்து, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு ஆதரவு அளித்து, வசதிகளை ஏற்படுத்தித் தருதல்.
 • இலக்கு நிர்ணயித்து முதல்நிலை முதலீட்டாளர்களின் முதலீடுகளைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்து, ஒட்டுமொத்த முதலீட்டுச் சூழலில் கொள்கை ஸ்திரத்தன்மை, நடைமுறைகளுக்கான உத்தரவாதத்தை உருவாக்குதல்.
 • இலாகாக்கள் மூலம் (i) திட்ட உருவாக்கம், (ii) கிடைக்கும் உண்மையான முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை மதிப்பிடுதல். மேலும், அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவால் பல்வேறு படிநிலைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்த இலாகாக்களுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்படும்.

 

மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் ஒருங்கிணைப்புடன் முதலீட்டுக்கு உகந்த திட்டங்களை உருவாக்குவதல் மற்றும் அதன் மூலம், இந்தியாவில் முதலீட்டுக்கு உகந்த திட்டங்களின் வளர்ச்சிக்கான பாதையை உருவாக்குதல், அதன் மூலம் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரித்தலுக்கு `திட்ட மேம்பாட்டு செல் (PDC)' அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதலீட்டுக்கு உகந்த திட்டங்கள் சிந்தனையாக்கம், செயல் திட்டமாக்கல், அமல் செய்தல் மற்றும் தகவலைப் பரவச் செய்தல் ஆகியவற்றை பணிகளாகக் கொண்ட PDC-யின் பொறுப்பு நிலையில் செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ், தொடர்புடைய மத்திய அமைச்சகத்தின் இணைச் செயலர் அந்தஸ்துக்குக் குறையாத ஓர் அதிகாரியைக் கொண்டதாக இது செயல்படும்.

 

PDC அமைப்பு பின்வரும் விஷயங்களை நோக்கங்களாகக் கொண்டு செயல்படும்:

 • முதலீட்டாளர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில், அனைத்து அனுமதிகளுடன், ஒதுக்குவதற்கான நிலம் மற்றும் முழுமையான விரிவான திட்ட அறிக்கைகளுடன் கூடிய செயல் திட்டங்களை உருவாக்குதல்.
 • முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் இறுதி செய்வதில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் பார்வைக்குக் கொண்டு வருதல்.

 (Release ID: 1629088) Visitor Counter : 359