மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

1.5 கோடி பால்வள விவசாயிகளுக்கான விவாசயக் கடன் அட்டை (KCC) பிரச்சாரம் தொடங்கியது.

Posted On: 01 JUN 2020 7:47PM by PIB Chennai

அரசு, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் (ஜுன் 1 முதல்  ஜுலை 31, 2020 வரை) சிறப்பு நடவடிக்கையாக கூட்டுறவு பால் உற்பத்திச் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்த 1.5 கோடி பால்வள விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டைகளை (KCC) வழங்க இருக்கிறது.  கால்நடை மற்றும் பால்வளத் துறையானது நிதிச்சேவைகள் துறையின் உதவியுடன் ஏற்கனவே இது தொடர்பான சுற்றறிக்கைகளையும் விவசாய கடன் அட்டைக்கான விண்ணப்ப படிவ மாதிரியையும் மாநில பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மற்றும் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு அனுப்பி உள்ளது.  தீவிர முனைப்பு நோக்கத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பால் உற்பத்திக் கூட்டுறவு இயக்கத்தின் கீழ் நாட்டில் 230 பால் உற்பத்தியாளர் யூனியன்களோடு தோராயமாக 1.7 கோடி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 

இந்தப் பிரச்சாரத்தின் முதல் கட்டத்தில், விவசாயக் கடன் அட்டைகளை வைத்திராத பால் உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் மற்றும் பல்வேறுபட்ட பால் உற்பத்தியாளர் யூனியன்களோடு தொடர்புடையவர்களுக்கு அட்டைகள் வழங்கப்படும்.

1.5 கோடி பால்வள விவசாயிகளுக்கு விவசாயக் கடன் அட்டைகளை வழங்கும் சிறப்பு முனைப்பு இயக்கமானது விவசாயிகளுக்காக பிரதம மந்திரி அறிவித்த சுயசார்பு பாரத் திட்டத் தொகுப்பின் ஒரு பகுதியாக உள்ளது.  நிதியமைச்சர் 15 மே 2020 அன்று விவசாய கடன் அட்டை (Kisan Credit Card - KCC) திட்டத்தின் கீழ் 2.5 கோடி விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தார்.  இந்த நடவடிக்கையானது அண்மையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் ரூ.5 லட்சம் கோடி அளவிலான பணப்புழக்கத்தை கூடுதலாக ஏற்படுத்தும்.



(Release ID: 1628648) Visitor Counter : 208