தேர்தல் ஆணையம்

தள்ளி வைக்கப்பட்ட மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை

Posted On: 01 JUN 2020 6:09PM by PIB Chennai

2020 ஏப்ரல் மாதம் ஓய்வு பெறவிருந்த 17 மாநிலங்களைச் சேரந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்களைப் பூர்த்தி செய்வதற்கான தேர்தலை 25.02.2020 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான அறிவிக்கை, 06.03.2020 அன்று, (எண்.318- சிஎஸ்-மல்டி- 2020(1) வெளியிடப்பட்டது. வேட்பு மனுக்களை விலக்கிக் கொள்ளும் கடைசி நாள் அவகாசம் முடிவடைந்த பின்னர், 18.03.2020 அன்று, 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 இடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அந்த மாநிலங்களின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆந்திரா, குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், மணிப்பூர் , மேகாலயா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 18 இடங்களுக்கான தேர்தல் 26.03.2020 ( வியாழக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவித்திருந்தனர். 06.03.2020 அறிவிக்கையின் படி, தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் 30.03.2020 உடன் நிறைவு பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 153 , போதுமான காரணங்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் கருதினால், எந்தத் தேர்தலையும் முடிப்பதற்கான கால அவகாசத்தை, ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கையில், சட்டத்தின் 30 அல்லது பிரிவு 39-இன்  துணைப்பிரிவு (1) இன்படி, திருத்தம் செய்து நீட்டிக்கலாம் எனக் கூறுகிறது. அதன்படி, கொவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள, இதுவரை காணாத , பொது சுகாதார அவசர நிலை மற்றும் நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, 24.03.2020 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும், சட்டத்தின் 153-வது பிரிவின்படி தேர்தலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தத் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை குறித்த புதிய தேதியை நிலவும் சூழலை ஆய்வு செய்து , தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்திருந்த போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் 06.03.2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையின் தேர்தல் தொடர்பான இதர நடவடிக்கைகளை நிறைவு செய்ய  செல்லுபடியாகும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தை விரிவாக ஆய்வு செய்தது. மத்திய உள்துறை அமைச்சகச் செயலர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இன் கீழ் உள்ள தேசிய நிர்வாகக் குழுவின் தலைவர் 30.05.2020 அன்று வெளியிட்டுள்ள விதிமுறைகள், சம்பந்தப்பட்ட தலைமை தேர்தல் அதிகாரிகளின் விளக்கங்கள் உள்பட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, ஆந்திரா (4 இடங்கள்) , குஜராத் (4 இடங்கள்), ஜார்க்கண்ட (2 இடங்கள்), மத்தியப்பிரதேசம் ( 3 இடங்கள்), மணிப்பூர் (1 இடம்), மேகாலயா (1 இடம்), ராஜஸ்தான் ( 3 இடங்கள்) என 18 இடங்களுக்கான ஆண்டுக்கு இருமுறை நடக்கும் தேர்தல் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை அட்டவணையை ஆணையம்  பின்வருமாறு வெளியிட்டுள்ளது;

நிகழ்வுகள்

தேதி

தேர்தல் தேதி

19 ஜூன், 2020 (வெள்ளி)

தேர்தல் நடைபெறும் நேரம்

காலை 09:00 மணி  முதல் மாலை 04:00 மணி வரை

வாக்கு எண்ணிக்கை

19 ஜூன், 2020 (வெள்ளி) மாலை 05:00 மணி

 தேர்தல் நடைமுறைகள் நிறைவடைய வேண்டிய தேதி

 

22 ஜூன் , 2020 (திங்கள்)

 

தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது, கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான அறிவுரைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள் , ஒரு மூத்த அதிகாரியை நியமிக்க வேண்டும் என ஆணையம் முடிவு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியை, தேர்தலுக்கான மேற்பார்வையாளராக ஆணையம் நியமித்துள்ளது.

***



(Release ID: 1628428) Visitor Counter : 231