பாதுகாப்பு அமைச்சகம்

ஆபரேஷன் “சமுத்ர சேது” திட்டத்தின் அடுத்த கட்டத்தை தொடங்குகிறது இந்தியக் கடற்படை

Posted On: 30 MAY 2020 6:53PM by PIB Chennai

வெளிநாடுகளிலிருந்து இந்தியக் குடிமக்களை அழைத்து வருவதற்கான ஆபரேஷன் “சமுத்ர சேது” திட்டத்தின் அடுத்தகட்டம், ஜூன் 1, 2020-இல் தொடங்குகிறது.

இந்தக் கட்டத்தில், இலங்கையின் கொழும்பு நகரிலிருந்து 700 பேரை இந்திய கடற்படையின் ஜலஸ்வா கப்பல், தமிழகத்தின் தூத்துக்குடிக்கு அழைத்து வரும். அதே போன்று, மாலத்தீவில் உள்ள மாலே பகுதியிலிருந்து 700 இந்தியர்கள், தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுவர்.

இதற்கு முந்தைய கட்டத்தில், மாலே-விலிருந்து 1,488 இந்தியக் குடிமக்களை, இந்தியக் கடற்படை கொச்சிக்கு அழைத்துவந்துள்ளது.

மீட்கப்பட வேண்டிய இந்தியக் குடிமக்கள் குறித்த பட்டியலை இலங்கை மற்றும் மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரகங்கள் தயார் செய்துள்ளன. உரிய மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, அவர்களை வழியனுப்புவதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகங்கள் செய்யும். பயணத்தின் போது, கோவிட்- தொடர்பான சமூக இடைவெளி விதிகள் பின்பற்றப்படும். கப்பல் பயணத்தின் போது, அழைத்து வரப்படுபவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

தூத்துக்குடி துறைமுகத்தில் தரையிறங்கிய பிறகு, கப்பலில் வந்தவர்களை மாநில அரசு அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள். இந்திய அரசின் வெளியுறவு விவகாரங்கள், உள்துறை விவகாரங்கள், சுகாதாரம் மற்றும் பல்வேறு பிற அமைப்புகள், மாநில அரசுகள் ஆகியவை ஒருங்ணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றன.



(Release ID: 1628155) Visitor Counter : 143