அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்திற்குத் தீர்வு காண அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

Posted On: 28 MAY 2020 6:13PM by PIB Chennai

தடுப்பூசிகள், மருந்துகள் கண்டறிவது; நோய் உள்ளதா என்பதைக் கண்டறிவது; நோய்க்கான பரிசோதனைகள் ஆகியவற்றில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான செயல்பாடுகள் குறித்து நிதிஆயோக் (NITI Aayog) அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வினோத் பால் மற்றும் மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே விஜயராகவன் ஆகியோர் இன்று செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தனர்.

 

தடுப்பூசிகளைப் பொறுத்தவரை பொதுவாக அதற்கான வழிமுறைகள் மிகவும் மெல்லவே நடக்கும் என்றும், அவற்றில் பல நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் கோவிட்-19 நோய்க்கு எதிராகப் போராடி வெற்றி காண்பதற்கு பலவகையான இணையான முயற்சிகள் தேவைப்படுகின்றன. இது உலக அளவிலும், இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் மிக வலுவான தடுப்பூசித் தொழில்துறை உள்ளது. இந்திய நிபுணர்களும், புதிதாகத் துவங்கியுள்ள ஸ்டார்ட்-அப்  நிறுவனங்களும் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மூன்று விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலாவது, உள்நாட்டிலேயே எடுக்கப்படும் முயற்சிகள். இரண்டாவது, இந்திய நிறுவனங்கள் முன்னிலைப் பொறுப்பு வகித்து, உலக அளவிலான அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள். மூன்றாவது, உலகில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இந்தியா பங்கேற்பது. இதுபோல பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வதுடன், அதிக அளவில் பொருள்களைத் தயாரிப்பது, சேகரித்து வைத்துக்கொள்வது ஆகியவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் வெற்றி உறுதிப்படுத்தப்படுகிறது.

 

மருந்துகள் கண்டுபிடிப்பதைப் பொறுத்தவரை நமது அறிவியல் முயற்சிகள் மூன்று அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன. தற்போதுள்ள மருந்துகள் இந்த வைரசுக்கு எதிராக எந்த அளவிற்குத் திறம்பட செயல்பட்டு, இந்த நோயின் பாதிப்புகளைக் குறைக்கும் என்று பார்ப்பது. இரண்டாவது, பாரம்பரிய மூலிகை மருந்துகள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட செடிகளில் இருந்து எடுக்கப்படும் சாறு ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இறுதியாக, பல்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தி பல கணிப்பொறி நிபுணர்கள் ஒரே நேரத்தில் செயல்பட்டு இயங்கும் ஹேக்கத்தான் Hackathon’ முறை மூலம் மருந்துகளைக் கண்டறியும் முயற்சி உட்பட பல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.


(Release ID: 1627598) Visitor Counter : 254