நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய உணவுக் கார்ப்பரேஷனின் உணவு தானிய விநியோகம் மற்றும் கொள்முதல் குறித்து திரு பாஸ்வான் ஆய்வு
Posted On:
28 MAY 2020 6:06PM by PIB Chennai
நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத் துறை மத்திய அமைச்சர் திரு. ராம்விலாஸ் பாஸ்வான், இந்திய உணவுக் கார்ப்பரேஷனின் மண்டல நிர்வாக இயக்குநர்கள் மற்றும் பிராந்திய பொது மேலாளர்களுடன் இன்று காணொளி மூலம் ஆய்வு நடத்தினார். உணவு தானியங்கள் விநியோகம் மற்றும் கொள்முதல் குறித்து அவர் தகவல்களைக் கேட்டறிந்தார்.
முடக்கநிலை அமல் காலத்தில் இந்திய உணவுக் கார்ப்பரேஷனின் செயல்பாடுகளைப் பாராட்டிய திரு பாஸ்வான், உணவு தானியங்கள் கொண்டு செல்வது முந்தைய சமயங்களைவிட அதிக அளவில் நடந்திருப்பதாக நினைவுகூர்ந்தார். தீவிர நோய்த் தொற்று நெருக்கடி காலத்தில் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் போர்வீரர்களாக இந்திய உணவுக் கார்ப்பரேஷனின் அலுவலர்கள் செயல்பட்டு வருவதாகவும், சவால்களை தங்களுக்கான வாய்ப்புகளாக அவர்கள் மாற்றியுள்ளார்கள் என்றும் அமைச்சர் கூறினார். முடக்கநிலை காலத்தில் உணவு தானிய மூட்டைகள் ஏற்றுதல், இறக்குதல், கொண்டு செல்லுவதில் சாதனைகள் படைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதே சமயத்தில், தடை எதுவும் இன்றி கொள்முதல் தொடர்வதாகவும் அவர் கூறினார். அரசு ஏஜென்சிகள் மூலம் கோதுமைக் கொள்முதல், கடந்த ஆண்டு அளவை மிஞ்சிவிட்டது என்றும் திரு பாஸ்வான் தெரிவித்தார்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உணவு தானியங்கள் விநியோகம் குறித்த தகவல்களையும் அமைச்சர் கேட்டறிந்தார்.
குடிபெயர்ந்த மற்றும் பல பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு தற்சார்பு இந்தியா திட்டத்தில் உணவு தானியம் ஒதுக்கியிருப்பது பற்றி ஆய்வு செய்ய அமைச்சர் திரு பாஸ்வான், 2020 மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை (2.44 லட்சம் டன் கோதுமை, 5.56 லட்சம் டன் அரிசி) மத்திய அரசு வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜ்னா மூலம், 2020 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 120.04 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை (15.65 லட்சம் டன் கோதுமை, 104.4 லட்சம் டன் அரிசி) மத்திய அரசு வழங்கியிருப்பதாக அவர் கூறினார்.
மத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி 25.05.2020 வரையில், 186 அமைப்புகளுக்கு 1179 மெட்ரிக் டன் கோதுமையும், 890 அமைப்புகளுக்கு 8496 மெட்ரிக் டன் அரிசிக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் 886 மெட்ரிக் டன் கோதுமை, 7778 மெட்ரிக் டன் அரிசி ஆகியவற்றை அந்த அமைப்புகள் ஏற்கெனவே பெற்றுக் கொண்டுவிட்டன என்றும் திரு பாஸ்வான் தெரிவித்தார்.
(Release ID: 1627596)
Visitor Counter : 257