வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஏற்றுமதியாளர்கள், உலகிற்கு தரமான பொருள்களை வழங்கும் வகையில் போட்டிக்குரியவர்களாக இருக்க வேண்டும் என திரு. பியூஷ் கோயல் வலியுறுத்தல்

Posted On: 28 MAY 2020 4:40PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் தொழில்துறை மற்றும் ரயில்வே அமைச்சர் திரு. பியூஷ் கோயல், இன்று இந்தியத் தொழில் கூட்டமைப்பு - சிஐஐ ஏற்பாடு செய்திருந்த ஏற்றுமதி குறித்த டிஜிட்டல் உச்சி மாநாட்டில் காணொளி மூலம் கலந்து கொண்டார். இந்த உச்சிமாநாட்டின் நிறுவனப் பங்குதாரராக இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இருந்தது.

உச்சிமாநாட்டில் உரையாற்றிய திரு. கோயல், தொழில்துறை மற்றும் தனியார் துறையிடமே வருங்கால வளர்ச்சி உள்ளது என்று கூறினார். இதில் அரசுக்கு மிகக் குறைந்த அளவுக்கே பங்கு உள்ளது என்றார் அவர். இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க, உற்பத்திக்குப் புத்துயிர் ஊட்டுதல், ஏற்றுமதியை பல்வகைப்படுத்துதல், ஏற்றுக் கொள்ளக்கூடிய புதிய, கூடுதல் சந்தைகளைக் கண்டறிதல் என மூன்று முக்கிய வழிகள் உள்ளதாக அமைச்சர் அடையாளம் காட்டினார். தற்போதைய வலுவான பகுதிகளை ஒருங்கிணைப்பதுடன், ஏற்றுமதியை பல்வகைப்படுத்துதல், நமது பொருளாதாரம் வளர்ச்சியுற அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார். வாகன உதிரிபாகப் பிரிவு, மரப்பொருள்கள், குளிர்சாதனக் கருவிகள் மற்றும் இதரப் பொருள்களை  உள்நாட்டிலேயே  உற்பத்தி செய்வதை மேம்படுத்த இந்தியாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார். மின்னணு உற்பத்தியை மெய்ட்டி (MeitY) ஊக்குவித்து வருகிறது, மருந்து தயாரிப்புப் பிரிவில் ஏபிஐ உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது, வேளாண் ஏற்றுமதிப் பிரிவில் வாய்ப்புகள் பெருமளவுக்கு உள்ளன என்று அவர் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவையில், இந்தியாவின் வலிமையையும், நிபுணத்துவத்தையும் உலகம் அங்கீகரித்துள்ளது என்று கூறிய அவர், ஆகவே, அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தப் பிரிவில், 500 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை எட்டுமாறு நாஸ்காமை (NASSCOM) கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

தற்சார்பு இந்தியா ( ஆத்மாநிர்பார் பாரத்) வெறும் தன்னிறைவு மட்டுமல்ல என்றும், வலிமையான இடத்திலிருந்து உலகை ஊக்குவிப்பது என்றும் அவர் கூறினார். உலகச் சந்தையில், குறிப்பாக உலக விநியோகச் சங்கிலி மாறுதலுக்கு உட்பட்டுவரும் நிலையில், நம்பகமான பங்குதாரராகவும், நம்பத்தகுந்த நண்பராகவும் இந்தியா உருவெடுக்கும் என அவர் கூறினார். இந்தியாவை தற்சார்பு கொண்ட நாடாக மாற்றும் பிரதமரின் தொலைநோக்கு குறித்து குறிப்பிட்ட திரு. கோயல், வலிமையான இடத்திலிருந்து நாம் பேச வேண்டும், போட்டிக்குரியவர்களாக இருப்பதுடன், தரமான பொருள்களை உலகுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வெற்றி பெறுவதற்கு நமக்குள் ஊக்குவிப்பு உணர்வு இருக்க வேண்டும். சவால்களை எதிர்கொள்ளும் விருப்பம் இருக்குமானால், எந்த நெருக்கடியும் நமது முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

*******(Release ID: 1627581) Visitor Counter : 13