நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

அரசு முகமைகளின் கோதுமை கொள்முதல் கடந்தாண்டு அளவை மிஞ்சியது

Posted On: 25 MAY 2020 12:17PM by PIB Chennai

கோவிட்-19 பரவல் காரணமாக ஏற்பட்ட தடைகள், நாடு முழுவதுமான முடக்கம் ஆகியவற்றை வென்று, அரசு முகமைகளின் கோதுமை கொள்முதல் கடந்தாண்டு அளவான 341.31 லட்சம் மெட்ரிக் டன்களை தாண்டி, 24.05.2020ம் தேதி அன்று 341.56 மெட்ரிக் டன்களை எட்டிவிட்டது.  கோதுமை அறுவடை வழக்கமாக மார்ச் இறுதியில் தொடங்குகிறது. இதன் கொள்முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரம் தொடங்குகிறது. ஆயினும், 24 மற்றும் 25.03.2020ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முடக்கத்தால், அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பித்தன. அப்போது கோதுமை நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த்து. இதைக் கருத்தில் கொண்டு, முடக்க காலத்தில் வேளாண்மை தொடர்பான பணிகளைத் தொடங்க மத்திய அரசு தளர்வுகளை வழங்கியது. கோதுமை கொள்முதல் மாநிலங்கள் பலவற்றில், கொள்முதல் 15.04.2020ம் தேதி தொடங்கியது. ஹரியானாவில் கொள்முதல் சற்று தாமதமாக 20.04.2020ம் தேதி தொடங்கியது.

பெருந்தொற்று நேரத்தில், இந்த கொள்முதல் பாதுகாப்பான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வது சவாலாக இருந்தது. விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமூக இடைவெளி மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு போன்ற பலமுனை யுக்திகளால் கொள்முதல் சாத்தியமானது. தனி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் கூட்டத்தைக் குறைக்க கொள்முதல் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. கிராமப் பஞ்சாயத்து அளவில், கிடைக்கும் இடங்களைப் பயன்படுத்தி, புதிய மையங்கள் அமைக்கப்பட்டன. பஞ்சாப் போன்ற முக்கிய கொள்முதல் மாநிலங்களில், இந்த எண்ணிக்கை 1836-லிருந்து 3681 ஆகவும், ஹரியானாவில் 599-லிருந்து 1800 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் 3545-லிருந்து 4494 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விவசாயிகள் கோதுமையைக் கொண்டுவர குறிப்பிட்ட தேதிகள் மற்றும் நேரம் ஒதுக்கப்பட்டது. இது கூட்டத்தைக் குறைக்க உதவியது. சமூக இடைவெளி விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டன. தூய்மைப்படுத்துதல் பணிகளும் சீராக மேற்கொள்ளப்பட்டன.

பஞ்சாப்பில் ஒவ்வொரு விவசாயிக்கும், கோதுமை இருப்பு வைக்க தனி இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு வேறு யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. தினசரி ஏல நடைமுறைகளில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  
 

-----



(Release ID: 1626732) Visitor Counter : 337