குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
உயர்கல்வி நிறுவனங்கள் பொருளாதார சாத்தியம் உள்ளவையாக இருப்பது மிகவும் முக்கியம்: திரு நிதின் கட்காரி
Posted On:
21 MAY 2020 6:01PM by PIB Chennai
உயர்கல்வி நிறுவனங்கள் பொருளாதார சாத்தியம் உள்ளவையாக இருப்பது மிகவும் முக்கியம் என்று எம்எஸ்எம்இ, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு நிதின் கட்காரி கூறியுள்ளார். தரத்தில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல், இயக்க செலவினங்களை நிறுவனங்கள் குறைத்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். MIT ADT எம் ஐ டி ஏ டி டி பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளுடன் உயர்கல்வியின் எதிர்காலம் குறித்து, காணொலி மாநாட்டின் மூலம் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார்.
பல்கலைக்கழகங்களின் தர மேம்பாடு மிகவும் தேவையான ஒன்று என்று கூறிய அமைச்சர், மதிப்பு அடிப்படையிலான கல்வி என்பது சமுதாயத்தின் வலிமையாகும் என்றார். தங்களுடைய வலிமைகளையும் பலவீனங்களையும் புரிந்துகொண்டு, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள முடியும் என்று இளைஞர்கள் உணர வேண்டும் என்று அவர் கூறினார். இந்த காலகட்டத்தில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது நாட்டிற்கு மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்
உயர்கல்வித் துறையில் ஒருங்கிணைந்த அணுகுமுறை, திறமையான ஒருங்கிணைப்பு, அனைத்து பங்குதாரர்களுக்கிடையேயான குழு மனப்பான்மை ஆகியவை மிகவும் அவசியம் என்றும், தற்போதைய சவாலான கட்டத்தை திறமையாக எதிர்கொள்வதற்கு தன்னம்பிக்கையும் நேர்மறையான மனப்பாங்கும் தேவை என்றும் திரு.கட்காரி வலியுறுத்தினார்.
அறிவை செல்வமாக மாற்ற, புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோராக உருவாகுதல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சிக்கான திறன்கள் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம் என்று அவர் கருத்துத் தெரிவித்தார்
வாகனக் கழிவுக் (scrappage) கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். துறைமுகங்களுக்கு அருகே மறுசுழற்சி தொகுப்புகளை தொடங்கலாம் என்றும், இதன் மூலமாக நாட்டில் வாகன உற்பத்தித் தொழிலை ஊக்குவிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
(Release ID: 1626067)
Visitor Counter : 255