பாதுகாப்பு அமைச்சகம்

கொவிட்-19 காரணமாக ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக, இந்தியப் பாதுகாப்பு சாதனத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மின்-மாநாட்டில் பேசும் போது பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கூறினார்

Posted On: 21 MAY 2020 2:23PM by PIB Chennai

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றுக்கு எதிரான நாட்டின் போரில் பங்காற்றி வருவதற்காக, இந்தியப் பாதுகாப்பு சாதனத் தயாரிப்பாளர்கள் சங்கத்தையும், இதர சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களையும் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பாராட்டினார். இந்தியப் பாதுகாப்பு சாதனத் தயாரிப்பாளர்கள் சங்கம், இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் தயாரிப்புத் துறை இணைந்து நடத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மின்-மாநாட்டில் காணொளி மூலம் இன்று பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.

 

மொத்த உள்நாட்டு உற்பத்தியை முடுக்கி விட்டு, ஏற்றுமதிகள் மூலம் மதிப்பு மிகுந்த அந்நியச் செலாவணியை ஈட்டி, வேலைவாய்ப்புகளை வழங்கி இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் விளங்குவதாக பாதுகாப்பு அமைச்சர் கூறினார். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வலுவாக வைத்திருப்பது அரசின் முன்னுரிமைகளில் ஒன்று என அவர் கூறினார். "ஆயுதத் தொழிற்சாலைகள், பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் போன்ற நமது பல்வேறு நிறுவனங்களின் பல அடுக்குகளில், 8,000க்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பங்குதாரர்களாக உள்ளன. இந்த நிறுவனங்களின் மொத்த உற்பத்தியில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக இவை பங்களிக்கின்றன," என்று அவர் கூறினார்.   

 

பாதுகாப்பு சாதனங்கள் துறை சிக்கல்களை சந்தித்து வருவதை ஒப்புக்கொண்ட திரு. ராஜ்நாத் சிங், "பொது முடக்கம் மற்றும் ஏற்கனவே இருக்கும் விநியோக சங்கிலிகளுக்கு ஏற்பட்ட இடையூறு ஆகிய காரணங்களால்  உற்பத்தித் துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது, இதற்கு பாதுகாப்பு சாதனங்கள் துறை விதிவிலக்கல்ல. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ராணுவத் தளவாடங்களை வாங்கும் ஒரே வாடிக்கையாளராக அரசாங்கம் மட்டுமே இருப்பதால், இதரத் துறைகளை விட  பாதுகாப்பு சாதனங்கள் துறை அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறலாம்," என்றார். பொது முடக்கம் அமலாக்கப்பட்டதில் இருந்து, துறையினரோடும், ராணுவப் படைகளின் உயர் அதிகாரிகளோடும் பல்வேறு உரையாடல்களை பாதுகாப்பு சாதனத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தியது. பாதுகாப்பு சாதனங்கள் துறையின் சிக்கல்களை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பினை இது அளித்ததோடு, அவற்றைத் தடுப்பதற்கான ஆலோசனைகளும் பாதுகாப்பு சாதன தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் இருந்து பெறப்பட்டன.

 

இந்த சவால்களை சந்திப்பதற்காக, தொழில்களுக்கு, குறிப்பாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முன்மொழிதலுக்கான வேண்டுகோள்/தகவலுக்கான வேண்டுகோள் (RFP/RFI) ஆகியவற்றுக்கான பதிலளிக்கும் தேதிகள் நீட்டிப்பு, நிலுவையில் உள்ள கட்டணங்களை விரைந்து செலுத்துதல் போன்றவை இதில் அடங்கும். தொழில்களின் சுமையை இந்த நெருக்கடி காலத்தில் குறைப்பதற்காக அரசாலும், இந்திய ரிசர்வ் வங்கியாலும் பல்வேறு நிதி ஆதரவு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. கூடுதல் பணி மூலதனம் கிடைப்பதன் மூலமும், வட்டி செலுத்துதல் தள்ளி வைப்பு மூலமும் சில நிவாரணங்களை இவை அளிக்கும்.

 

எண்ணூறுக்கும் அதிகமான பாதுகாப்பு சாதன சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்ற இந்த மின்-மாநாட்டின் கருப்பொருள் 'பாதுகாப்பு, வானூர்தியியல் துறையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வணிகத் தொடர்ச்சி' என்பது ஆகும்.

 

***



(Release ID: 1626027) Visitor Counter : 175