ரெயில்வே அமைச்சகம்
ஜூன் 1 ஆம் தேதி ரயில் சேவைகள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள்
Posted On:
20 MAY 2020 10:25PM by PIB Chennai
இந்திய ரயில்வே சேவைகளை 2020 ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து பகுதியளவுக்கு மீண்டும் தொடங்குவது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகங்களை கலந்து ஆலோசித்த பிறகு ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
200 பயணிகள் ரயில் சேவைகளை இந்திய ரயில்வே தொடங்கவுள்ளது. 1/6/2020 முதல் தொடங்கும் இந்த ரயில் சேவைகளுக்கான முன்பதிவு 21/05/20 காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
மே 1 ஆம் தேதியில் இருந்து இயக்கப்படும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மற்றும் மே 12 ஆம் தேதியில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ஏ.சி. ரயில்களின் (30 ரயில்கள்) சேவைகளுடன் கூடுதலாக இவை இயக்கப்படும்.
அனைத்து மெயில் / எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் உள்ளிட்ட மற்ற வழக்கமான பயணிகள் ரயில் சேவைகளும், மறு அறிவுறுத்தல் வரும் வரை ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும்.
ரயில் வகை: வழக்கமான ரயில்களின் அமைப்பில் சிறப்பு ரயில்கள்
இவை முழுக்க முன்பதிவு செய்யப்பட்டதாக ஏ.சி. மற்றும் ஏ.சி. அல்லாத வகுப்புகளைக் கொண்டதாக இருக்கும். பொது பெட்டிகளிலும் முன்பதிவு அடிப்படையில் அமர்வதற்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ரயிலில் முன்பதிவு அல்லாத பயணிகளுக்கான பெட்டி எதுவும் இருக்காது.
கட்டணங்கள் வழக்கமானதாக இருக்கும். பொதுவான பெட்டிகளுக்கு முன்பதிவு செய்தல், இரண்டாம் வகுப்பு இருக்கை கட்டணம் வசூலிக்கப்படும். அனைத்து பயணிகளுக்கும் இருக்கைகள் ஒதுக்கப்படும்.
டிக்கெட்கள் முன்பதிவு & சார்ட் தயாரித்தல்:
- ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது செல்போன் ஆப் மூலம் ஆன்லைன் இ-டிக்கெட் பதிவு மட்டும் செய்ய முடியும். எந்த ரயில் நிலையத்திலும், கவுண்ட்டர்கள் மூலமாக முன்பதிவு செய்ய முடியாது. `ஏஜென்ட்கள்' மூலம் முன்பதிவு செய்வதற்கு (ஐ.ஆர்.சி.டி.சி. ஏஜென்ட்கள் மற்றும் ரயில்வே ஏஜென்ட்களுக்கு) அனுமதி கிடையாது.
- ஏ.ஆர்.பி. காலம் (முன்பதிவுக்கான காலம்) அதிகபட்சம் 30 நாட்களாக இருக்கும்.
- நடைமுறையில் உள்ள விதிகளின் அடிப்படையில் ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்புப் பட்டியல்கள் உருவாக்கப்படும். இருந்தபோதிலும், காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள் ரயிலில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- முன்பதிவு அல்லாத டிக்கெட்கள் வழங்கப்படாது. பயணத்தின் போது ரயிலில் யாருக்கும் டிக்கெட் வழங்கப்படாது.
- இந்த ரயில்களில் தட்கல் மற்றும் ப்ரீமியம் தட்கல் முன்பதிவுகளுக்கு அனுமதி கிடையாது.
- முதலாவது சார்ட், குறிப்பிட்ட ரயில் புறப்படும் இடத்தில் பயணத்தைத் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் முன்னதாகவும், இரண்டாவது சார்ட் குறைந்தபட்சம் 2 மணி நேரத்துக்கு முன்னதாகவும் (தற்போது 30 நிமிடங்கள் என உள்ள நடைமுறைக்கு மாறாக) தயாரிக்கப்படும். முதலாவது மற்றும் இரண்டாவது சார்ட் தயாரிப்பு இடைவெளி நேரத்தில் ஆன்லைன் மூலமான `கரண்ட் புக்கிங்' செய்தவர்கள் மட்டுமே பயணம் செல்ல அனுமதிக்கப்படுவர்.
- எல்லா பயணிகளுக்கும் கட்டாயமாக மேலோட்டமான மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவர்.
- இந்த சிறப்பு ரயில்களில் பயணம் செல்பவர்கள் பின்வரும் முன்னெச்சரிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும்:
- உறுதி செய்யப்பட்ட டிக்கெட்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில் நிலையத்தில் நுழைய அனுமதிக்கப்படுவர்.
- அனைத்துப் பயணிகளும் நுழையும் போதும், பயணத்தின் போதும் கட்டாயமாக முகக்கவச உறை அணிந்திருக்க வேண்டும்.
- ரயில் நிலையத்தில் உடல் வெப்பத்தைக் கண்டறியும் தெர்மல் பரிசோதனை நடைமுறைக்கு உதவும் வகையில் பயணிகள் குறைந்தபட்சம் 90 நிமிடங்களுக்கு முன்னதாக ரயில் நிலையத்துக்கு வந்துவிட வேண்டும். நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணிப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.
- ரயில் நிலையத்திலும், ரயில்களிலும், பயணிகள் சமூக இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- சேரும் இடத்தில், அந்த நகரம் உள்ள மாநிலம் / யூனியன் பிரதேசத்தால் வரையறுக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீடுகள்:
வழக்கமான ரயில்களில் அளிக்கப்பட்ட அனைத்து ஒதுக்கீடுகளும் இந்த சிறப்பு ரயில்களிலும் அனுமதிக்கப்படும். இதற்காக குறைந்த அளவிலான முன்பதிவு (பி.ஆர்.எஸ்.) கவுண்ட்டர்கள் செயல்படும். இருந்தபோதிலும், இவற்றில் சாதாரண டிக்கெட்களுக்குப் பதிவு செய்ய முடியாது.
சலுகைகள்: மாற்றுத் திறனாளிகளுக்கான 4 பிரிவுகளின் சலுகைகள், நோயாளிகளுக்கான 11 வகை சலுகைகள் மட்டுமே இந்த சிறப்பு ரயில்களில் அனுமதிக்கப்படும்.
ரத்து செய்தல் மற்றும் பணம் திருப்பி அளித்தல் விதிமுறை: ரயில் பயணிகள் (ரத்து செய்தல் மற்றும் பணம் திருப்பி அளித்தல் கட்டணம்) விதிகள் 2015ன் கீழான விதிகள் இதற்குப் பொருந்தும்.
மேலும், கொரோனா அறிகுறி இருந்து பயணத்துக்கான தகுதி இல்லாத பயணியாக இருந்தால் அவருக்கு பணத்தை திருப்பித் தருவதற்கு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பின்வரும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி அனைத்துப் பயணிகளுக்கும் கட்டாயமாக மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப் படுவார்கள்.
மருத்துவப் பரிசோதனையின் போது பயணியின் உடல் வெப்பநிலை மிக அதிகமாக இருந்தால் / கோவிட்-19 அறிகுறி இருந்தால், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருந்தாலும் ரயிலில் ஏற அனுமதிக்கப்பட மாட்டாது. அதுபோன்ற நேர்வுகளில் முழு தொகையும் பயணிக்கு பின்வரும் வகையில் திருப்பி அளிக்கப்படும்:
- PNR-ல் தனி பயணியாக இருந்தால்.
- ஒரு PNR-ல் நிறைய பேர் முன்பதிவு செய்திருந்து, அதில் ஒருவருக்கு பயணத்துக்கான தகுதி இல்லை என கண்டறியப்பட்ட நிலையில், அந்த டிக்கெட்டில் பதிவு செய்துள்ள அனைவருமே பயணம் செய்ய விரும்பாவிட்டால் அனைத்துப் பயணிகளுக்கும் முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.
- குழுவினருக்கு பதிவு செய்த டிக்கெட்டில், ஒரு பயணிக்கு பயணத்துக்கான தகுதி இல்லாமல் போய், மற்றவர்கள் பயணம் செய்ய விரும்பினால், பயணத்துக்கு அனுமதிக்கப்படாத பயணிக்கான கட்டணம் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து நேர்வுகளிலும் நுழைவு / ஆய்வு / பரிசோதனை இடங்களிலேயே இப்போதைய நடைமுறையின்படி டிக்கெட் பரிசோதகர் அதற்கான சான்றிதழை அளிப்பார். ``கோவிட் 19 அறிகுறிகள் காரணமாக பயணத்தில் வராத பயணிகளின் எண்ணிக்கை'' என்று குறிப்பிட்டு அவர் தருவார்.
டிக்கெட் பரிசோதகரின் கடிதத்தைப் பெற்ற பிறகு, பயண தேதியில் இருந்து 10 நாட்களுக்குள் ஆன்லைன் TDR மூலம், விண்ணப்பிக்க வேண்டும். டிக்கெட் பரிசோதகர் அளித்த சான்றிதழின் ஒரிஜினலை இப்போதைய நடைமுறையின்படி ஐ.ஆர்.சி.டி.சி.க்கு அனுப்ப வேண்டும். டிக்கெட்டில் உள்ள பயணிகளில் பயணம் செல்லாத சிலர் அல்லது அனைவருக்கும் உரிய முழு கட்டணத்தையும், வாடிக்கையாளரின் கணக்கில் ஐ.ஆர்.சி.டி.சி. செலுத்திவிடும்.
மேலே உள்ள அம்சங்களுக்காக கோவிட்-19 அறிகுறிகளால் பயணம் செல்லாத பயணிகள் TDR பதிவு செய்வதற்குத் தேவையான மாற்றங்களை CRIS மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. செய்யும். `அதிக உடல்வெப்பம் / கோவிட்-19 அறிகுறியால் ரயில் பயணம் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சில / அனைத்துப் பயணிகள்' என்ற தேர்வு வரிசை ஒன்று அதில் இடம் பெற்றிருக்கும்.
உணவு வழங்கல் சேவை:
உணவு வழங்குவதற்கான கட்டணம், டிக்கெட் கட்டணத்தில் சேர்க்கப்படவில்லை. முன்கூட்டியே பணம் செலுத்தி சாப்பாட்டுக்குப் பதிவு செய்தல், இ-கேட்டரிங் வசதிகள் இருக்காது. இருந்தபோதிலும், குறிப்பிட்ட சில தின்பண்டங்கள் மற்றும் பாட்டில் குடிநீர் ஆகியவை உணவுத் தயாரிப்பு பெட்டி வசதி உள்ள சில ரயில்களில் மட்டும் பணம் செலுத்தி பெற்றுக் கொள்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு செய்யும். இதுகுறித்த தகவல்கள், டிக்கெட் பதிவு செய்யும் நிலையிலேயே பயணிக்குத் தெரிவிக்கப்படும்.
பயணிகள் தங்களின் உணவு மற்றும் குடிநீர் எடுத்து வருவதற்கு ஊக்குவிக்கப் படுகிறார்கள்.
ரயில் நிலையங்களில் உள்ள விற்பனை நிலையங்கள் (பல்பொருள் கடைகள், புத்தக நிலையங்கள், இதர / மருந்து கடைகள்) செயல்படும். உணவு வளாகம் மற்றும் தேநீர் அறைகளில் சமைத்த பொருட்களை, எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்குவார்கள். அங்கேயே அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க மாட்டாது.
படுக்கை விரிப்பு மற்றும் போர்வை:
ரயிலில் படுக்கை விரிப்பு, போர்வைகள் எதுவும் வழங்கப்படாது. இவற்றை பயணிகளே கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இதற்கு ஏற்ற நிலையில் ரயில்களில் ஏ.சி. வெப்ப நிலை சீர் செய்யப்பட்டிருக்கும்.
பயணிகள் நேருக்கு நேர் பார்த்து கடக்கும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், கூடிய அளவுக்கு நுழைவு மற்றும் வெளியேறுதலுக்கு தனித்தனி பாதைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு மண்டல ரயில்வே நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பின்பற்ற வேண்டிய தரநிலைப் படுத்திய சமூக இடைவெளி வழிகாட்டுதல்கள் மண்டல ரயில்வே நிர்வாகங்களுக்கு அளிக்கப்படும். பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நடைமுறைகளைப் பின்பற்றுதலுக்கான வழிமுறைகளும் இதில் இருக்கும்.
அனைத்துப் பயணிகளும் கட்டாயமாக ஆரோக்கிய சேது ஆப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். குறைந்த அளவிலான பொருட்களுடன் பயணம் செல்லுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
ரயில் நிலையத்துக்குப் பயணிகள் வருவது, அவர்கள் வரும் வாகனத்தை ஓட்டுபவர் ஆகியோருக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்களின் அடிப்படையில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
*****
(Release ID: 1625729)
Visitor Counter : 902