உள்துறை அமைச்சகம்

மோடி அரசின் நம்பிக்கை- விவசாயிகள் நலனிலேயே இந்தியாவின் நலன் அடங்கியுள்ளது; விவசாயிகள் அதிகாரம் பெறும் போது, நாடு தற்சார்பை அடையும்; திரு. அமித் ஷா

Posted On: 15 MAY 2020 8:10PM by PIB Chennai

ஆத்மாநிர்பார் பாரத் இயக்கத்தின் கீழ், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இன்று விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு நிதி தொகுப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளுக்காக, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சரைப் பாராட்டிய மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, ‘’ விவசாயிகளின் நலனில்தான் நாட்டின் நலன் அடங்கியுள்ளது என்று மோடி அரசு நம்புகிறது. விவசாயிகளுக்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் இன்று வழங்கப்பட்ட உதவி, விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல் மூலம் நாட்டைத் தற்சார்பு கொண்டதாக மாற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்கைக் காட்டுகிறது’’, என்றார்.

ஊரடங்கின் போது விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகளில் சிலவற்றைப் பற்றிக் குறிப்பிட்ட உள்துறை அமைச்சர், ‘’  ஊரடங்கின் போது, குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி, ரூ.74,300 கோடி அளவுக்கு விளைபொருட்களை கொள்முதல் செய்து மோடி அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது; பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், ரூ.18,700 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது; பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், ரூ.6,400 கோடி வழங்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார். மோசமான சூழ்நிலையிலும் விவசாயிகள் மீதான பிரதமர் மோடியின் பரிவு, உலகம் முழுமைக்கும் முன்மாதிரியாக உள்ளது என்று திரு.ஷா கூறினார்.

கால்நடைப் பாதுகாப்பு துறை தொடர்பான தொகுப்பு பற்றிக் குறிப்பிட்ட உள்துறை அமைச்சர், கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, நாட்டில் பால் நுகர்வு 20-25% குறைந்தது என்றும், ஆனால், விவசாயிகளுக்கு உதவும் வகையில், மோடி அரசு அவர்களிடமிருந்து ரூ.4,100 கோடி மதிப்பிலான, 111 கோடி லிட்டர் பாலை வாங்கியுள்ளது என்றும் கூறினார். இன்றைய அறிவிப்பின் மூலம், கால்நடைப் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள 2 கோடி விவசாயிகளுக்கு ரூ. 5,000 கோடி உதவி வழங்கியுள்ளதற்காக பிரதமருக்கு திரு.ஷா நன்றி தெரிவித்தார்.

ரூ.1 லட்சம் கோடி ‘ விவசாய உள்கட்டமைப்பு நிதி’ பற்றிக் குறிப்பிட்ட உள்துறை அமைச்சர், ‘’ ரூ.1லட்சம் கோடி ‘ விவசாய உள்கட்டமைப்பு நிதி’ அமைப்பது பற்றிய பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இயங்கும் மத்திய அரசின் முடிவு விவசாயத் துறைக்கும், இந்தியாவின் விவசாயிகள் நலனுக்கும் புதிய வழியை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.’’ என்று தெரிவித்தார்.



(Release ID: 1624356) Visitor Counter : 172