நிதி அமைச்சகம்
ஏழைகள், புலம்பெயர்ந்தோர், விவசாயிகள், தெருவோர வியாபாரிகளுக்கு குறுகிய, நீண்டகால நிதி - நிதியமைச்சர் அறிவிப்பு.
Posted On:
14 MAY 2020 6:59PM by PIB Chennai
முடங்கிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாரதப்பிரதமர் ஒட்டுமொத்த சிறப்புப் பொருளாதாரத் திட்டமாக ரூ. 20 லட்சம் கோடி, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் கொண்ட திட்டத்தைக் கடந்த மே 12ஆம் தேதி அறிவித்தார். அத்துடன், இந்தியா தன்னையே சார்ந்திருப்பதற்கு அறைகூவல் விடுக்கும் வகையில், தற்சார்பு இந்தியா பிரகடனம் (ஆத்ம நிர்பார் பாரத் அபியான் -आत्मनिर्भर भारत अभियान) என்ற கோட்பாட்டையும் அவர் அறிவித்தார். அந்தச் சுயசார்பு இந்தியா அமைவதற்கு பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப அடிப்படையிலான நிர்வாகம், துடிப்புள்ள ஜனநாயகம், தேவைகள் என்ற ஐந்து முக்கிய காரணிகளையும் அவர் அறிவித்தார்.
பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், புலம்பெயர்ந்த நகர்ப்புற ஏழைகள், சுய தொழில் செய்யும் சிறு வர்த்தகர்கள், சிறு விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோரைப் பொருளாதார நிலையில் உயர்த்துவதற்கான இரண்டாவது கட்ட நடவடிக்கைகளை மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் (மே 14 வியாழன் அன்று) செய்தியாளர்களிடம் அறிவித்தார். புலம்பெயர்ந்தோர் உள்பட ஏழைகள், விவசாயிகள் குறுந்தொழில்களில் ஈடுபட்டோருக்கான பொருளாதார மேம்பாட்டுக்காக குறுகிய கால, நீண்டகால நடவடிக்கைகளை அவர் விவரித்தார்.
புலம் பெயர்ந்த தொழிலாளிகள் உள்ளிட்ட ஏழைகள், விவசாயிகள் ஆகியோர் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி எப்போதும் கவலைப்படுகிறார் என்று நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
விவசாயிகளும், தொழிலாளர்களும் தேசத்தின் முதுகெலும்பைப் போன்றவர்கள். அவர்கள் தங்களின் வியர்வையைச் சிந்தி, தங்களது உழைப்பை நமக்காக அளிக்கிறார்கள். நகர்ப்புறங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்புடன், வசிப்பதற்கு வசதியான செலவு குறைந்த வீடுகளும் தேவைப்படுகின்றன. அத்துடன், ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சாராத தொழிலாளர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. விவசாயிகளுக்குக் குறித்த நேரத்தில் போதுமான கடனுதவி தேவைப்படுகிறது.
பொருளாதாரத்தில் அனைத்துப் பிரிவினரின் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் அரசு அக்கறையோடு இருக்கிறது என்று திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். சிறு தொழில்கள் தொடங்குவதற்கு, குறிப்பாக நடைபாதைக் கடைகள் நடத்துவோருக்கு வாழ்வாதாரத்துக்காக சிசு முத்ரா திட்டத்தின் மூலம் கடனுதவி செய்யப்படுகிறது. அவர்களுக்கு வியாபார அடிப்படையிலும் அதைப் போல் சமூகப்பாதுகாப்பு, அதிகரிக்கப்படும் கடனுதவி ஆகியவற்றின் மூலமாகவும் நமது ஆதரவு தேவைப்படுகிறது.
புலம்பெயர் தொழிலாளிகள், விவசாயிகள், குறுவியாபாரிகள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட ஏழைகளை ஆதரிப்பதற்காக இன்று அறிவிக்கப்பட்ட குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள்:
அ) புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இரு மாதங்களுக்கு இலவச உணவு தானியங்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
இதற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3500 கோடியை மத்திய அரசே ஏற்கும்.
ஆ) புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் எந்த மூலையிலும் இருக்கும் நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பண்டங்களை வாங்குவதற்கு வசதியாக அடுத்த ஆண்டு (2021) மார்ச் முதல் அமலுக்கு வரும் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் தொழில்நுட்ப முறையை உருவாக்குதல்.
நாடு முழுதும் ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்குக் குடிபெயர்வோர் குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்கள் பொது விநியோகத் திட்டத்தின் பலன்களைப் பெற இது உதவும்.
இ) புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய வாடகை வீட்டுவசதிக் குடியிருப்புகள் திட்டம் தொடங்கப்படும்.
புலம்பெயர் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள் ஆகியோர் கட்டுப்படியாகக் கூடிய வாடகையில் வசிப்பதற்கு மத்திய அரசு திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், மாணவர்கள் ஆகியோருக்குக் கட்டுப்படியாகும் வாடகை வீட்டுக்குடியிருப்பு வளாகங்கள் அளிக்கப்படும். அது அவர்களுக்குத் தரமான வாழ்க்கையையும், சமூகப் பாதுகாப்பையும் அளிக்கும். இது தொடர்பான விரிவான விளக்கம் கொண்ட விவரத்தை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும்.
ஈ) சிசு முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்றவர்களுக்கு 12 மாதத்துக்கு 2 சதவீத வட்டி குறைக்கப்படும். இதன் மூலம் ரூ. 1,500 கோடி அளவுக்குப் பலன் கிடைக்கும்.
முத்ரா சிசு திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்றவர்கள் தவணை தவறாமல் கடனைத் திருப்பிச் செலுத்தியவர்களின் கடனுக்கான வட்டியில் 12 மாதங்களுக்கு 2 சதவீதம் சலுகை தரப்படும். இது ரூ. 50 ஆயிரத்துக்கும் கீழே கடன் பெற்றவர்களுக்குக் கிடைக்கும். முத்ரா சிசு கடனுதவி மொத்தம் ரூ. 1.62 லட்சம் கோடி அளவுக்கு அளிக்கபடுகிறது. இந்த வட்டிச் சலுகை மூலம் மொத்தம் ரூ. 1,500 கோடி அளவுக்கு சலுகை கிடைக்கும்.
உ) தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 5000 கோடி கடனுதவி.
இத்திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் ஆரம்பகட்ட மூலதனமாக ரூ. 10 ஆயிரம் கடனுதவி தரப்படும். இதன் மூலம் நாட்டில் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பலனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மொத்தம் ரூ. 5000 கோடி கடனுதவி அளிக்கப்படும்.
ஊ) வீட்டுவசதித் துறை மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் மேம்பாட்டுக்காக ரூ. 70,000 கோடி ஒதுக்கப்படும். இது பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் (PMAY-Urban) நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு (MIG) வழங்கப்படும் கடனுதவித் திட்டத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் 2020-21ஆம் ஆண்டில் இரண்டரை லட்சம் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் பலனடைவர். இதன் மூலம் வீட்டுவசதித் துறையில் ரூ. 70 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்படும்.
எ) காடு வளர்ப்பு இழப்பீட்டு மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையகத்தின் (CAMPA) நிதியைப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ. 6,000 கோடி.
காடு வளர்ப்புக்கான இழப்பீட்டு மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையகத்தின் (CAMPA) கீழ் ரூ. 6000 கோடி நிதி காடுகளை வளர்ப்பது, நகர்ப்புறம் உள்பட தோட்டத் தொழில்கள், செயற்கை மற்றும் இயற்கை மீளுருவாக்கம் (Artificial regeneration, assisted natural regeneration), வன மேலாண்மை (Forest management), மண் மற்றும் ஈரப்பதம் பாதுகாப்புப் பணிகள் (soil & moisture conservation works), வனப் பாதுகாப்பு (Forest protection), வன மற்றும் வனவிலங்கு தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாடு (forest and wildlife related infrastructure development), வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மேலாண்மை (wildlife protection and management) ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படும்.
மத்திய அரசு இத்திட்டங்களுக்காக உடனடியாக ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்யும். இது நகர்ப்புறங்கள், புறநகர்ப்புறங்கள், கிராமப்புறங்களிலும் பழங்குடியினர் பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
ஏ) விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலமாக ரூ.30,000 கோடி கூடுதல் அவசர பணி மூலதனம் (Additional Emergency Working Capital) வழங்கப்படும்.
இது நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான சிறிய, நடுத்தர விவசாயிகள் உள்பட 3 கோடி விவசாயிகளுக்குப் பலன் அளிக்கும். ராபி பருவம் நிறைவடைந்த வேளாண் பணிகளுக்கும், நடப்பு காரீப் பருவத்தின் தேவைகளுக்கும் உதவும்.
ஐ) கிசான் கடனுதவித் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சம் கோடி கடனுதவி. இதன் மூலம் இரண்டரை கோடி விவசாயிகளுக்குப் பலன்.
மீனவர்கள், கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயப் பிரிவினருக்கும் மொத்தம் ரூ. 2 லட்சம் கோடி அளவுக்குக் கடனுதவி அளிக்கப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள இரண்டரை கோடி விவசாயிகள் பலன் பெறுவர்.
****
(Release ID: 1624078)
Visitor Counter : 992
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada