குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

கொவிட்-19 நெருக்கடி முடிந்தவுடன் உருவாகும் வாய்ப்புகளை, தொழில்கள் செயல்மிகு அணுகுமுறையுடன் அணுகிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: திரு. கட்காரி.

Posted On: 07 MAY 2020 5:15PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று முடிந்தவுடன் உருவாகக்கூடிய வாய்ப்புகளை, நேர்மறைக் கண்ணோட்டத்தைக் கைக்கொண்டு, தொழில்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர், திரு. நிதின் கட்காரி கூறினார். இந்தோர் மேலாண்மைச் சங்கம் நடத்திய " கொவிட்-19க்கு பிறகு இந்தியப் பொருளாதாரத்தின் இரு உயிர் நிலைகளான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் துறையின் வாழ்வு" என்னும் இணையக் கருத்தரங்கில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.

கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டிருப்பதை தொழில்கள் உறுதி செய்ய வேண்டும் என்று திரு. கட்காரி கேட்டுக்கொண்டார். உணவு, தங்குமிடம் அளித்தல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை உறுதி செய்து தங்கள் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் நலனை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கொவிட்-19 நெருக்கடி முடிந்தவுடன் உருவாகும் வாய்ப்புகளை, செயல்மிகு அணுகுமுறையுடன் அணுகி தொழில்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மக்களின் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில், நெருக்கடியில் இருந்து மீண்டு வெளியில் வருவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையை, தொடர்புடைய அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். நெருக்கடியைச் சமாளிக்க நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுமாறு தொழில் துறையை அவர் கேட்டுக் கொண்டார்.

***


(Release ID: 1622161) Visitor Counter : 177