நிதி அமைச்சகம்

சர்வதேசப் பங்குச் சந்தைகளில் இந்திய ரூபாய்-அமெரிக்க டாலர் முன்பேர மற்றும் தேவையானதைத் தெரிவு செய்யும் ஒப்பந்தங்களை கிஃப்ட்-ஐஃப்எஸ்சியில் திருமதி. நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

Posted On: 08 MAY 2020 4:03PM by PIB Chennai

மும்பை பங்குச் சந்தையின் இந்தியா ஐஎன்எக்ஸ் (India INX) மற்றும் தேசிய பங்குச் சந்தையின்  NSE-IFSC ஆகிய இரு சர்வதேச சந்தைகளில், இந்திய ரூபாய்-அமெரிக்க டாலர் முன்பேர மற்றும் தேவையானதைத் தெரிவு செய்யும் ஒப்பந்தங்களை (INR-USD Futures and Options contracts), காந்திநகரில் உள்ள குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தில் (GIFT-IFSC) மத்திய நிதி, பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சர், திருமதி. நிர்மலா சீதாராமன் காணொளிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

கிட்டத்தட்ட கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவுடன் தொடர்புடைய நிதிச் சேவைகளில் கணிசமான ஒரு சந்தைப் பங்கு இதர நிதி மையங்களுக்கு இடம் மாறியது. இந்த வணிகத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது இந்தியப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும், வேலைவாய்ப்பு இலாபங்களுக்கும் கட்டாயம் நன்மை பயக்கும். குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தில், இந்திய ரூபாய் - அமெரிக்க டாலர் ஒப்பந்தங்கள் சந்தைகளில் தொடங்கி வைக்கப்பட்டிருப்பது, இந்த திசையில் ஒரு முன்னேற்றமாகும். இது அனைத்து நேர மண்டலங்களிலும் 22 மணி நேரமும் அனைத்து சர்வதேசப் பங்கேற்பாளர்களுக்கும் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தில் இருந்து கிடைக்கும்.

குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகர சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தின் உலகத்தரம் வாய்ந்த வர்த்தக சூழ்நிலையையும், போட்டிக்கு உகந்த வரி அமைப்பையும்  வைத்துப் பார்க்கும் போது, இந்திய ரூபாய் - அமெரிக்க டாலர் ஒப்பந்தங்களின் வர்த்தகம் அதிக அளவில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தின் மூலம் உலகளாவிய பங்களிப்பை இந்தியாவுக்கு இது பெற்றுத் தருவதோடு, இந்தியாவின் சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தை உலகத்தோடும் இணைக்கும்.

***



(Release ID: 1622155) Visitor Counter : 150