பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

இந்திய லோக்பால் அமைப்பின் நீதித் துறை உறுப்பினர் நீதியரசர் அஜய்குமார் திரிபாதி கோவிட்-19 பாதிப்பால் காலமானார்.

Posted On: 03 MAY 2020 5:04PM by PIB Chennai

இந்திய லோக்பால் அமைப்பின் நீதித் துறை உறுப்பினர் நீதியரசர் அஜய்குமார் திரிபாதி கோவிட்-19 பாதிப்பால் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், சனிக்கிழமை 2020 மே 2 ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு காலமானார் என்ற தகவல் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி, சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் 2020 ஏப்ரல் 2 ஆம் தேதி அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

காலஞ்சென்ற நீதியரசர் அஜய்குமார் திரிபாதி 1957 நவம்பர் 12 ஆம் தேதி பிறந்தார். ஸ்ரீராம் வணிகக் கல்லூரியில் பொருளாதாரத்தில் (ஹானர்ஸ்) பட்டம் பெற்ற அவர், டெல்லி பல்கலைக்கழக வளாகத்தின் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில் தொடங்கிய அவர், 2006 அக்டோபர் 9 ஆம் தேதி பாட்னா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமனம் பெறும் வரையில் படிப்படியாக உயர்ந்து வந்தார். 2007 நவம்பர் 21 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 2018 ஜூலை 7 ஆம் தேதி சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றார்.

2019 மார்ச் 27 ஆம் தேதி இந்திய லோக்பால் அமைப்பின் நீதித் துறை உறுப்பினராக அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். தன்னுடைய புதுமையான எண்ணங்கள் மற்றும் கருத்துகள் மூலம் இந்திய லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.



(Release ID: 1620705) Visitor Counter : 200