ரெயில்வே அமைச்சகம்

முடக்கநிலை அமல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள், புனிதப் பயணம் சென்றவர்கள், சுற்றுலாவாசிகள், மாணவர்கள் மற்றும் இதர மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் சேவையை ரயில்வே துறை தொடங்கியுள்ளது

Posted On: 01 MAY 2020 4:51PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, தொழிலாளர்கள், புனிதப் பயணம் சென்றவர்கள், சுற்றுலாவாசிகள், மாணவர்கள் மற்றும் இதர மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக இன்றைய நாளான ``தொழிலாளர் தினத்தில்'' இருந்து ``ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்'' இயக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

சிக்கித் தவிக்கும் மக்களை அனுப்பி வைக்க அல்லது அழைத்து வருவதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் விடுக்கும் கோரிக்கையின் அடிப்படையில், இடையில் வேறு எங்கும் நிற்காமல், புறப்பட்ட இடத்தில் இருந்து சேருமிடத்துக்கு நேரடியாக சென்று சேருவதாக இந்த ரயில் சேவைகள் இருக்கும். இந்த ``ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்'' சேவை நல்ல முறையில் செயல்படுவதற்கு ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகமும், மாநில அரசுகளும் மூத்த அதிகாரிகளை, முன்னோடி அதிகாரிகளாக நியமிக்கும்.

அனுப்பி வைக்கும் மாநிலங்களில் பயணிகளின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு, அறிகுறிகள் ஏதும் இல்லாதவர்களை மட்டுமே பயணம் செல்ல அனுமதிக்க வேண்டும். பயணிகளை அனுப்பி வைக்கும் மாநில அரசுகள், குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு பயணிகளை தனித்தனி குழுக்களாக, கிருமி நீக்கம் செய்யப்பட்ட பேருந்துகளில், தனி நபர் இடைவெளி விதிகளையும், மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி அழைத்துச் செல்ல வேண்டும். பயணிகள் அனைவரும் முகக்கவச உறை அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். அனுப்பி வைக்கும் மாநிலங்கள், பயணிகளுக்கான உணவு மற்றும் குடிநீரை புறப்படும் இடத்திலேயே வழங்க வேண்டும்.

பயணிகளின் ஒத்துழைப்புடன் தனி நபர்  இடைவெளி விதிமுறைகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்யும். நீண்ட தொலைவுக்கான பயணமாக இருந்தால், பயணத்தின் இடையில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உணவு வழங்கும்.

சேர வேண்டிய இடத்தை அடைந்ததும், அந்த மாநில அரசு சார்பில் அவர்களுக்கு உடல் பரிசோதனை செய்து, தேவை இருந்தால் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, ரயில் நிலையத்தில் இருந்து அடுத்தகட்ட பயணத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.



(Release ID: 1620107) Visitor Counter : 331