விவசாயத்துறை அமைச்சகம்

பொது முடக்கநிலை காலத்திலும் வேளாண்மைத் துறைக்கு அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் தகவல்

Posted On: 29 APR 2020 8:38PM by PIB Chennai

பொது முடக்கநிலை காலத்திலும் வேளாண்மைத் துறைக்கு அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது என்று மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் துறை அமைச்சர் திரு நரேந்தி சிங் தோமர் கூறியுள்ளார். அதன் காரணமாக, நாடு முழுவதும் உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கு எந்தப் பற்றாக்குறையும் ஏற்படவில்லை என்றும், காய்கறிகள் மற்றும் பால் விநியோகத்தையும் அரசு உறுதி செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தில்லியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அமைச்சர் திரு தோமர், கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்துக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்று தெரிவித்தார்.

பொது முடக்கநிலை காலத்திலும் வேளாண்மைப் பணிகள் தடையின்றி தொடர்ந்து நடைபெறுவதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். பொது முடக்கநிலை காலத்தில் வேளாண்மைத் துறையில் பின்வரும் சிறப்பு விதிவிலக்குகள் அளிக்கப் பட்டுள்ளன:

  • விவசாய நிலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் வேளாண்மைப் பணிகள்;
  • வேளாண் உற்பத்திப் பொருட்களைக் கொள்முதல் செய்யும் ஏஜென்சிகள், குறைந்தபட்ச ஆதார விலை கொள்முதலும் இதில் அடங்கும்;
  • வேளாண் விளைபொருள் மார்க்கெட் கமிட்டியால் நடத்தப்படும் அல்லது மாநில அரசு அறிவிக்கையின்படி இயங்கும் `மண்டிகள்';
  • விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிப்பு / பேக்கேஜிங் பிரிவுகள் மற்றும் கடைகள்;
  • அறுவடை மற்றும் விதைப்பு பணிகளுக்குத் தேவைப்படும் இயந்திரங்களையும், வேளாண்மை / தோட்டக்கலை தொடர்பான இடுபொருள்களையும் மாநிலத்துக்கு உள்ளும், மாநிலங்களுக்கு வெளியிலும் கொண்டு செல்வது;
  • குளிர்பதனக் கிடங்கு மற்றும் சேமிப்புக் கிடங்கு சேவைகள்;
  • அத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்து;
  • வேளாண்மை இயந்திரங்கள், அவற்றுக்கான உதிரி பாகங்கள் (சங்கிலித் தொடர் வழங்கல் தொடர்பு துறைகளும் இதில் அடங்கும்) மற்றும் பழுதுநீக்கப் பணிகள்;
  • வேளாண்மை இயந்திரங்கள் தொடர்பான சி.எச்.சி. மையங்கள்.

வேளாண்மைப் பணிகள் நீடித்து நடைபெறவும், அதை ஊக்கப்படுத்தவும், நெல், கோதுமை, பருப்புகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட காரிப் மற்றும் ரபி பருவ பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, உற்பத்தி விலையைக் காட்டிலும் 1.5 மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது என்று அமைச்சர் தோமர் தெரிவித்தார். இதனால் பல்வேறு பயிர்கள் சாகுபடியில் உற்பத்தி விலையைவிட விவசாயிகளுக்கு ரபி பருவத்தில் 50 முதல் 109 சதவீதம் வரை கூடுதல் விலை கிடைப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். ரபி பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளுக்கான மையங்கள் கடந்த ஆண்டு 1485 மட்டும் இருந்த நிலையில், இப்போது 2790 மையங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. கொள்முதல் அதிகரிக்கும் போது, தேவைக்கு ஏற்ப புதிய மையங்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

இந்த அனைத்து நடவடிக்கைகள் காரணமாக உணவு தானிய உற்பத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார். 2018-19 நிதியாண்டில் 285.20 மில்லியன் டன்கள் உணவு தானியம் உற்பத்தி இருந்த நிலையில், இந்த ஆண்டு 291.95 மில்லியன் டன்களை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இது 298.3 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது என்றும் அவர் கூறினார்.

கோவிட்-19 தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளில் சமூக இடைவெளியை பராமரிக்கும் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, வேளாண்மைப் பணிகளில் மனிதர்களின் ஈடுபாட்டைக் குறைக்கும் வகையில் தொழில்நுட்ப பயன்பாடுகளை அரசு ஊக்குவித்து வருகிறது என்று திரு தோமர் தெரிவித்தார்.

கோவிட் பாதிப்பு காலத்திலும், 2020 மார்ச் 24ல் இருந்து பிரதமர் வேளாண் திட்டத்தின் கீழ் ரூ.17986 கோடி உதவித் தொகை விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதுவரையில் 9.39 கோடி விவசாயிகளுக்கு ரூ.71 ஆயிரம் கோடி உதவிகள் வழங்கப் பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ஜூலை 31 வரையிலான காலத்துக்கான தவணை உதவித் தொகை 8.13 கோடி விவசாயிகளுக்கு, ஏப்ரல் மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். திட்டத்தின் ஆரம்பத்தில் சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு மட்டுமே பயன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, ஓராண்டு பழமையான இத்திட்டத்தை அனைத்து வேளாண் குடும்பங்களுக்கு விரிவுபடுத்தி பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரதமர் வேளாண் திட்டத்தில் பயன்பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய கடன் அட்டைகள் கிடைத்து விட்டதை உறுதி செய்யும் வகையில், கடன் அட்டை வழங்குதல் நிறைவு முயற்சிகளை பிப்ரவரி மாதம் அரசு மேற்கொண்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார். அப்போதிருந்து பிரதமரின் வேளாண் திட்டப் பயனாளிகளிடம் இருந்து வங்கிகளுக்கு 75 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் ஏற்கெனவே 20 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு சுமார் ரூ.18 ஆயிரம் கோடி தொகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் இருந்து அதிக கோரிக்கைகள் வந்ததை அடுத்து, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அனைத்து விவசாயிகளும் தாங்களாக முன்வந்து சேரும் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் செலுத்த வேண்டிய ப்ரீமியம் தொகையில் மாற்றம் எதுவும் கிடையாது. வடகிழக்கு மாநிலங்களில் இந்த ப்ரீமியத்துக்கு முன்பு 50 சதவீதத் தொகையை மத்திய அரசு ஏற்ற நிலையில், இப்போது 90 சதவீதத் தொகையை மத்திய அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



(Release ID: 1619892) Visitor Counter : 289