உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்புடனும், பிற முன்னணி தொழிலக உறுப்பினர்களுடனும் அமைச்சர் திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் காணொளிக் காட்சி மூலம் உரையாடினார்.
प्रविष्टि तिथि:
29 APR 2020 10:56AM by PIB Chennai
உணவு பதப்படுத்துதல் தொழில்துறைக்கான மத்திய அமைச்சர் திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் உணவு பதப்படுத்துதல் தொழிலின் தற்போதைய போக்கு மற்றும் ஊரடங்குக்குப் பிறகான காலகட்டத்தில் இந்தத் தொழிலின் தேவைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பு (FICCI) மற்றும் அதன் உறுப்பினர்களுடன் நடைபெற்ற காணொளிக் காட்சி கலந்துரையாடலுக்குத் தலைமை வகித்துப் பேசினார்.
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறைக்கான அமைச்சரை, FICCI - இன் தலைமைச் செயலாளர் திரு திலீப் ஷெனாய் வரவேற்றார். ஊரடங்கு தொடங்கியதில் இருந்து உணவுத் தொழிலுக்குத் தேவையான உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருவதற்காக அமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான எத்தகைய முன்னெச்சரிக்கைகளையும் விட்டுக் கொடுக்காமல் தனது முழு உற்பத்தித் திறனுடன் உணவுத் தொழிலகங்கள் தங்களது செயல்பாட்டைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார். முதுநிலை அதிகாரிகள் மற்றும் இன்வெஸ்ட் இந்தியா உறுப்பினர்கள் அடங்கிய அமைச்சகத்தின் செயல்பணிக் குழுவினர் பல்வேறு மாநிலங்களில் நிலவுகின்ற பிரச்சினைகள் / சவால்கள் தொடர்பாக தொழிலக உறுப்பினர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவி வருகின்றனர். நாட்டின் பல பகுதிகளில் அறுவடையான பயிர்கள் மற்றும் அழுகக்கூடிய காய்கறிகள், பழங்கள் வீணாகிப் போவது தான் முக்கியமான பிரச்சினை என்று திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் குறிப்பிட்டார். நேற்று (28 ஏப்ரல் 2020) நடைபெற்ற காணொளிக் கருத்தரங்கில் மத்திய அமைச்சர், அறுவடையான கோதுமை, நெல், பழங்கள், காய்கறிகள் மற்றும் அழுகக்கூடிய ஏனைய பொருள்களை கொள்முதல் செய்ய முன்வருமாறு அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டார். இதனால் விளைபொருள் வீணாவது குறைவதோடு விவசாயிகளும் பயன் பெறுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சகம் தலையிட்டு தற்போது உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டிய சில பிரச்சினைகள் குறித்து தொழிலக உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். பலவகையான கட்டுப்பாட்டு மண்டலங்களில் உணவுத்தொழில் செயல்படுவதற்கான நிலையான செயல் நடைமுறைகள் (SOP), தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு மாநில அளவில் உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கான பிரத்யேக ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்தல், உணவுத்தொழிற்சாலைகளை இயக்குவதற்கும், விநியோகச் சங்கிலித் தொடரைப் பராமரிப்பதற்கும் பணியாளர் அனுமதி அட்டை வழங்குவதற்கான நிலையான வழிமுறை, கோவிட் நோயாளிகளின் தொகுப்பிடம் / பிராந்தியங்கள் ஆகியவற்றை அடையாளம் காணும் வழிமுறையை மறுமதிப்பீடு செய்தல் முதலான விஷயங்கள் குறித்து தொழிலக உறுப்பினர்கள் பேசினர்.
கட்டுப்பாட்டு மண்டலங்களில் உணவுத் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு ஏற்ற விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் தேவை என்ற தொழிலதிபர்களின் கருத்தை மத்திய அமைச்சர் ஏற்றுக்கொண்டார். தங்களது பணியாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்கின்ற தொழிற்சாலைகளில் 60 முதல் 75 சதவீதப் பணியாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படலாம் என்ற கருத்தையும் அமைச்சர் ஏற்றுக்கொண்டார். சில்லறை விற்பனைத் தொழிலை புதுப்பிப்பதற்கான கருத்துகளையும் தொழிற்சாலையினர் தெரிவிக்கலாம் என்று கருத்தரங்கில் கூறப்பட்டது.
உணவுப் பொட்டலங்களுக்கான தேவை வீடுகளில் அதிகமான அளவுக்கு இப்போது அதிகரித்து உள்ளதால் உணவுத் தொழிலில் வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். உணவு விநியோகச் சங்கிலித் தொடர் மறுபடியும் செயல்படத் தொடங்கிய உடனேயே தொழிலகம் இது குறித்து மீள்பரிசீலனை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் உணவுப் பொருட்கள் விநியோகத்தை பராமரிக்க உதவியாக இருப்பதற்காக FICCI மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு FICCI செயலாளர் திருமதி புஷ்பா சுப்ரமணியம் நன்றி தெரிவித்தார். சரக்குப் போக்குவரத்து, சேமிப்புக் கிடங்கு நடவடிக்கைகள், பணியாளர் மற்றும் போக்குவரத்து முதலானவை தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அரசு ஏற்கனவே ஆலோசனைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறது என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து குறைதீர்ப்பு மையத்துக்கு தெரிவித்தால், அங்கிருக்கும் குழுவினர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முயல்வார்கள் என்று FICCI செயலாளர் தொழிற்சாலைக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் கூறினார். தொழிற்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் வந்து வேலை செய்வதை அனுமதிப்பதற்கு அரசு பரிசீலனை செய்யும் வகையில் தொழிற்சாலைகள் ஒரு செயல்திட்ட மாதிரியை வழங்குமாறு தொழிலக உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உணவுத் தொழிலுக்கு உதவுகின்ற ஒரு திட்டத்தை வகுப்பதற்கு ஏற்ற பரிந்துரைகளை முன் வைக்குமாறும் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
FICCI உணவு பதப்படுத்துதல் கமிட்டியின் தலைவரும், ITC உணவுப்பிரிவின் முதன்மைச் செயல் அதிகாரியுமான திரு. ஹேமந்த் மாலிக், கார்கில் இந்தியா தலைவர் திரு. சைமன் ஜார்ஜ், கொக்கோ கோலாவின் இந்திய தலைவர் திரு. டி.கிருஷ்ணகுமார், கெல்லாக் இந்தியா நிர்வாக இயக்குநர் திரு. மோஹித் ஆனந்த், இந்தியா மோன்டெலெஸ் இண்டர்நேஷனல் தலைவர் திரு. தீபக் அய்யர், எம்.டி.ஆர் ஃபுட்ஸ் தலைமை செயல் அதிகாரி திரு. சஞ்சய் ஷர்மா, அமுல் நிர்வாக இயக்குநர் திரு. ஆர்.எஸ் சோதி, சைடஸ் வெல்னெஸ் தலைமை செயல் அதிகாரி திரு. தருண் அரோரா உள்ளிட்ட முன்னணி தொழிலக உறுப்பினர்கள் காணொளிக் கருத்தரங்கில் பங்கேற்று தொழிலின் தற்போதைய சூழல் குறித்த கருத்துகளையும் முன்னேறிச் செல்வதற்கான யோசனைகளையும் தெரிவித்தனர்.
இந்தப் பரிந்துரைகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சகங்களால் மேல் நடவடிக்கைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சகம் தேவையான உதவிகளை வழங்கும் என்று தொழில் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அமைச்சர் உறுதி தெரிவித்தார். எந்தவிதமான உதவி தேவையென்றாலும் அனைத்து உறுப்பினர்களும் செயல்பணிக் குழுவை அணுகலாம் என்றும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
(रिलीज़ आईडी: 1619237)
आगंतुक पटल : 258
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam