நிதி அமைச்சகம்

கோவிட்-19 பாதிப்புகளை சமாளிக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் 1.5 பில்லியன் டாலர் கடனுக்கு இந்தியா கையெழுத்து

Posted On: 28 APR 2020 4:50PM by PIB Chennai

கோவிட்-19 பாதிப்புகளை சமாளிக்கும் உடனடி தேவைகளுக்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் 1.5 பில்லியன் டாலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று கையெழுத்திட்டது. நோய்க் கட்டுப்பாடு, நோய்த் தடுப்பு மற்றும் ஏழைகளுக்கும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு அளித்தல், குறிப்பாக பெண்கள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழுவினருக்கு உதவிகள் அளித்தல் ஆகியவற்றுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

பாதுகாப்பு திட்டத்துக்கான இந்த ஒப்பந்தத்தில், நிதியமைச்சகத்தில் பொருளாதார விவகாரத் துறையில், நிதி வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிப் பிரிவு கூடுதல் செயலாளர் திரு. சமீர் குமார் காரே,  ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியா பிரிவுக்கான டைரக்டர் கெனிச்சி யோக்கோயாமா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

முன்னதாக, நோய்த் தாக்குதலின் காரணமாக ஏற்படும் சுகாதார மற்றும் சமூக - பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவி அளிப்பதற்காக இந்தக் கடனை வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குநர்கள் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முன்னதாக ஏப்ரல் 9 ஆம் தேதி மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுடன், ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் திரு. மசாஸ்சுகு அசக்கவா தொலைபேசியில் பேசியபோது, இந்தக் கடன் வழங்குவதற்கு உறுதியளித்தார். நோய்த் தாக்குதல் காலத்தில் பொருளாதாரத் தாக்கத்தை சமாளிக்கவும், சுகாதாரத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த நிதி பயன்படும். மேலும் கைவசம் உள்ள நிதி ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, நாட்டில் துடிப்பான பொருளாதார வளர்ச்சிக்கான குறுகிய கால மற்றும் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தவும் உதவியாக இருக்கும். அரசின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பாதுகாப்பு திட்ட முதலாவது உதவியாக வழங்கப்படுகிறது.



(Release ID: 1619041) Visitor Counter : 245