சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்று மருத்துவ மனையாக மாற்றப்பட்ட எய்ம்ஸ் விபத்து சிகிச்சை மையத்தில் டாக்டர் ஹர்ஷவர்தன் ஆய்வு

Posted On: 26 APR 2020 7:24PM by PIB Chennai

புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஜெயப்பிரகாஷ் நாராயண் உயர் விபத்து சிகிச்சை மையத்துக்கு சென்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் ஆய்வு மேற்கொண்டார். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கென பிரத்யேகமாக மாற்றப்பட்டுள்ள அந்த மையத்தில், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் முதல்கட்ட சிகிச்சை, கொரோனா தொற்றை முறியடிக்க மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.

‘’ எய்ம்ஸ் ஜெயப்பிரகாஷ் நாராயண் உயர் விபத்து சிகிச்சை மையத்தில் 250 படுக்கைகளைக் கொண்ட தனிமை வார்டுடன் கோவிட் நோயாளிகளுக்கென பிரத்யேகமாகச் செயல்படும் மருத்துவமனையாக இயங்கி வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நோயாளிகளைத் தனிமைப்படுத்தி, நவீன மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று டாக்டர் ஹர்ஷவர்தன் கூறினார். ’’  எய்ம்ஸ் ஜெயப்பிரகாஷ் நாராயண் உயர் விபத்து சிகிச்சை மையத்தின் தீக்காயம் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு கோவிட்-19 உறுதி செய்யப்படாத நோயாளிகளுக்கு சோதனை மற்றும் காயம் ஆறவைத்தல் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது’’ என அவர் தெரிவித்தார். நவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, தனிநபர் வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு வார்டு பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார். மருத்துவமனையின் சலவைக் கூடங்களில் கிருமி நாசினி பராமரிப்பையும் அவர் ஆய்வு செய்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவிட்-19 நோயாளிகளுடன் கைபேசி மூலம் காணொலி காட்சி வழியாக அமைச்சர் கலந்துரையாடினார். ரோபோக்களின் உதவியுடன் பேசிய நோயாளிகளிடம் அவர் நலம் விசாரித்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் கிடைக்கும் வசதிகள் பற்றி அவர் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். மேலும், தேவையான வசதிகளை மேம்படுத்த இது உதவும்.  

மருத்துவமனையின் பல்வேறு வார்டுகள், சிகிச்சைகள் மற்றும் வசதிகளை ஆய்வு செய்து சோதனை மேற்கொண்ட மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், பிரத்யேக கோவிட் மருத்துவமனையின் செயல்பாடு குறித்து தமது மனநிறைவை வெளியிட்டார்.


(Release ID: 1618644) Visitor Counter : 221