அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19க்கு எதிரான இந்தியாவின் புதிய முயற்சி, இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்தல்

Posted On: 23 APR 2020 3:18PM by PIB Chennai

கோவிட்-19 மற்றும் இதர வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதில் உடலின் இயல்பான பாதுகாப்பு இயக்கமுறை (உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி) முக்கியமான பங்காற்றுகிறது.  கோவிட்-19 மற்றும் இதர வைரஸ்களை அடையாளம் கண்டறிந்து அதனை அழிப்பதில் விரைவாக, முதன்மையாக மற்றும் திறம்பட இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது எதிர்வினை ஆற்றுகிறது.  கோவிட்-19 அல்லது இதர வைரஸ்களுடன் தொடர்பு கொள்கின்ற பெரும்பாலான நபர்களுக்கு உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியானது போதுமான அளவில் இருந்தால், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை அல்லது தானாகவே கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வகையில் மிதமான அளவே நோய் ஏற்படும்.  அத்தகைய பாதுகாப்பை மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள மேக்ரோஃபேகஸ் (Macrophages), என்.கே செல் போன்ற செல்கள் தான் தருகின்றன.  கோவிட்-19 தொற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தடுப்பு மருந்துகள் மற்றும் ஆன்ட்டி வைரல் ஏஜென்ட்டுகளை கண்டுபிடிக்க உலகமே முயன்று கொண்டு இருக்கின்ற சூழலில் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக்கான கவுன்சில் (CSIR) ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இன்யூனோமாடுலேட்டர், செப்சிவாக்®  என்பதை உருவாக்க இருந்த நோக்கத்தை மாற்றிக் கொள்ள முடிவு எடுத்துள்ளது.  உடலில் உள்ளார்ந்து இருக்கின்ற நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தவும் கோவிட்-19 நோயாளிகள் விரைவில் குணமாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதனை தனது மில்லினியம் இந்தியத் தொழில்நுட்பத் தலைமைத்துவ முன்னெடுப்புத் திட்டம் (NMITLI) என்ற முன்னோடி திட்டத்தின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர் செயல்படுத்துகிறது.

செப்சிவாக்® (Sepsivac®)  கீழ்க்கண்டவாறு வினையாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  1. கோவிட்-19 நோயாளிகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் ஆகியோரின் உள்ளார்ந்த எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தல் மற்றும் அதன் மூலம் அவர்கள் நோய்க்கு ஆட்படாமல் பாதுகாத்தல்.
  2. மருத்துவனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லாத கோவிட்-19 நோயாளிகளை விரைவாக நோயில் இருந்து மீட்டெடுத்தல்.  ஐ.சி.யூவில் வைத்திருக்க வேண்டிய அளவிற்கு நோயின் தாக்கம் அதிகரிப்பதைத் தடுத்தல்.

இந்த இரண்டு புதிய மருத்துவமனை சார் முன்பரிசோதனைத் திட்டங்களுக்கும் இப்போது இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் (DCGI) அனுமதி அளித்துள்ளார்.  இந்த முன்பரிசோதனைத் திட்டமானது தற்செயல், மருத்துவர் – நோயாளி இருவருக்குமே தெரியாத சிகிச்சை முறை, இரட்டைக்குழு முறை, கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை முறை ஆகியவற்றின்படி மேற்கொள்ளப்படும். கோவிட்-19 காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளியிடம் இறப்புக் காரணிகளைக் குறைப்பதற்கான மருந்தின் திறனை மதிப்பீடு செய்யும் முன்பரிசோதனைக்கு ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.  அதனோடு இப்போது இந்த இரண்டு முன்பரிசோதனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



(Release ID: 1617503) Visitor Counter : 290