நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பொது முடக்கக் காலத்திலும் வடகிழக்கு பகுதிகளில் உணவு கிடைக்க இந்திய உணவுக் கழகம் விநியோகப் பணி

Posted On: 19 APR 2020 8:56PM by PIB Chennai

நாடு முழுவதும்  கடந்த மார்ச் 24ம் தேதி  முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் வடகிழக்கு மாநிலங்களில் உணவுப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு இந்திய உணவுக் கழகம் தேவையான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களின் நில அமைப்பு, போக்குவரத்தில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றையும் சமாளித்து அந்த மாநிலங்களில் அரிசி, கோதுமை ஆகிய உணவுப் பண்டங்களை இந்திய உணவுக் கழகம் தொடர்ந்து வழங்குகிறது. வடகிழக்கு மாநிலங்கள் உணவுப் பண்டங்களுக்குப் பொது விநியோகத் திட்டத்தையே சார்ந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

அதன்படி கடந்த 25 நாட்களில் 158 ரயில்களில் மொத்தம் 4,42,000 டன் உணவு தானியங்கள் (22 ஆயிரம் டன் கோதுமை, 4,20,000 டன் அரிசி) வழங்கப்பட்டுள்ளன. இது மாதந்தோறும் வழங்கப்படும் 80 ரயில் சரக்குகளை விட இரு மடங்கு ஆகும்.

வடகிழக்கு மாநிலங்களில் பொருள் போக்குவரத்து மிகவும் சவாலானதாகும். பல பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து வசதி இல்லாததே இதற்குக் காரணமாகும்.

ஏழு வடகிழக்கு மாநிலங்களில் உணவுப் பண்டங்களை விநியோகிக்க இந்திய உணவுக் கழகம் தனது 86 டெப்போக்களில் இருந்து உணவுப் பண்டங்களை வழங்கி வருகிறது. அவற்றில் 38 இடங்களுக்குத்தான் ரயில் மூலம் வழங்க முடியும். மேகாலயாவில் முழுக்க முழுக்க சாலை வழியாகத்தான் உணவுப் பண்டங்களை எடுத்துச் செல்ல முடியும். அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 13 டெப்போக்களில் இரு டெப்போக்களுக்கு ரயில் மூலமே விநியோகிக்கப்படுகிறது. நாகாலாந்தில் திமாப்பூரிலிருந்து ரயில் மூலமாகவும் மணிப்பூர் மாநிலத்தில் திமாபூரிலிருந்து சாலை மார்க்கமாகவும் விநியோகம் செய்யப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்துடன் சாலைப் போக்குவரத்தும் இணைந்துதான் பொருட்களை விநியோகிக்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.



(Release ID: 1616328) Visitor Counter : 248