விவசாயத்துறை அமைச்சகம்

பருப்பு வகைகள் எண்ணெய் வித்துகளை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள்

Posted On: 18 APR 2020 6:03PM by PIB Chennai

விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைப்பதை உறுதி செய்ய‌ தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் இந்திய உணவுக் கழகம் போன்ற மத்திய தொடர்பு நிறுவனங்களின் மூலமாக இந்திய அரசு பாடுபடுகிறது. 2020-21 ரபி பருவத்துக்கான பட்டியலிடப்பட்ட பொருள்களை விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு வாங்குவது பல மாநிலங்களில் தொடங்கி விட்டது. பொது முடக்க சமயத்தில் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதலுக்கான ஆதரவு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது. கோவிட்-19 பெரும் தொற்றை சமாளிக்க வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி விவசாயிகளுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன.

கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் மற்றும் ஹரியான ஆகிய மாநிலங்களில் 2020-21 ரபி பருவத்துக்கான பருப்பு வகைகள், எண்ணை வித்துகளை விவசாயிகளிடம் இருந்து ஆதரவு விலை திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு வாங்குவது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏப்ரல்  16ம் தேதி வரை, 1,33,987.65 மெட்ரிக் டன் பருப்பு வகைகள்,  29,264.17 மெட்ரிக் டன் எண்ணை வித்துகள் ரூ.784.77 கோடிக்கு தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு / இந்திய உணவுக் கழகத்தால் வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,14,338 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். பொது முடக்கத்தின் போது 97,337.35 மெட்ரிக் டன்கள் ரபி பருப்பு வகைகள்,  எண்ணை வித்துகள் ஆதரவு விலை திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ளன.

விலையின் நிலைத்தன்மை நிதியம் திட்டத்தின் கீழும், பருப்புகளின் இடையக பங்குகளுக்கும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பால் விவசாயிகளிடம் இருந்து துவரம் பருப்பு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு வாங்கப்படுகின்றது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா,  தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 2019- 20 கரிப் பருவத்துக்கான துவரம் பருப்பு கொள்முத‌ல், ஆதரவு விலை திட்டம் விலை நிலைத்தன்மை நிதியத்தின் கீழ் நடைபெறுகிறது. 2019 - 20 கரிப் பருவத்துக்கான மொத்த துவரம் பருப்பு கொள்முதல் 5,32,849 மெட்ரிக் டன்கள் ஆகும். இதில், 29,328.62 மெட்ரிக் டன் துவரம் பருப்பு பொது முடக்கத்தின் போது கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டவுடன், ராஜஸ்தானின் கோட்டா வட்டாரத்தில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணை வித்துகளின் கொள்முதல் நிறுத்தப்பட்டது. ஏப்ரல் 15ம் தேதி  முதல், கோட்டா வட்டாரத்தில் உள்ள மையங்கள் செயல்படத் தொடங்கின. இன்னும் அதிக எண்ணிக்கையில் மையங்கள் வரும் நாட்களில் செயல்பட தொடங்கும். ராஜஸ்தானின் மீதமுள்ள வட்டாரங்களில் மே மாத முதல் வாரத்தில் இருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு அதிக பட்சம் 10 விவசாயிகள் கொள்முதல் மையங்களுக்கு அழைக்கப் படுகின்றனர். அதற்கேற்றபடி அவர்களுக்கு தகவல் அனுப்பப்படுகிறது.

கடுகு விதைகள் மற்றும் பருப்பு வகைகளின் கொள்முதல் ஹரியானாவில் உள்ள 163 மையங்களில்  ஏப்ரல்  15 ம் தேதி முதல் தொடங்கியது. சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக, குறைந்த அளவிலான விவசாயிகளே தினமும் அழைக்கப்படுகின்றனர். 10,111 விவசாயிகளிடம் இருந்து 27,276.77 மெட்ரிக் டன் கடுகு விதைகள் முதல் இரண்டு நாட்களில் கொள்முதல் செய்யப்பட்டன.

மத்திய பிரதேசத்தில் பருப்பு வகைகள், மைசூர் பருப்பு மற்றும் கடுகு கொள்முதலுக்கான தயாரிப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. தங்கள் பொருள்களை கொள்முதல் மையங்களுக்கு கொண்டு வரும்படி விவசாயிகளுக்குத் தகவல் தெரிக்கப்பட்டுள்ளது.



(Release ID: 1615977) Visitor Counter : 254