பாதுகாப்பு அமைச்சகம்

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புத் துறையின் பொதுத் துறை நிறுவனங்கள், ராணுவத் தளவாட போர்டுகள் தீவிரம்

Posted On: 18 APR 2020 10:20AM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான மக்கள் நிர்வாகப் பணிகளில் பாதுகாப்புத் துறையின் பொதுத் துறை நிறுவனங்கள் (டி.பி.எஸ்.யூ.) மற்றும் ராணுவத் தளவாட தொழிற்சாலை வாரியம் (ஓ.எஃப்.பி.) ஆகியவை தங்கள் பங்கை சிறப்பாக ஆற்றி வருகின்றன. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழான பாதுகாப்பு உற்பத்தித் துறையின் முக்கிய நிறுவனங்கள் (டி.டி.பி.) தங்கள் தொழில்நுட்ப அறிவு, அலுவலர் பலம், ஆதார வளம் ஆகியவற்றை, இந்த வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளன.

பாதுகாப்புத் துறையின் பொதுத் துறை நிறுவனங்கள் (டி.பி.எஸ்.யூ.) மற்றும் ராணுவத் தளவாட தொழிற்சாலை வாரியம் (ஓ.எஃப்.பி.)  ஆகியவற்றின் முயற்சிகளால் கிடைத்த சில பலன்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

பாதுகாப்புத் துறை பொதுத் துறை நிறுவனமான பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்.) நிறுவனம் தீவிர கண்காணிப்புப் பிரிவில் 3 படுக்கை வசதிகள் மற்றும் 30 படுக்கைகளுடன் வசதி வார்டுகளை தனிமைப்படுத்தல் சிகிச்சைக்காக உருவாக்கியுள்ளது. இதுதவிர 30 அறைகள் கொண்ட ஒரு கட்டடமும் இதற்காக தயார்படுத்தப் பட்டுள்ளது. மொத்தத்தில் எச்.ஏ.எல். வளாகத்தில் 93 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த நிறுவனம் 25 முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகளை (பி.பி.இ.) தயாரித்து, கோவிட்-19 சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெங்களூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளின் டாக்டர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும் 160 ஏரோசால் பெட்டிகளை தயாரித்து பெங்களூரு, மைசூர், மும்பை, புனே, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில், அடுத்த 2 மாதங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு 30 ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்க பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (பி.இ.எல்.) முன்வந்துள்ளது.

2020 ஏப்ரல் 20 - 24க்குள் இந்த நிறுவனம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பைத் தொடங்கும் என்று தெரிகிறது. உத்தேச மதிப்பீட்டின்படி ஏப்ரல் மாதத்தில் 5 ஆயிரம் வென்டிலேட்டர்களையும், மே மாதத்தில் 10 ஆயிரம் வென்டிலேட்டர்களையும், ஜூன் மாதத்தில் 15 ஆயிரம் வென்டிலேட்டர்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் உதவியுடன், உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டே வென்டிலேட்டர்களைத் தயாரிக்கும் முயற்சியிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கான்பூர், ஷாஜஹான்புர், ஹஜ்ரத்பூர் (பெரோசாபாத்), சென்னை ஆகிய இடங்களில் உள்ள ராணுவத் தளவாட உற்பத்திக் குழும தொழிற்சாலைகளில் முழு உடல் உடைகள் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இப்போது ஒரு நாளுக்கு 800 உடைகள் தயாரிக்கப்படுகின்றன. இதை தினமும் 1,500 என்ற அளவிற்கு உயர்த்துவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. உடல் முழு உடைகள் மற்றும் முகக் கவச உறைகளின் செயல்திறனைப் பரிசோதிப்பதற்கு, மூன்று இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. தரநிலைகளை பராமரிப்பதைக் கருத்தில் கொண்டு, கவச உறைகள் தயாரிப்பில் இவையும் பயன்படுத்தப்படும்.

மையமாக்கப்பட்ட கொள்முதல் செய்வதற்கான முன்னோடி அமைப்பாக மத்திய அரசு நியமித்துள்ள எச்.எல்.எல். நிறுவனம் 28 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினிக்கு ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், இப்போது ராணுவத் தளவாட தொழிற்சாலைகள் 7,500 லிட்டர் தயாரித்து வருகின்றன.

ரத்த ஊடுருவல் பரிசோதனைக்கு சென்னை மற்றும் கான்பூரில் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.



(Release ID: 1615693) Visitor Counter : 221