சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கையாள்வதில் தற்போதைய நிலைமை, நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களின் குழு கலந்தாய்வு.
உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கச் செய்ய வேண்டியது முக்கியம்: அமைச்சர்களின் குழு.
கோவிட்-19 பாதிப்பின் சுகாதாரச் சவால்களை சந்திப்பதற்கு உடனடியாக சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது முக்கியம் என டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தல்; உற்பத்திகளில் தரம் மற்றும் தரநிலைகளைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தக் கோரிக்கை.
Posted On:
17 APR 2020 5:30PM by PIB Chennai
கோவிட்-19 நோய்த் தாக்குதல் குறித்து அமைச்சர்களின் 12வது கூட்டம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்த்தன் தலைமையில் நிர்மான் பவனில் இன்று காணொளிக் காட்சி மூலம் நடந்தது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் எஸ். பூரி, வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், உள்துறை இணை அமைச்சர் திரு. நித்யானந்த ராய், கப்பல் போக்குவரத்து , ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார் சௌபே ஆகியோரும், நிதிஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் கே. பால், ராணுவத் தலைமைத் தளபதி திரு. பிபின் ராவத் ஆகியோரும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
கோவிட்-19 நோய்க் கட்டுப்பாடு குறித்து அமைச்சர்களின் குழு விரிவாக ஆய்வு செய்தது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நோய் வராமல் தடுப்பதற்கான தனி நபர் இடைவெளி பராமரித்தலில் தற்போதைய நிலைமை, கோவிட்-19 பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகள் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கோவிட்-19 நோய்த் தாக்குதலை எதிர்கொள்ள அவசரகாலத் திட்டங்களை உருவாக்கி, பலப்படுத்தி வைத்துக் கொள்ளுமாறு அனைத்து மாவட்டங்களும் அறிவுறுத்தப் பட்டிருப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதற்கென பிரத்யேக மருத்துவமனை வசதிகள் செய்தல், சிகிச்சை மையங்களில் தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகள் (PPE), வென்டிலேட்டர்கள் மற்றும் இதர அத்தியாவசிய சாதனங்கள் கிடைக்கச் செய்தல் உள்ளிட்டவற்றுக்குப் போதிய நிதி ஒதுக்கும் வகையில் மாநிலங்களின் திறன்களை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர்கள் விவாதித்தனர். ஏற்கெனவே தரப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கோவிட்-19 மையங்கள் / மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளன.
கோவிட்-19 பாதித்தவர்களில் உயிரிழப்பு அளவு சுமார் 3 சதவீதமாகவும், குணமானவர்கள் அளவு சுமார் 12 சதவீதமாகவும் உள்ளன என்றும், பெரும்பாலான மற்ற நாடுகளைவிட ஒப்பீட்டளவில் இது மேன்மையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொகுப்பு மேலாண்மை மற்றும் நோய்க் கட்டுப்படுத்தல் அணுகுமுறையுடன், முடக்கநிலை அமலும் இதற்குக் காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மருத்துவப் பரிசோதனை உத்திகள் பற்றியும், நாடு முழுக்க பரிசோதனைக்கான உபகரணத் தொகுப்புகள் கிடைக்கும் நிலை பற்றியும், நோய்த் தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகள், தொகுப்பு மேலாண்மை குறித்தும் இந்தக் குழு ஆய்வு செய்தது.. 170 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக (நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள்) குறிப்பிடப்பட்டுள்ளன என்றும், 123 மாவட்டங்களில் பெருமளவு பாதிப்பு உள்ளதாகவும், 47 மாவட்டங்களில் தொகுப்புநிலை பாதிப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நோய்ப் பரவல் தீவிரமாக இல்லாத 207 மாவட்டங்கள் உள்ளதாகவும், 353 மாவட்டங்களில் நோய்த் தொற்று இல்லாததால், அவை பசுமை மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 14 நாட்களில், புதிதாக நோய் பாதிப்பு ஏதும் பதிவாகாவிட்டால், சிவப்பு மண்டல மாவட்டப் பகுதி, ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்படும் என்றும், அடுத்த 14 நாட்களுக்கு புதிய பாதிப்பு வராவிட்டால் அது பசுமை மண்டலத்துக்கு மாறிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பி.பி.இ. பாதுகாப்பு உடைகள், முகக்கவச உறைகள், வென்டிலேட்டர்கள், ரசாயன மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய சாதனங்களின் தேவைகள் போதிய அளவுக்கு கையிருப்பு உள்ளதா என்பது பற்றி அமைச்சர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பி.பி.இ. கவச உடைகள் தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு ஆர்டர்கள் தரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வென்டிலேட்டர்களுக்கும் ஆர்டர் தரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கோவிட்-19 பரிசோதனையில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவப் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை பற்றியும், இவற்றின் மூலம் தினமும் எத்தனை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்ற தகவலும் முன்வைக்கப்பட்டது.
அறிவியல் தொழில்நுட்பத் துறை, உயிரித் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவை சார்பில் கோவிட் நோய் கண்டறிதல், ரசாயன மருந்துகள் மற்றும் தடுப்பூசி மருந்துகள் தயாரிப்புக்கான முயற்சிகள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ICMR) மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை ஒத்துழைப்புடன், கோவிட்-19 நோய்த் தாக்குதல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சர், அண்மையில் அறிவியல் தொழிலக ஆராய்ச்சி மையத் (CSIR) தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் சி. மாண்டே மற்றும் இதர அறிவியல் தொழிலக ஆராய்ச்சி மைய ஆய்வகங்களின் இயக்குநர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். கோவிட்-19 பரவலைத் தடுப்பதில் தொழில்நுட்பத் தீர்வுகள் காண்பதில் அறிவியல் தொழிலக ஆராய்ச்சி மையம் மற்றும் அதன் 38 பரிசோதனை நிலையங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி அப்போது அவர் ஆய்வு செய்தார். உரிய காலத்தில் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது தான் முக்கியம் என்று அமைச்சர்களின் குழு வலியுறுத்தியது.
பி.பி.இ. பாதுகாப்பு உடைகள், முகக்கவச உறைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற சாதனங்கள் தயாரிப்பதில் தரம் மற்றும் தரநிலைகளில் எந்தவிதமான குறைபாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அமைச்சர்கள் குழுவின் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் கேட்டுக்கொண்டார். இவை மீறப்பட்டால் அந்த உற்பத்தியாளர்கள் மீது கடுமையான தண்டனை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் யோசனை கூறினார்.
யாரெல்லாம் எந்த வகையான முகக்கவச உறைகளை அணியலாம், பி.பி.இ. உடல் கவச உடைகளை யார் அணியலாம் என்பவை பற்றிய விரிவான வழிகாட்டுதல்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்பதை மீண்டும் நினைவுபடுத்திய டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், ஐ.இ.சி. பிரச்சாரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சமூக இடைவெளி பராமரிப்பு தான் கோவிட்-19க்கு எதிரான சிறந்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக உள்ளது என்று கூறிய அவர், முடக்கநிலை அமல் காலத்தில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட சுகாதாரத்துக்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுவாச மண்டல சுகாதாரத்துக்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
(Release ID: 1615448)
Visitor Counter : 251
Read this release in:
English
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam