பாதுகாப்பு அமைச்சகம்
கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதில் இராணுவ மருத்துவச் சேவைகள் பிரிவின் பணிகளை பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்
Posted On:
17 APR 2020 3:04PM by PIB Chennai
இராணுவ மருத்துவச் சேவைகள் (AFMS) பிரிவின் செயல்பாடுகள் மற்றும் கோவிட்-19 தொற்றுப்பரவலைத் தடுப்பதில் சிவில் அதிகாரிகளுக்கு அவர்கள் செய்யும் உதவிகளை இன்று நடந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் அஜய் குமார், தலைமை இயக்குநர் லெப்.ஜெனரல் அனூப் பானர்ஜி, தலைமை இயக்குநர் (நிறுவனம் & ஊழியர்) லெப்.ஜெனரல் ஏ.கே.ஹுடா, மருத்துவச் சேவைகள் தலைமை இயக்குநர் (கப்பல் படை) சர்ஜன் வைஸ் அட்மிரல் எம்.வி.சிங் மற்றும் மருத்துவச் சேவைகள் தலைமை இயக்குநர் (விமானப் படை) ஏர் மார்ஷல் எம்.எஸ்.புட்டோலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடப்புத் தொற்றுப்பரவல் சூழலில், இராணுவப் படையினர்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனைகள், தனிமைப்படுத்தல் இடங்களில் சிவில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள், மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டது மற்றும் சுகாதாரப் பராமரிப்பு உதவிகளை வழங்கியது குறித்து அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சருக்கு எடுத்துரைத்தனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப பொதுமக்களைத் தனிமைப்படுத்தி வைக்கும் இடவசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது இத்தாலி, ஈரான், சீனா, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேற்றி அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் ஆறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதர நிலையங்களிலும் தனிமைப்படுத்தி வைக்கும் வசதிகள் செய்யப்பட்டு அவை தயாராக உள்ளன. பிப்ரவரி 1, 2020 முதல் இதுவரையிலும் இத்தகைய தனிமைப்படுத்தும் இடங்களில் 1,738 பேர் இருந்துள்ளனர்.
ஐ.சி.எம்.ஆர் உதவியுடன் ஆறு வைரஸ் பரிசோதனைக் கூடங்கள் உருவாக்கப்பட்டு அவை பல்வேறு இராணுவ மருத்துவச் சேவைகள் மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகின்றன. பாதுகாப்பு அமைச்சர் நெருக்கடி கால நிதிசார் அதிகாரங்களை மருத்துவச்சேவைகளின் தலைமை இயக்குநர்களுக்கு வழங்கி இருந்தார். மேலும் அடுத்த நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கும் கூட இந்த நிதிசார் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனால் முகக்கவசங்கள், கிருமி நாசினிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE), வென்ட்டிலேட்டர்கள் முதலானவற்றை கொள்முதல் செய்வது சிரமம் இல்லாமலும் வேகமாகவும் நடைபெற்று வருகிறது என்று இராணுவ மருத்துவச் சேவைகள் பிரிவு தலைமை இயக்குநர் லெப்.ஜெனரல் அனூப் பானர்ஜி அமைச்சருக்குத் தெரிவித்தார்.
கோவிட்-19 நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைத்தல் மற்றும் அவர்களுக்குச் சிகிச்சை அளித்தல் ஆகிய நோக்கங்களுக்காக 50 இராணுவ மருத்துவச் சேவை மருத்துவமனைகள் பிரத்யேக கோவிட் மருத்துவமனைகளாக செயல்படுவதற்கும், வழக்கமான மருத்துவமனையில் ஒரு பிரிவை கோவிட் மருத்துவப் பிரிவாக மாற்றுவதற்கும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனைகள் அனைத்திலும் மொத்தமாக 9,038 நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் உள்ளன. மாநில சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை அதிகப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவியாக இந்த மருத்துவமனைகளில் இராணுவத்தினர் அல்லாத கோவிட்-19 நோயாளிகளும் அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவிட் நோயாளிகளைக் கையாளுவதற்கான செயல் உத்திகளை குவைத் அரசாங்கம் உருவாக்குவதற்கு உதவும் வகையில் 15 உறுப்பினர்கள் கொண்ட மருத்துவக்குழு ஒன்று மூலக்கூறு அளவில் உருப்பெருக்கிக் காட்டும் பி.சி.ஆர் இயந்திரம் (PCR machines) மற்றும் நோய் கண்டறியும் பரிசோதனைக் கருவித் தொகுப்புகளுடன் குவைத்துக்குச் சென்றுள்ளது.
இராணுவ மருத்துவச் சேவைகள் பிரிவு முன்னெடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளைப் பாராட்டிய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கோவிட்-19 எழுப்பிள்ள சவால்களை எதிர்கொண்டு அதனைத் தீர்ப்பதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் குடிமைப்பணி அதிகாரிகளுக்கு செய்யுமாறு அறிவுறுத்தினார்.
(Release ID: 1615403)
Visitor Counter : 207