பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு. நரேந்திர மோடி, பூட்டான் பிரதமருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடல்

Posted On: 16 APR 2020 7:53PM by PIB Chennai

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் பூட்டான் பிரதமர் மாண்புமிகு டாக்டர் லோட்டாய் ட்ஷெரிங் உடன் கலந்துரையாடினார்.

கோவிட்-19 நோய்த்தொற்றை அடுத்து இந்தப் பிராந்தியத்தில் உள்ள நிலைமை குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தனர். இதன் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.

பூட்டானில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பூட்டான் மன்னரும், டாக்டர் ட்ஷெரிங்கும் முன்னின்று மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் திரு. மோடி பாராட்டு தெரிவித்தார்.

இந்தியா போன்ற பரந்த நாட்டில் கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் அதே வேளையில், பிராந்திய அளவில் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு முன்முயற்சி எடுத்ததற்காக பிரதமர் திரு. மோடிக்கு டாக்டர் ட்ஷெரிங் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் மார்ச் 15ஆம் தேதி ஒப்புக்கொள்ளப்பட்டபடி சிறப்பு ஏற்பாடுகளை அமல் செய்வதில் இருக்கும் முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்தியா - பூட்டான் இடையில் உள்ள காலப் பழமையுடைய சிறப்பியல்பான உறவுகளை பிரதமர் திரு. மோடி நினைவுகூர்ந்தார். நோய்த்தொற்று காரணமாக சுகாதாரம் மற்றும் பொருளாதாரத் துறையில் ஏற்படும் பாதிப்புகளை முடிந்தவரையில் குறைப்பதற்கு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என்றும் பிரதமர் திரு. மோடி உறுதியளித்தார்.

பூட்டான் மன்னரின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துக் கொண்டார். டாக்டர் ட்ஷெரிங் மற்றும் பூட்டான் மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்துக்கும் பிரதமர் வாழ்த்து கூறினார்.



(Release ID: 1615295) Visitor Counter : 168