சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைத் தகவல்கள்

Posted On: 15 APR 2020 6:32PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கையாள நாட்டில் ஒவ்வொரு மாவட்டமும் பின்வருமாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன:

  • நோய் பரவ அதிக வாய்ப்புள்ள (ஹாட்ஸ்பாட்) மாவட்டங்கள்
  • பாதிப்புகள் பதிவான, நோய் பரவ அதிக வாய்ப்பில்லாத (ஹாட்ஸ்பாட் அல்லாத) மாவட்டங்கள், மற்றும்
  • பசுமை மண்டல மாவட்டங்கள்.

நோய் பரவ அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள் என்பவை, இப்போது அதிக அளவில் நோய்த் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ள அல்லது புதிதாக நோய்த் தாக்குதல் கண்டறியப்படும் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாவட்டங்கள்- அதாவது, பாதிப்பு எண்ணிக்கை குறைந்த காலத்தில் இரட்டிப்பாதல்.

அனைத்து தலைமைச் செயலாளர்கள், சுகாதாரத் துறை செயலாளர்கள், டிஜிபிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், சி.எம்.ஓ.க்கள் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிற அதிகாரிகளுடன் அமைச்சரவைச் செயலாளர் இன்று காணொளிக் காட்சி மூலம் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, நோய் பரவ அதிக வாய்ப்புள்ள இடங்கள் மற்றும் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் உத்திகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், பெரிய அளவிலான நோய்க் கட்டுப்பாட்டு உத்திகள் மற்றும் தொகுப்புக் கட்டுப்பாட்டு உத்திகள் பற்றியும் விரிவாக அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பாதிப்பைக் கட்டுப்படுத்தும் மண்டலம் மற்றும் இடைமுக மண்டலத்தின் எல்லையை எப்படி வரையறுப்பது என்று இந்த உத்திகளில் விளக்கப்பட்டது. நோய் கட்டுப்படுத்தும் மண்டலங்களில், அத்தியாவசிய சேவைகள் தவிர, மற்ற நகர்வுகள் மற்றும் செயல்பாடுகள் தடை செய்யப்படும். பாதிப்புக்கு உள்ளானவர்கள் கூர்ந்து மேற்பார்வை செய்யப்பட்டு, நோய் கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள சிறப்புக் குழுவினரால், பரிசோதனை வரையறைகளுக்கு உட்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த மண்டலங்களில், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும். அத்துடன் ஐ.எல்.ஐ. (இன்புளூயன்ஸா போன்ற உடல்நலக் குறைபாடு) மற்றும் சாரி (தீவிர மூச்சுத் திணறல் உடல் நலக் குறைபாடு) உள்ளவர்கள் யாரும் இருந்தால், அனைத்து மருத்துவ வசதிகளின் உதவியுடன் இடைமுக மண்டலங்களுக்கான பரிசோதனைகள் நடத்தப்படும்.

அனைத்துத் தொடர்புகளையும் தடமறியவும், வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தவும் சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்படும். இந்தக் குழுக்களில் சுகாதாரப் பணியாளர், உள்ளூர் வருவாய் அலுவலர், கார்ப்பரேஷன் அலுவலர், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, நேரு யுவ கேந்திரா மற்றும் இதர தன்னார்வலர்கள் இடம் பெற்றிருப்பார்கள்.

மருத்துவமனைகளைப் பின்வருமாறு வகைப்படுத்துமாறும் மாவட்டங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன:

  • லேசான அல்லது மிக லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கான கோவிட் சிகிச்சை மையங்கள்,
  • ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள மருத்துவ ரீதியில் மிதமான பாதிப்பு உள்ளவர்களாகக் குறிப்பிடப்படுபவர்களுக்கான கோவிட் ஆரோக்கிய மையங்கள்
  • வென்டிலேட்டர் வசதி தேவைப்படும் மோசமான நிலையில் நிலையில் உள்ளவர்களுக்கான பிரத்யேக தீவிர கோவிட் மருத்துவமனைகள்.

கோவிட் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துமாறு மாநிலங்கள், மாவட்டங்கள் விசேஷமாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. எய்ம்ஸ் கால் சென்டர்கள் ஒத்துழைப்புடன், ஒவ்வொரு நோயாளியின் மருத்துவ மேலாண்மை குறித்தும் தினமும் மாவட்ட அளவில் கண்காணிக்கப்பட வேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் பயன்பாடுகள் தவிர,,  தனி நபர் இடைவெளியைப் பராமரித்தலை ஊக்குவித்தல், கை கழுவுதல், கழிவறை சுத்தம் போன்ற பழக்கங்களை பார்மசூட்டிகல் அல்லாத குறுக்கீடுகளாக ஊக்குவிக்க வேண்டும் என்றும் மாவட்டங்கள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளன.

இதுவரையில் நோய்த் தொற்று பாதிப்பு எதுவும் பதிவாகாத மாவட்டங்களும், தொகுப்பு நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டங்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. நோய் பரவுதல் சங்கிலித் தொடர் பிணைப்பை தகர்ப்பதற்கு, தொடர்புத் தடமறிதல், கண்காணித்தல் மற்றும் மருத்துவ மேலாண்மையில் கவனம் செலுத்தப்பட வேண்டும். நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தடுப்பு செயல் திட்டத்தை ஒரே மாதிரியாகப் பின்பற்றுமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று புதிதாக 1076 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதை  அடுத்து, பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்-19க்கு நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 377 ஆக உள்ளது. 1306 பேர் குணமாகியுள்ளனர் / குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.



(Release ID: 1614821) Visitor Counter : 267