குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஊரடங்கின் போது விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும்- மத்திய, மாநில அரசுகளுக்கு குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்

Posted On: 15 APR 2020 5:53PM by PIB Chennai

தேசிய ஊரடங்கின் போது, விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை குடியரசு துணைத்தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஊரடங்கு முடக்க காலத்தில், வேளாண் நடவடிக்கைகளை சுமுகமாக மேற்கொள்ளவும், வேளாண் விளைபொருள்களை சந்தைக்குக் கொண்டு செல்லும் போக்குவரத்து வசதிகளை செய்து தரவும் உதவ வேண்டுமென்று அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
 

மத்திய விவசாயத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமருடன், குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, விவசாயத்தைப் பாதுகாக்க விவசாய அமைச்சகம் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளை  குடியரசு துணைத்தலைவர் பாராட்டினார். வேளாண் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

‘’விவசாயத்தில் உற்பத்தியாளர்கள் முறைப்படுத்தப்படாதவர்கள் என்பதால், அவர்களது கருத்துக்கள் கேட்கப்படாமலேயே போய்விடுகின்றன. எனவே, அவர்களது நலன்களைப் பாதுகாப்பது அரசுகளின் கடமையாகும்’’, என்று திரு. நாயுடு கூறினார். இது மாநிலங்களின் முக்கிய கடமை என்றாலும், மத்திய அரசு அவ்வப்போது, மாநிலங்களுக்கு வழிகாட்டுவதுடன், தேவையான உதவிகளையும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அழுகும் விவசாய விளைபொருள்கள் விஷயத்தில் அதிக கவனம் தேவை என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர்,  இந்த அழுகும் பொருள்களைப் பதப்படுத்தி சேமித்து வைக்கவும், சந்தைப்படுத்தவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்துதல் குழு சட்டத்தை பொருத்தமான முறையில், நடைமுறைப்படுத்தி, வேளாண் உற்பத்தி பொருள்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும், அப்போது தான் மண்டிக்குச் செல்லுமாறு யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் அவர் யோசனை தெரிவித்தார். இந்த நடவடிக்கை, நுகர்வோருக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர வேளாண் பொருள்கள் போதுமான அளவில் கிடைப்பதற்கு உதவும் என்று திரு. நாயுடு கூறினார்.



(Release ID: 1614812) Visitor Counter : 158