சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஒவ்வொரு கருமேகத்திலும் ஒரு வெள்ளைக்கோடு எப்போதும் இருக்கும்” – டாக்டர் ஹர்ஷவர்த்தன்
Posted On:
14 APR 2020 9:31PM by PIB Chennai
இந்திய தொழிலக கூட்டமைப்பின் (CII) ஏற்பாட்டின் பேரில், 50-க்கும் மேற்பட்ட இந்திய தொழில்துறை தலைவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தன் இன்று விரிவான ஆலோசனை நடத்தினார்.
கோவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் குறித்து தொழில் துறையினரிடம் டாக்டர் ஹர்ஷவர்த்தன் எடுத்துரைத்தார். தொழில் துறையினருடன் பேசும் போது, விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சுகாதாரத்துறையினர் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து அமைச்சர் பதிலளித்தார். அவர் கூறும்போது, “ஒவ்வொரு கருமேகத்துக்கும் எப்போதுமே வெள்ளைக் கோடு இருக்கும். (கெடுதலிலும் ஒரு நன்மை உண்டு என்ற பொருள் தரும் தொடர்) தற்போதைய சூழலில், நாம் அதிக ஆர்வத்துடன் இருக்க வேண்டும். இதன்மூலம், பீனிக்ஸ் பறவைபோல, இந்தப் பிரச்சினையிலிருந்து நம்மால் மீண்டுவர முடியும்,” என்றார். மேலும் அவர், “உலகின் நவீன வரலாற்றில் இருண்ட காலமாக இது திகழ்கிறது. இதிலிருந்து மனித சமூகம் மீண்டு வர வேண்டும் மற்றும் அதிலிருந்து நல்ல செயல்களை எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.
கோவிட் வைரஸ் பரவலைத் தொடர்ந்து, சுகாதாரத்துறையில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும், தாங்கள் அதிக ஆர்வமுடன் செயல்பட வேண்டும் என்றும் டாக்டர் ஹர்ஷவர்த்தன் கேட்டுக் கொண்டார். இதன்மூலம், தொற்றுப் பரவலை சிறப்பாக எதிர்கொள்வதுடன், முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார உபகரணங்களை வழங்குவதில் சுயசார்புடனும், சூழ்நிலைக்கு ஏற்பவும் இந்தியாவால் செயல்படமுடியும். தொழில்துறை நடவடிக்கைகளை படிப்படியாகவும், பாதுகாப்பான முறையிலும் எவ்வளவு விரைவில் தொடங்குவது என்பது குறித்து அரசு ஆய்வுசெய்து வருவதாக தொழில் துறையினரிடம் அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார்.
(Release ID: 1614644)
Visitor Counter : 186