உள்துறை அமைச்சகம்

மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும் சரக்கு, லாரிகள் போக்குவரத்து, கிடங்குகள் / குளிர்பதன சேமிப்பு நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் போக்குவரத்து எளிதாக நடைபெறுவதை உறுதி செய்ய முடக்கநிலை அமலுக்கான வழிகாட்டுதல்களைக் கடுமையாகப் பின்பற்றுமாறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

Posted On: 12 APR 2020 10:22PM by PIB Chennai

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில்  மாநில / யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் அனைத்து மத்திய அமைச்சகங்கள் / மத்திய அரசுத் துறைகளும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களின் தொகுப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பின்வரும் இணையவழி சுட்டி தொடர்பில் அதைக் காணலாம்: https://mha.gov.in/sites/default/files/PR_Consolidated%20Guideline%20of%20MHA_28032020%20%281%29_0.PDF

நாட்டின் சில பகுதிகளில் வழிகாட்டுதல்கள் மற்றும் தெளிவுரைகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை என அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்திருப்பதால், மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும் சரக்கு, லாரிகள் போக்குவரத்து, கிடங்குகள் / குளிர்பதன சேமிப்பு நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் போக்குவரத்து எளிதாக நடைபெறுவதை உறுதி செய்ய முடக்கநிலை அமலுக்கான வழிகாட்டுதல்களைக் கடுமையாகப் பின்பற்றுமாறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. குறைபாடுகள் குறித்து வந்துள்ள தகவல்கள்:

 

  • அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற சரக்குகள் கொண்டு செல்லும் லாரிகள் தடுக்கப்படுதல்;
  • அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட இதர பொருள்கள் உற்பத்திக்குத் தேவைப்படும் தொழிலாளர்கள் தங்களின் பயணத்துக்கான அத்தாட்சிகள் / அனுமதிகளைப் பெறாமல் செல்லுதல்;
  • மேலே குறிப்பிட்ட இரண்டு பிரிவுகளிலும் ஒரு மாநிலம் / யூனியன் பிரதேச அதிகாரிகள் அளித்த அத்தாட்சிகள் / அனுமதிச் சான்றுகளை அடுத்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் அதிகாரிகள் மதிக்காத காரணத்தால், மாநிலங்களுக்கு இடையில் சரக்குகள் மற்றும் தொழிலாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுதல்; மற்றும்
  • குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் சரக்குக் கையிருப்பு வைக்கும் கிடங்குகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி மறுப்பு.

 

அமலாக்க நிலையில் தெளிவு ஏற்படுத்தும் நோக்கில், பின்வரும் வழிகாட்டுதல்களை பல நிலைகளில் உள்ள அதிகாரிகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது:

  • மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையில் அனைத்து சரக்கு லாரிகள் மற்றும் இதர சரக்குகள் எடுத்துச் செல்லும் வாகனங்களில், ஒரு ஓட்டுநர் மற்றும் இன்னொருவருடன் அனுமதிக்கலாம். அந்த ஓட்டுநரிடம் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
  • சரக்குகளை எடுப்பதற்குச் செல்லும் அல்லது சரக்குகளை இறக்கிவிட்டு திரும்பும் வழியில், மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையில் செல்லும்  காலி சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும்.
  • உள்ளூர் அதிகாரிகள் லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
  • அனுமதிக்கப்பட்ட தொழில் / வணிக செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் பணியிடத்துக்குச் சென்று வருவதற்குத்  தேவையான உதவிகளை உள்ளூர் அதிகாரிகள் செய்து தர வேண்டும்.
  • ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் சுங்கத் துறை நிர்வாகங்கள் தங்களுடைய அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது உறுதி செய்யப்பட வேண்டும்.
  • அனுமதிக்கப்பட்ட பிரிவுகளில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கும் விஷயத்தில், அதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்படுகிறது.
  • கோதுமை மாவு, பயறுகள், உணவு எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் சேவையில் ஈடுபட்டுள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் எந்த இடையூறும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்.
  • கிடங்குகள் / குளிர்பதன சேமிப்பு நிலையங்கள் தாராளமாக செயல்பட அனுமதிக்க வேண்டும், சரக்கு லாரிகள் வந்து செல்வதற்கான சலுகைகளும் அளிக்கப்பட வேண்டும்.

 

 



(Release ID: 1613814) Visitor Counter : 126