அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கோவிட்-19க்கு ரத்த பிளாஸ்மா தெரபி முறையை பயன்படுத்துதல் பற்றி ஆராய்ச்சி
நோயுற்று மீண்டவரின் நோய் எதிர்ப்பாற்றலைப் பயன்படுத்தி வேறொரு நோயாளியை குணமாக்க இந்த சிகிச்சை முறை முயற்சிக்கிறது
Posted On:
11 APR 2020 12:26PM by PIB Chennai
கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு புதுமையான வழியில் சிகிச்சை அளிக்கும் துணிச்சலான வழிமுறையைப் பின்பற்ற, அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தேசிய முக்கியத்துவ மையமான ஸ்ரீசித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிலையத்துக்கு (SCTIMST) அனுமதி கிடைத்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் ``கன்வலசன்ட்-பிளாஸ்மா தெரபி'' எனப்படும் இந்த சிகிச்சை முறையில், ஏற்கெனவே நோயுற்று குணமடைந்தவரின் உடலில் உருவாகியிருக்கும் நோய் எதிர்ப்பாற்றலை ப்பயன்படுத்திக் கொள்ளும் நடைமுறையைப் பின்பற்றுவதாக உள்ளது. இந்தப் புதிய சிகிச்சை முறையை மேற்கொள்ள இந்தியாவில் மருத்துவத் துறையில் அங்கீகாரம் அளிக்கும் தலைமை அமைப்பான ஐ.சி.எம்.ஆர். இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ``வயது வரம்புக்கு அனுமதி கோரி இந்திய ரசாயன மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு விண்ணப்பித்திருக்கிறோம். ரத்த தானத்துக்கான விதிமுறைகளைத் தளர்த்துமாறு கோரியுள்ளோம்'' என்று SCTIMST இயக்குநர் டாக்டர் ஆஷா கிஷோர் தெரிவித்தார்.
கன்வலசன்ட்-பிளாஸ்மா தெரபி என்றால் என்ன?: புதிய கொரோனா வைரஸ் கிருமி போன்ற தாக்குதல் நடைபெறும்போது, நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அதை எதிர்ப்பதற்கான அணுக்களை உருவாக்குகிறது. காவல் நாய்களைப் போல இவை அதிகரித்துச் சென்று, ஊடுருவிய வைரஸை அடையாளம் காணும். நமது ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள் உடலுக்குள் ஊடுருவியுள்ள வைரஸ்களை அழிக்கும். உடலில் அந்தத் தொற்று நீங்கிவிடும்.
நோயில் இருந்து மீண்டவரிடம் இருந்து எடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு அணுக்கள், இரத்தம் செலுத்துவதைப் போன்ற முறையில், நோயாளியின் ரத்தத்தில் செலுத்தப்படும். இந்த நோய் எதிர்ப்பு அணுக்கள் வைரஸ் தாக்குதலுக்கு எதிராக தனது தாக்குதலை வீரியத்துடன் மேற்கொள்ளும்.
நோய் எதிர்ப்பு அணுக்கள் என்பவை என்ன?:ஒரு நுண்கிருமியால் நோய்த் தொற்று ஏற்படும்போது முன்களத்தில் நின்று செயல்படும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முன்வரிசை வீரர்களைப் போன்ற அணுக்கள் இவை. B லிம்போசைட்ஸ் என்ற நோய் எதிர்ப்பு செல்களால் சுரக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வகை புரதமாக இது இருக்கும். புதிய கொரோனா வைரஸ் போன்று, புதிதாக உடலுக்குள் ஊடுருவும் கிருமிகளை எதிர்த்து இவை தாக்குதல் நடத்தும். ஊருவல் செய்து வரும் ஒவ்வொரு கிருமியின் தன்மையையும் எதிர்கொள்ளத் தேவையான வகையில் எதிர்ப்பு அணுக்களை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும். இந்த எதிர்ப்பு அணுக்களும், அழிக்கப்பட வேண்டிய வைரஸில் இருக்கும் அணுக்களும் ஒரே மாதிரியானவையாக இருக்கும்.
சிகிச்சை எப்படி தரப்படுகிறது?: கோவிட்-19 நோய் பாதித்து, குணமானவரிடம் இருந்து ரத்தம் எடுக்கப்படும். அது பகுப்பாய்வு செய்து வைரஸை எதிர்க்கும் அணுக்கள் மட்டும் தனியே எடுக்கப்படும். கன்வலசன்ட் சீரம், அதாவது கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவரின் ரத்தத்தில் இருந்து பிரிக்கப்பட்ட இந்த அணுக்கள், கோவிட்-19 பாதித்த நோயாளிக்கு செலுத்தப்படும். நோயுற்றவர் மறைமுகமான நோய் எதிர்ப்பாற்றல் பெறுகிறார். ``ரத்த அணுக்கள் பிரிக்கப்படுவதற்கு முன்னதாக, ரத்தம் தருபவருக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்து, அதன் பிறகே நோயுற்றவருக்கு அது செலுத்தப்படும். முதலில், குணமடைந்தவரிடம் நோய்க்கான அறிகுறி முற்றிலும் இல்லை என்ற சோதனை முடிவு கிடைக்க வேண்டும். முழுமையாகக் குணமடைந்தவர் என அவர் சான்றளிக்கப் பட்டிருக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு வாரங்கள் அவர் காத்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 28 நாட்களுக்கு அவருக்கு கோவிட்-19க்கான எந்த விதமான மறுஅறிகுறியும் தோன்றாமல் இருக்க வேண்டும். இந்த இரண்டில் ஒரு நிபந்தனை கட்டாயமாக பூர்த்தியாகிட வேண்டும்'' என்று India Science Wire-க்கு அளித்த பேட்டியில் டாக்டர் கிஷோர் கூறியுள்ளார்.
இந்த சிகிச்சை யாருக்கு கிடைக்கும்?: ``ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு நாங்கள் இதை முயற்சிப்போம். இப்போதைக்கு பரிசோதனை சிகிச்சை முறையாக, தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைச் செலுத்துவதற்கான நபரைத் தேர்வு செய்த பிறகு,, தகவல்களை அறிந்துகொண்டு ஒப்புதல் அளிக்கும் படிவத்தில் அவர் கையெழுத்திட வேண்டும். இது மருத்துவ ஆய்வகப் பரிசோதனையாக நடத்தப்படும்'' என்று டாக்டர் கிஷோர் தெரிவித்துள்ளார். இதில் ஐந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கோவிட் மருத்துவ மையங்கள் பங்கேற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசியில் இருந்து இது எந்த வகையில் மாறுபட்டது?: இது மறைமுக தடுப்பூசி போன்றது. தடுப்பூசி போடும்போது, நோய் எதிர்ப்பு மண்டலம் நோய் எதிர்ப்பு அணுக்களை உருவாக்குகிறது. எனவே, தடுப்பூசி போடப்பட்ட நபரை குறிப்பிட்ட அதன்பிறகு அந்தக் கிருமி தாக்கினால், நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் எதிர்ப்பு அணுக்களை உற்பத்தி செய்து அனுப்பி, நோய்த் தொற்றை அழித்துவிடும். தடுப்பூசி ஆயுள் முழுக்க நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. மறைமுக நோய் எதிர்ப்பு அணு சிகிச்சை முறையில், ரத்தத்தில் செலுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு அணுக்கள் உயிருடன் இருக்கும் காலம் வரையில் மட்டுமே அது செயல்படும் நிலையில் இருக்கும். இதனால் கிடைக்கும் பாதுகாப்பு தற்காலிகமானது. ஒரு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி சுயமாக உருவாவதற்கு முன்பு வரையில், குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை தாய் தன்னுடைய தாய்ப்பாலின் மூலம் புகட்டுவதைப் போன்றது இது.
வரலாறு: 1890ஆம் ஆண்டில் ஜெர்மன் டாக்டர் எமில் வோன் பெஹ்ரிங் என்பவர், தொண்டை அடைப்பான் பாதிப்புக்கு உள்ளான முயலின் ரத்தத்தில் இருந்து எடுத்த ரத்தத்தைப் பிரித்து இவ்வாறு அணுக்களை எடுத்து, மனிதர்களில் ஏற்பட்ட தொண்டை அடைப்பான் நோய்க்கான சிகிச்சைக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளார். மருத்துவத்துக்கான முதலாவது நோபல் பரிசு 1901இல் அவருக்குத் தான் வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் நோய் எதிர்ப்பு அணுக்கள் பற்றி எதுவும் தெரியாது. கன்வலசன்ட் சீரம் சிகிச்சை என்பது குறைந்த செயல் திறன் கொண்டதாக, கணிசமான பக்க விளைவுகள் கொண்டதாக இருந்தது. நோய் எதிர்ப்பு அணுக்களின் நுட்பமான பகுதியைப் பிரிப்பதற்கு மேலும் பல ஆண்டுகள் தேவைப்பட்டது. அப்போதும் கூட, நமக்கு தேவைப்படாத எதிர்ப்பு அணுக்கள் மற்றும் அசுத்தக் காரணிகளால் பக்க விளைவுகள் ஏற்பட்டன.
இது செயல்திறன் மிக்கதா?: பாக்டீரியா தொற்றுக்கு எதிராக நம்மிடம் செயல்திறன்மிக்க நோய் எதிர்ப்பு அணுக்கள் உள்ளன. இருந்தாலும் வைரஸ்களுக்கு எதிரான அணுக்கள் இல்லை. புதிய வைரஸ் நோய்த் தாக்குதல் ஏற்படும் போதெல்லாம், அதற்கு சிகிச்சை தருவதற்கான மருந்துகள் நம்மிடம் இருப்பதில்லை. எனவே, வைரஸ் காரணமான நோய்த் தொற்று தாக்கும்போது கன்வலசன்ட் சீரம் தான் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. 2009-2010 H1N1 பறவைக்காய்ச்சல் பரவியபோது, நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலையில் இது பயன்படுத்தப்பட்டது. மறைமுக நோய் எதிர்ப்பு அணு சிகிச்சைக்குப் பிறகு, சீரம் மூலம் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. வைரஸ் அளவு குறைந்தது, மரணங்களின் எண்ணிக்கை குறைந்தது. இதே நடைமுறை 2018இல் எபோலா நோய்த் தாக்குதல் பரவியபோதும் பின்பற்றப்பட்டது.
இது பாதுகாப்பானதா?: ரத்தத்தில் கிருமிகள் உள்ளதா என்பதை பரிசோதிப்பதற்கான நவீன ரத்த வங்கி நுட்பங்கள் அதிகரித்துவிட்டன. ரத்தம் தருபவர் மற்றும் பெறுபவரின் ரத்த வகைகளைப் பொருத்திப் பார்ப்பதில் சிரமம் ஏதும் கிடையாது. எனவே நோய்த் தொற்று ஏற்படுத்தும் அணுக்களை செலுத்துதல் அல்லது ரத்தம் செலுத்துதல் தொடர்பான எதிர்வினைகளை ஏற்படுத்துதலுக்கான வாய்ப்புகள் குறைவு. ``ரத்த தானத்தின் போது நாம் செய்வதைப் போல, ரத்த வகை மற்றும் ஆர்.எச். பொருந்தி வருகிறதா என்று பார்க்கப்படுகிறது. ரத்த வகை பொருந்தி வந்தால் மட்டுமே, ரத்த தானமும், பெறுதலும் சாத்தியமாகும். தானம் செய்பவருக்கு கடுமையான பரிசோதனைகள் செய்து, கட்டாயமான காரணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அதன் பிறகே அவர் ரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படுவார். மஞ்சள் காமாலை, எச்.ஐ.வி. மலேரியா உள்ளிட்ட பல பரிசோதனைகள் அவருக்கு நடைபெறும். இதுபோன்ற எதுவும், ரத்தம் பெறுபவருக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தப் பரிசோதனைகள் செய்யப்படும்'' என்று SCTIMST இயக்குநர் டாக்டர் ஆஷா கிஷோர் விளக்கினார்.
இதைப் பெறுபவரின் உடலில் எவ்வளவு காலத்துக்கு எதிர்ப்பு அணுக்கள் இருக்கும்?: நோய் எதிர்ப்பு அணு செலுத்தப்பட்டதும், குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு அவருடைய உடலில் அது இருக்கும். இந்த காலக்கட்டத்தில் அவர் உடல் நலம் பெற்றுவிடுவார். இது பயனுள்ளதாக இருந்தால் முதல் மூன்று அல்லது நான்கு நாட்களில் தெரிந்துவிடும் என்றும், அதற்கு மேல் தேவைப்படாது என்றும் அமெரிக்கா மற்றும் சீனாவில் இருந்து கிடைக்கும் ஆராய்ச்சி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சவால்கள்: இதற்கான நோய் எதிர்ப்பு அணுக்களைப் பெறுவது எளிதானது அல்ல. நோயில் இருந்து மீண்டவர்களின் உடலில் இருந்து கணிசமான அளவுக்கு ரத்தம் எடுப்பது சிரமம். கோவிட்-19 போன்ற நோய்கள் பாதித்தவர்கள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் என்பதால் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற மற்ற கோளாறுகள் உள்ளவர்களாக இருப்பார்கள். குணமடைந்த எல்லா நோயாளிகளும் ரத்தம் தானம் செய்ய முன்வர மாட்டார்கள் என்பதும் இதற்குக் காரணம்.
.
*****
(Release ID: 1613324)
Visitor Counter : 2630