அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் திட்டங்களை அளிக்குமாறு டி.டி.பி. விடுத்த அழைப்புக்கு இந்திய தொழில் துறையினர் உற்சாக ஆதரவு

Posted On: 11 APR 2020 12:19PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தாக்குதலை சமாளிப்பதற்கு தொழில்நுட்ப ரீதியில் புதுமை சிந்தனை அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்குமாறு இந்தியத் தொழில் நிறுவனங்களுக்கு, அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சட்டபூர்வ அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (Technology Development Board - TDB)  அழைப்பு விடுத்திருந்தது. அதற்கு இந்திய தொழில் துறையினரும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் உற்சாகமான ஆதரவைத் தெரிவித்துள்ளன.

உள்நாட்டுத் தொழில்நுட்ப அடிப்படையில் வர்த்தக ரீதியிலான உற்பத்திக்கு அல்லது வெளிநாட்டில் இருந்து பெற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இந்திய நிறுவனங்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் அளிக்கிறது. கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் பலத்தை அதிகரிக்க கை கொடுக்க வேண்டும் என்று இந்த அமைப்பு கடந்த மார்ச் 20 ஆம் தேதி அழைப்பு விடுத்திருந்தது.

இதற்குப் பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் ஒரு வாரத்தில், 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய முனையத்தில் பதிவு செய்து கொண்டன. மேலும், இதுவரையில் 140 நிறுவனங்கள் தங்களுடைய திட்டங்களை சமர்ப்பித்துள்ளன. பல துறைகளில், பலவித சிந்தனைகளைக் கொண்ட புதுமை சிந்தனைகளின் அடிப்படையிலான தீர்வுகளை அளிக்கும் ஸ்டார்ட்அப் முயற்சிகள் இதில் அதிகமாக இடம் பெற்றுள்ளன.

நோயறியும் பரிசோதனை உபகரணத் தொகுப்புகளுக்கும் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  Real-Time Reverse Transcriptase PCR (RT- PCR) தொழில்நுட்பம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் தீவிர பரிசோதனை விஷயங்களை உள்ளடக்கியதாக அவை உள்ளன.  குறிப்பிட்ட விஷயத்தை அறிவதற்கு, காகித அடிப்படையிலான ஆன்-சிப் தொகுப்புகள் முதல், மீநுண் திரவக் களம் வரையிலான யோசனைகள் அதில் இடம் பெற்றுள்ளன.

உயிரி-தொழில்நுட்ப துறையில், தடுப்பூசி மருந்து உருவாக்குதல், குறிப்பான்களின் அடிப்படையில் நோயின் தீவிரத்தைக் கண்டறியும் சிகிச்சை சாதனம் உருவாக்குதல் பற்றி சில யோசனைகள் முன்வைக்கப் பட்டுள்ளன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இயற்கை வளங்களில் இருந்து பெறப்படும் பொருள்கள் பற்றிய யோசனைகளும் இதில் உள்ளன.

முகக்கவச உறைகளின் புதுமையான வடிவமைப்பு, புதிய பொருள்களைக் கொண்டு தயாரித்தல், உற்பத்தி நுட்பங்களில் மாற்றம் ஆகியவற்றின் மூலம் குறைந்த செலவில் பெருமளவில் அவற்றைத் தயாரிப்பதற்கான யோசனைகளும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.  பின்னலாடை நுட்பத்தில் செய்த முகக்கவச உறை உள்ளிட்ட, குறைந்த செலவிலான சாதாரண முகக்கவச உறை தயாரிப்பதற்கான யோசனைகள் அதிகமாக உள்ளன. மேலும், வைரஸ் எதிர்ப்பு மருந்துடன் கூடிய 3டி பிரிண்ட் செய்த முகக்கவச உறை, மீநுண் பைபர் பூச்சுடன் கூடிய N-95 முகக்கவச உறை, போவிடோன் அயோடின் மெல்லிய படலப் பூச்சு கொண்ட முகக்கவச உறை ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தலாம் என்றும் யோசனைகள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

பரந்த பகுதியில் கிருமிநீக்கம் செய்து, கழிவுநீக்கம் செய்வதற்கான திட்டங்களில், கைகளால் கிருமிநாசினி பயன்படுத்துவது முதல்,  கிருமித்தொற்றைத் தடுக்கும் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரோபோ மூலம் தானியங்கி முறையில் செய்வது வரையிலான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கிருமிநீக்கத்தில் சில்வர் நேனோ துகள்களின் குணாதிசயங்கள் குறித்து பல நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளன. கிருமிநீக்க சிறிய அறையில் புறஊதாக் கதிர்களின் கிருமிகளை கொல்லும் தன்மை பற்றியும் சிலர் ஆய்வு செய்கின்றனர். தைமோல் மற்றும் திரவ ஓசோன் அடிப்படையிலான கிருமிநீக்க தொழில்நுட்பங்கள் குறித்தும், நிலை மின் தெளிப்பான் போன்ற புதுமையான மருந்து தெளிப்பு சாதனங்கள் பற்றியும் சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



(Release ID: 1613293) Visitor Counter : 322