பாதுகாப்பு அமைச்சகம்

மருத்துவப் பரிசோதனை செய்தல், தனிமை அறையில் தனிமை சிகிச்சைக்கு உதவும் வகையில், இரண்டு படுக்கைகள் கொண்ட கூடாரங்களை ராணுவத் தளவாடத் தொழிற்சாலை வாரியம் (Ordnance Factory Board - OFB) உருவாக்கியுள்ளது

Posted On: 11 APR 2020 9:28AM by PIB Chennai

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ராணுவத் தளவாடத் தொழிற்சாலை வாரியம் (OFB) முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த நோய்த் தாக்குதலுக்கு எதிராக கடந்த வாரத்தில் இந்த நிறுவனம் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகள்:

இரண்டு படுக்கை வசதிக் கூடாரங்கள்

தனிமைப்படுத்தல் வார்டுகளுக்கு, குறைந்த செலவிலான ஒரு தீர்வை ராணுவத் தளவாடத் தொழிற்சாலை வாரியம் உருவாக்கியுள்ளது. இரண்டு படுக்கை வசதிகள் கொண்ட, மருத்துவப்பரிசோதனை, தனிமைப்பகுதி மற்றும் தனிமை சிகிச்சை ஏற்பாடுகளுடன் கூடிய ஒரு கூடாரத்தை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. மருத்துவ அவசரத்தேவை, மருத்துவப்பரிசோதனை, மருத்துவமனையில் பிரித்து வைத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் இந்த விசேஷக் கூடாரங்கள் அமைந்துள்ளன. இதற்குள் 9.55 சதுரமீட்டர் அளவுக்கு உபயோகத்துக்கான இடவசதி இருக்கும். தண்ணீர் புகாத வகையில் சிறிது ஸ்டீல் மற்றும் அலுமினியக் கலவை கொண்டு இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கூடாரங்களை எந்த மாதிரியான நிலப்பரப்பிலும், எந்த இடத்திலும் அமைக்க முடியும். வழக்கமான மருத்துவமனைகளில் இருப்பதைவிட புதிய வசதிகளையும் உருவாக்கும் வகையில், குறுகிய கால அவகாசத்தில் இந்தக் கூடாரங்களை அமைத்துவிட முடியும். கான்பூரில் உள்ள ராணுவ சாதனத் தொழிற்சாலையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 50 கூடாரங்கள் அருணாச்சலப் பிரதேச அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

கை கிருமிநாசினி மற்றும் முகக் கவச உறைகள்

ராணுவத் தளவாடத் தொழிற்சாலை வாரியத்தின் ஒரு பிரிவாக டேராடூனில் செயல்படும் ஆப்டோ மின்னணுத் தொழிற்சாலை தலா 100 மில்லி அளவு கொண்ட 2,500 கிருமிநாசினி குப்பிகளையும், ஆயிரம் முகக்கவச உறைகளையும், 2020 ஏப்ரல் 6 ஆம் தேதி உத்தரகாண்ட் மாநில ஆளுநரிடம் வழங்கியது.

ராணுவத் தளவாடத் தொழிற்சாலை வாரியத்தின் பிரிவான அரவன்காடு கார்டைட் தொழிற்சாலை 100 லிட்டர் கிருமிநாசினியை, தமிழகத்தில் நீலகிரி மாவட்டக் காவல் துறையினருக்கு 2020 ஏப்ரல் 08 ஆம் தேதி வழங்கியது.

புனேவில் உள்ள HEF நிறுவனம் முதல்கட்டமாக 2,500 லிட்டர் கிருமிநாசினியை 2020 ஏப்ரல் 9 ஆம் தேதி பெல்காவியில் உள்ள HLL-க்கு வழங்கியது.

புகை பரவச் செய்யும் சாதனம்

நாக்பூர் அம்பஜ்ஹாரியில் உள்ள ராணுவத் தளவாடத் தொழிற்சாலை, கிருமிநாசினி நீக்கத்துக்காக புகை பரவச் செய்யும் சாதனத்தை உருவாக்கியுள்ளது. அதை எளிதில் எடுத்துச் செல்ல முடியும். எளிதில் வேறு இடத்துக்கு மாற்றவும் முடியும். அம்பஜ்ஹாரி மருத்துவமனை நுழைவாயிலில் இது நிர்மாணிக்கப் பட்டுள்ளது.

கை கழுவும் முறைமை

டேராடூனில் உள்ள ராணுவத்தளவாட தொழிற்சாலை, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, காலால் அமுக்குவதன் மூலம் செயல்படுத்தப்படும் கை கழுவ உதவும் சாதனத்தை உருவாக்கியுள்ளது. தானாகவே சோப்பு வழங்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சாதனம் 2020 ஏப்ரல் 7 ஆம் தேதி காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது.

புனே டேகு சாலையில் உள்ள ராணுவத் தளவாட தொழிற்சாலை, டேகுகான் கிராமத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு 2020 ஏப்ரல் 6 ஆம் தேதி உணவுப் பொருள்களை வழங்கியது.



(Release ID: 1613275) Visitor Counter : 253