வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொழில், வர்த்தக சங்கத்தினருடன் தொழில், வர்த்தக அமைச்சர் ஆலோசனை; அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக உத்தரவாதம்

Posted On: 09 APR 2020 6:02PM by PIB Chennai

தொழில் வர்த்தக அமைச்சகம் இன்று நாட்டில் உள்ள பல்வேறு தொழில் வர்த்தக சங்கத்தினருடன் காணொளிக் காட்சி மூலமான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. கோவிட்-19 பாதிப்பு மற்றும் முடக்கநிலை அமல் சூழ்நிலையில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி அறியவும், கள நிலவரத்தை அறியவும் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழில் வர்த்தகம் மற்றும்  ரயில்வே அமைச்சர் திரு. பியூஷ் கோயல், இணை அமைச்சர் திரு. சோம் பிரகாஷ் மற்றும் தொழில் வர்த்தகத் துறை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ரொக்கக் கையிருப்புப் பற்றாக்குறை, ஆர்டர்கள் ரத்து, தொழிலாளர் பற்றாக்குறை, மத்திய அரசு உத்தரவுகளை மாநில, மாவட்ட அதிகாரிகள் வெவ்வேறு மாதிரியாக அர்த்தப்படுத்திக் கொள்ளுதல், இடைவழியில் நிற்கும் லாரிகள், உதிரி பாகங்கள் வாங்குவதில் உள்ள சிக்கல்கள் பற்றி தொழில் துறை சங்கத்தினர் கூறினர். அதேசமயத்தில், கடந்த 15 நாட்களில் நிலைமை மேம்பட்டிருப்பதாகவும், தகவல் தொழில்நுட்பத் துறை 95 சதவீத அளவுக்கு மீட்சி பெற்றுவிடும் அளவுக்கு நிலைமை முன்னேறியுள்ளதாகவும் அவர்கள் கூறினர். தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர் மேற்கொண்டுள்ள பெரு நிறுவன சமூகக் கடமை செயல்பாடுகள், சிறந்த நடைமுறைகள், சமுதாய சமையல் போன்ற விஷயங்கள் பற்றிய தகவல்களைத் தெரிவித்தனர்.

அப்போது பேசிய திரு. பியூஷ் கோயல், பொருளாதாரம் மற்றும் வாழ்வியலின் மீதான அழுத்தத்தை நீக்கிப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நாட்டு மக்களின் உயிர் தான் முதல் முன்னுரிமை பெற வேண்டும் என்றார் அவர். தங்கள் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய தொழிலாளர்களின் ஆரோக்கிய பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், உற்பத்தி மற்றும் செயல் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கி, அளவீட்டுடன் கூடிய, சூழ்நிலைக்குப் பொருத்தமான அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும் என்று திரு. கோயல் கேட்டுக்கொண்டார்.

பொருள்கள் சேமிப்பு மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து அமைச்சகம் ஏற்கெனவே திட்டங்கள் வகுத்து வருவதாக அவர் தெரிவித்தார். தொழில் வர்த்தகத் துறையினரின் இதர பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு அமைச்சகங்களுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொழில் துறையை மீட்பதற்கான தொகுப்புத் திட்டத்தை சீக்கிரம் அறிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுபற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், இந்தக் கருத்துகள் நிதி அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். அந்த அமைச்சகம் சமநிலையிலான நுட்பமான அணுகுமுறைகளின்படி முடிவுகள் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



(Release ID: 1612682) Visitor Counter : 183