குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஊரடங்குக்குப் பிந்தைய பொருளாதார நிலையைக் காட்டிலும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அவசியம் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

ஊரடங்கை நீட்டிப்பதா என்ற முடிவை எடுப்பதில் ஊரடங்கின் மூன்றாவது வாரம் முக்கியமானது- குடியரசு துணைத்தலைவர்

சிரமங்கள் தொடர்ந்தாலும், தலைமையின் முடிவுக்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர்

Posted On: 07 APR 2020 12:04PM by PIB Chennai
கொரோனோ வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று வார கால ஊரடங்கு ஏப்ரல் 14-ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், அதற்குப் பிந்தைய நிலை என்ன என்பது குறித்து நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் விவாதித்து வரும் நிலையில், பொருளாதார ஸ்திரத்தன்மையை விட, மக்களின் சுகாதாரம் பற்றிய கவலைகளுக்கு முக்கியத்துவம் அதிகம் என குடியரசு துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஊரடங்கின் இருவார காலம் இன்று நிறைவடைந்த நிலையில், அதன் அடுத்த நகர்வு குறித்து மதிப்பிட்டுள்ள திரு.நாயுடு, மார்ச் 25-ஆம்தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருமா என்பதை நிர்ணயிக்க, வரும் வாரம் முக்கியமானதாகும் என்று கூறியுள்ளார். தொற்று பரவும் வேகம், அது தொடர்பான தற்போதைய தரவுகள் ஆகியவை ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் இடையே, ஊரடங்கு பற்றிய உத்தி தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள திரு.நாயுடு, ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பின்னர், எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், தற்போது சிரமங்களுக்கு இடையே, காட்டி வரும் அதே உணர்வுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அரசுகள் சுமுகமான விநியோகச் சங்கிலியை உறுதி செய்யும் என்றும், போதிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். மார்ச் 22-ந்தேதி நடைபெற்ற மக்கள் ஊரடங்கு, மார்ச் 25 முதல் நடைபெற்று வரும் நாடு தழுவிய ஊரடங்கு, ஏப்ரல் 5-ந்தேதி விளக்கேற்றும் நிகழ்வில் பங்கேற்பு ஆகியவற்றில், மக்கள் பேராதரவை வழங்கியிருப்பதை நினைவு கூர்ந்துள்ள குடியரசு துணைத்தலைவர், இந்திய சமுதாயப் பண்பின் அடிப்படைக் கூறான ஆன்மீகத்தின் வெளிப்பாடு இது என்று கூறியுள்ளார். இதுபற்றி விளக்கியுள்ள திரு. நாயுடு, ஆன்மீகப் பாதுகாப்பு என்பது சுயநலச்சார்பை ஒழித்து, அனைத்திலும் நன்மையையே காண்பதாகும் என்று கூறியுள்ளார். இந்த உயரிய பண்பை நாட்டு மக்கள் இந்தச் சிக்கலான காலகட்டத்தில் பெருமளவுக்கு வெளிப்படுத்தி உள்ளனர் என்றும், இந்த உணர்வு சவால்களை வெற்றி கொள்ள பேருதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனோ பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் பலனளிக்கும் நேரத்தில், தேசிய தலைநகரில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாடு, அதன் பின்விளைவுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள திரு. நாயுடு, இது தவிர்த்திருக்கக்கூடிய பிறழ்வு என்றும், இது கண்களைத் திறந்துள்ளது என்றும் கூறியுள்ளார். தற்போதைய நெருக்கடியான சூழலில், நிறுவனங்கள், உள்கட்டமைப்பு, தகவல் பரிமாற்றம், சர்வதேச ஒத்துழைப்பு, தனிநபர் நடவடிக்கைகள் போன்ற விஷயங்களில் காணப்படும் போதாமைகளைச் சமாளிக்க, அடுத்து உடனடியாக எதிர்கொள்ள வேண்டியவை பற்றி உலக சமுதாயம் சரியான பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

(Release ID: 1611947) Visitor Counter : 217