சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 சமீபத்திய தகவல்கள் பி.பி.இ. சப்ளைக்கு வெளியில் கொடுத்த ஆர்டர்களின்படி கவச உடைகள் இந்தியா வரத் தொடங்கின

Posted On: 06 APR 2020 6:08PM by PIB Chennai

சீனாவால் இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 1.70 லட்சம் முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் (PPE) இன்று இந்தியாவுக்கு வரத் தொடங்கிவிட்டன. உள்நாட்டில் இருக்கும் 20,000 உடைகளுடன் சேர்த்து, மொத்தம் 1.90 லட்சம் உடைகள் இந்திய மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். இப்போதைய நிலையில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் 3,87,473  உடைகளுடன் இது கூடுதலானவைகளாக இருக்கும். மொத்தம் 2.94 லட்சம் முழு உடல் பாதுகாப்பு கவச உடைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்து, மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது.

இத்துடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 லட்சம் எண்ணிக்கையிலான N95 முகக்கவச உறைகள் (மாஸ்க்குகள்) பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதையும் சேர்த்தால், இந்திய அரசு இதுவரையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட N-95 மாஸ்க்குகளை வழங்கியுள்ளது. நாட்டில் இப்போது 16 லட்சம் N-95 மாஸ்க்குகள் உள்ளன. புதிதாக 2 லட்சம் மாஸ்க்குகள் வரும் நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

புதிதாக வரக் கூடிய இதுபோன்ற பாதுகாப்பு உடை, முகக்கவச உறைகள், அதிக எண்ணிக்கையில் கொவிட் 19 நோயாளிகள் உள்ள தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. எய்ம்ஸ், சப்தர்ஜங் மற்றும் ஆர்.எம்.எல். போன்ற மத்திய மருத்துவ நிலையங்களுக்கும் ரிம்ஸ், NEIGRIHMS, BHU மற்றும் AMU கல்வி நிலையங்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்படுகின்றன.

கொவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகளைப் பெறும் நம்முடைய முயற்சியில், வெளிநாட்டு வரத்து என்பது புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. முன்னர் சிங்கப்பூரில் இருந்து 80 லட்சம் பி.பி.இ. உபகரணங்கள் (N-95 உள்பட) வாங்குவதற்கு ஆர்டர் தரப்பட்டிருந்தது. அவை ஏப்ரல் 11 ஆம் தேதியில் இருந்து வரத் தொடங்கும் என தகவல் வந்துள்ளது. முதலில் 2 லட்சம் எண்ணிக்கையிலும், அடுத்த ஒரு வாரத்தில் 8 லட்சமும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 60 லட்சம் பி.பி.இ. உபகரணங்களை சீனாவில் இருந்து பெறுவதற்கு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.  அதில் N-95 மாஸ்க்குகளும் இருக்கும். N-95 மாஸ்க்குகள் மற்றும் கண்களுக்கு கவசமான கண்ணாடிகளுக்கு மட்டும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் தனியாக ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன.

உள்நாட்டுத் திறன்களுடன்  வலு சேர்க்கும் வகையில், வடக்கு ரயில்வே நிர்வாகம் ஒரு பி.பி.இ. உபகரணத் தொகுப்பை உருவாக்கியுள்ளது.முன்னர் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) மூலம் தயாரிக்கப்பட்ட பி.பி.சி. உபகரணத் தொகுப்பு மற்றும் N-99 மாஸ்க்குகள் தவிர, வடக்கு ரயில்வே புதிதாக உருவாக்கியுள்ளது.

இவற்றை பெருமளவில் தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போது N-95 மாஸ்க் தயாரிப்பில் உள்ள நிறுவனங்கள், உற்பத்தித் திறனை தினமும் 80 ஆயிரம் என்ற அளவில் உயர்த்தியுள்ளன.

112.76 லட்சம் N-95 மாஸ்க்குகள், 157.32 லட்சம் பி.பி.சி. உபகரணத் தொகுப்புகளுக்கு தனியாகவும் ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் 80 லட்சம் பி.பி.இ. தொகுப்புகளில் N-95 மாஸ்க்குகளும் இருக்கும். வாரத்திற்கு 10 லட்சம் பி.பி.இ. தொகுப்புகள் வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இப்போதைய நிலையில் நம்மிடம் போதிய அளவிலான உபகரணங்கள் கையிருப்பு உள்ளன. இந்த வாரத்தில் மேலும் சில பொருட்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


(Release ID: 1611891)