பிரதமர் அலுவலகம்

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆலோசனை

கொவிட் 19-க்கு எதிரான போரில் விழிப்பு, உறுதி, ஊக்குவிப்புடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் பிரதமர்
மாநில, மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்ந்து அமைச்சர்கள் தொடர்பில் இருந்து, புதிதாக உருவாகும் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்க வேண்டும்; மாவட்ட அளவில் சிறு திட்டங்களை உருவாக்க வேண்டும்: பிரதமர்

ஏழைகள் நலத் திட்டத்தின் பலன்கள் உரிய பயனாளிகளுக்கு தடையில்லாமல் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் தொடர்புடைய அமைச்சர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
ஆரோக்கிய சேது செயலியை கிராமப்புறங்கள் மற்றும் அடிமட்ட அமைப்பில் பிரபலப்படுத்துமாறு அமைச்சர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

விவசாயிகளை மண்டிகளுடன் இணைப்பதற்கு செயலி அடிப்படையிலான வாடகை வாகன சேவைகள் போன்று, “டிரக் அக்ரிகேட்டர்ஸ்” போன்ற புத்தாக்க தீர்வுகளை பயன்படுத்துவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்: பிரதமர்

ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளி விதிகள் ஒரே நேரத்தில் பின்பற்றப்பட வேண்டும்; ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் கவனம் செலுத்த வேண்டிய 10 முக்கிய முடிவுகள் மற்றும் 10 முதன்மையான பகுதிகளை ஒவ்வொரு அமைச்சகமும் க

Posted On: 06 APR 2020 3:36PM by PIB Chennai

மத்திய அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

அமைச்சர்களின் தலைமைப்பண்புக்கு பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். அமைச்சர்கள் தொடர்ந்து அளித்துவரும் கருத்துக்கள், கோவிட்-19-ஐ எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுப்பதற்கு பயனுள்ளதாக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு, குறிப்பாக, வைரஸ் தொற்று தீவிரமாக உள்ள மாவட்டங்களில் உண்மை நிலையை தலைவர்கள் எடுத்துரைப்பதுடன், பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் அளிக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் கூறினார். நியாயவிலைக் கடைகளில் மக்கள் கூடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும், சிறப்பான கண்காணிப்பை உறுதிப்படுத்துவதும், புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, கள்ளச்சந்தை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைத் தடுப்பதும் முக்கியம் என்று திரு.நரேந்திர மோடி கூறினார்.

விவசாயிகளின் நலனே அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் கூறினார். அறுவடை காலத்தில் விவசாயிகளுக்கு அனைத்து விதமான உதவிகளையும் அரசு வழங்கும் என்று அவர் உறுதி அளித்தார். இந்த விவகாரத்தில், செயலி அடிப்படையிலான வாடகை கார் சேவையைப் போன்று, மண்டிகளுடன் விவசாயிகளை இணைப்பதற்கு “டிரக் அக்ரிகேட்டர்ஸ்” போன்ற புதிய தீர்வுகளைக் கண்டறிய ஊக்குவிப்பதுடன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். பழங்குடியின மக்கள் தயாரிக்கும் பொருட்களை கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்துவதற்கான உத்திகளை வகுக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இதன்மூலம், பழங்குடியின மக்களின் வருவாய் ஆதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

பிரதமரின் ஏழைகள் நலத் திட்டத்தின் பலன்கள், உரிய பயனாளிகளுக்கு தடையில்லாமல் சென்று சேர்வதை உறுதிப்படுத்துவதும், தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். வைரஸ் மேலும் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதை கணக்கில் கொண்டு, திட்டங்களை வகுக்க வேண்டும் என்று அவர் கூறினார். அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பாதுகாப்புக் கருவிகள் உரிய நேரத்தில் தயாரிப்பதற்கு, தொடர் கண்காணிப்பு இருக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதையும், விநியோக முறை தொடர்வதையும்  உறுதிப்படுத்த கீழ்மட்ட அளவில் திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் கூறினார்.

ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளி ஆகியவை ஒரே நேரத்தில் பின்பற்றப்பட்ட வேண்டும் என்று பிரதமர் கூறினார். ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்ததும், ஏற்படும் சூழலை எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்ததும், கவனம் செலுத்த வேண்டிய 10 பிரிவுகள் மற்றும் 10 முக்கிய முடிவுகள் குறித்த பட்டியலை அமைச்சர்கள் தயாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதேநேரத்தில், தங்களது அமைச்சகங்களில் நிலுவையில் உள்ள சீர்திருத்தங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தற்போது உருவாகியுள்ள சவால்கள் காரணமாக, மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், அனைத்து துறைகளும் தங்களது பணிகள் இந்தியாவில் தயாரிப்பதை எவ்வாறு ஊக்குவிக்கும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 வைரஸ் தொற்றால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசிய பிரதமர், பாதிப்புகளைக் குறைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட வேண்டியது அவசியம் என்று கேட்டுக் கொண்டார். வர்த்தகம் தொடர்ந்து நடைபெறுவதற்கான திட்டத்தை அமைச்சகங்கள் தயாரிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். தற்போதைய நிலையில், வைரஸ் தொற்று வேகமாக இல்லாத பகுதிகளில் துறைகளின் பணிகளை மெதுவாக தொடங்குவதற்கு, படிப்படியான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் அவர், தற்போதைய நெருக்கடி, மருத்துவத் துறையில் சுயசார்புடன் செயல்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். இந்தியாவின் ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறிப்பிட்ட பிரதமர், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கு உகந்த ஆலோசனைகளை வழங்குமாறு அமைச்சகங்களை கேட்டுக் கொண்டார். இந்தியாவின் ஏற்றுமதி வளையத்தில் புதிய நாடுகள் மற்றும் துறைகள் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். நோய்த் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தகவல்களை பரப்பவும், அடிமட்ட நிலையில் உள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் ஆரோக்கிய சேது செயலியை பிரபலப்படுத்துமாறு அமைச்சர்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

ஒன்பது மணி 9 நிமிடங்கள் முயற்சிக்கு அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர். நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள மக்கள் இதில் பங்கெடுத்துக் கொண்டதாகவும், வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றுசேர செய்துள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர். இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் சவால்களை சமாளிப்பதற்கான முயற்சிகள், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை பராமரிப்பது, கீழ்நிலை ஊழியர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள், அதனை குறைப்பதற்கான முயற்சிகள் ஆகியவை குறித்து பிரதமரிடம் அமைச்சர்கள் எடுத்துரைத்தனர்.

தற்போது எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.

கலந்துரையாடலில் மத்திய அமைச்சர்கள், முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர் மற்றும் மத்திய அரசின் மற்ற மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

*****


(Release ID: 1611875)